Advertisement

பொறுமை... நம்பிக்கை!

ஜூலை 19 - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் ஆரம்பம்

ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வின் தாரக மந்திரமாக கொள்ள வேண்டியது, பொறுமை மற்றும் நம்பிக்கை! இந்த இரண்டையும் கடைப்பிடித்தால், வாழ்வில் வெற்றி உறுதி என, நமக்கு அறிவுறுத்தியவள், ஆண்டாள்.
கலியுகம் பிறந்த சமயம், லட்சுமி தாயாரிடம், 'தேவி... கலியுகம் பிறந்து விட்டது; நாம் பூலோகம் சென்றால் தான், நிலைமையை சரிப்படுத்த முடியும். நீயும் என்னோடு வா...' என்றார், திருமால்.
'சுவாமி... தங்களுடன் சீதையாகவும், ருக்மணியாகவும் வந்து பட்ட பாடு போதும்; மீண்டும் என்னை சோதிக்காதீர்கள்...' என, பணிவோடு மறுத்து விட்டாள், லட்சுமி தாயார். அதனால், தன் இன்னொரு மனைவியான பூமாதேவியைப் பார்த்தார், திருமால். 'நான் வருகிறேன் சுவாமி...' என்றாள், பூமாதேவி.
'தேவி... பூலோகத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் ஊரில், எனக்கு சேவை செய்து வரும் பெரியாழ்வார் எனும் அடியவரின் மகளாக வளர்ந்து வா... தக்க நேரத்தில் உன்னை ஆட்கொள்வேன்...' என்றார் திருமால். அதனால், ஐந்து வயது குழந்தையாக துளசி வனத்தில் அனாதையாக நின்றாள், பூமித்தாயார்.
அவளைப் பார்த்த பெரியாழ்வார், 'இக்குழந்தையை யாரோ அனாதையாக விட்டுச் சென்று விட்டனர் போலும்...' என நினைத்து, அவளை, தன் மகளாக ஏற்றார். அன்று, ஆடிப்பூரம் நட்சத்திரம்; தன் மகளுக்கு, 'கோதை' என பெயரிட்டார். இதற்கு, 'நல்வாக்கு அருள்பவள்' எனப் பொருள்.
பெருமாள் மீது கோதைக்கு இருந்த அதீத பக்தியே, நாளடைவில் காதலாக மாறிற்று. அதனால், 'மனிதர்களை திருமணம் செய்ய மாட்டேன்; பெருமாளே தன் கணவர்...' என, உறுதி எடுத்து, நம்பிக்கையுடன், அவர் மீது அன்பு செலுத்தினாள்.
தினமும், வனத்திலிருந்து துளசியை பறித்து, மாலையாக தொடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் கொண்டுள்ள, வடபத்ரசாயி பெருமானுக்கு சூட்டும் கைங்கரியத்தை செய்து வந்தார், பெரியாழ்வார். அவ்வாறு அவர் மாலையாக தொடுத்து வைத்திருப்பதை, தன் கழுத்தில் அணிந்து அழகு பார்த்த பின், அதை, பூக்கூடையில் வைத்து விடுவாள், ஆண்டாள்.
ஒருநாள், அவளது தலைமுடி மாலையில் ஒட்டிக் கொள்ள, அதை கவனிக்காமல், எடுத்துச் சென்றார், பெரியாழ்வார். சுவாமிக்கு அணிவிக்கும் போது, முடி இருப்பதை அறிந்து, பதறி, புதுமாலை கட்டி அணிவித்தார்.
இப்படியே சில நாட்கள் தொடரவே, இது எப்படி நடக்கிறது என சோதிக்க, மறைந்திருந்து பார்த்தார். கோதை, பெருமாளுக்கு வைத்திருந்த மாலையை எடுத்து, தன் கழுத்தில் அணிந்து கழற்றுவதைப் பார்த்து, அவளைக் கடிந்து கொண்டார். பின், புதுமாலை கட்டி, பெருமாளுக்கு அணிவிக்க சென்றார்.
அதை ஏற்காத பெருமாள், 'என் பக்தை அணிந்த மாலையே எனக்கு வேண்டும்...' என, அசரீரியாக கூறியதுடன், 'அவளையே தன் மனைவியாக ஏற்பேன்...' என்றார். பின், பொறுமையின் சின்னமான பூமாதேவியை மணந்தார்.
பொறுமையும், நம்பிக்கையும் வாழ்க்கை லட்சியங்களை மட்டுமல்ல; கடவுளையே அடைய உதவும் என்பது, ஆண்டாளின் வாழ்க்கை, நமக்கு கற்றுத்தரும் பாடம்!

தி.செல்லப்பா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement