Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவிற்கு —
என் வயது, 40; என் கணவர் வயது, 45. எங்களுக்கு திருமணமாகி, பத்து ஆண்டுகள் ஆகின்றன; குழந்தையில்லை. என் கணவருடன் கூடப்பிறந்தவர்கள், எட்டு பேர்; என் கணவர் தான் மூத்தவர். தற்போது, அனைவருக்கும் திருமணமாகி, வீடு, வாசல், குழந்தை என, தனித்தனியாக உள்ளனர். என் மாமியார் எங்களுடன் தான் இருக்கிறார்.
எப்போதும், என் கணவர், அவரது அம்மா, உடன் பிறந்தோர் பற்றியே பேசிக் கொண்டுள்ளார். என் மாமியாரோ, குழந்தையின்மையால், என்னை ஏதாவது திட்டியபடியே இருக்கிறார்.
வாரா வாரம், அனைவரும் அம்மாவை பார்க்க எங்கள் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். இதனால், வீட்டு வேலைகள் செய்யவே, சரியாக உள்ளது.
என் மாமியார், என்னுடன் இருந்து, என்னைப் பற்றியே வம்பு பேசியும், குறை கூறியும் வருகிறார். குழந்தையின்மை பிரச்னைக்காக, மருத்துவரிடம் சென்றால், சத்தான ஆகாரம் சாப்பிட்டு, நன்கு ஓய்வு எடுக்கச் சொல்கிறார். ஆனால், அந்த மூன்று நாட்களில் கூட, ஏதாவது வேலை வாங்கியபடியே இருக்கிறார், மாமியார்.
என் கணவர், சாதாரண வேலையில், மாதம், 20 ஆயிரம் ரூபாய் தான் சம்பாதிக்கிறார். வருவோர், போவோர்கெல்லாம் செலவு செய்தே கடனாளி ஆகி விட்டார். இப்படியே சென்றால், எப்போது தான் கடனை அடைப்பது!
என் மாமியாரோ மற்ற பையன்களின் வீட்டிற்கு செல்வதில்லை. அவர்களுக்கு, அம்மாவின் குணம் தெரியும். ஆனால், 'நம்மிடம் அம்மா இருந்தால், நமக்கும் இந்த பிரச்னைகள் வந்து விடுமோ...' என்று, யாரும் மாமியாரை அழைத்துப் போவதில்லை.
கணவரோ, நான் சொல்வது எதையும் காது கொடுத்து கேட்பதே இல்லை.
நானும், இவ்வளவு காலம் பொறுமையாக இருந்து விட்டேன். இனியும் பொறுமை காப்பது, வீண் என்றும், சில சமயம், 'நான் ஏன் வாழ வேண்டும்...' என்றும் தோன்றுகிறது. தினமும் சமைக்க, சாப்பிட, தூங்க, வீட்டு வேலை செய்ய என்று, என் வாழ்க்கை, வெறுமையாக நகர்கிறது.
கடன் அடைத்து, குழந்தை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து என்று, எத்தனை பிரச்னைகள் உள்ளது. மாமியார் உட்பட அனைவரும் சுயநலவாதிகளாக உள்ளனர். தனிக்குடித்தனம் சென்றவர்கள் குழந்தை, வீடு, வாசல் என்று எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்க, அனைத்து பிரச்னையும் என் இல்லம் தேடி வருகிறது.
உங்களிடம் சொன்னால், ஏதாவது தீர்வு கிடைக்கும் என்று தான் எழுதுகிறேன்.
எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —
குழந்தை இல்லாத தம்பதிகளில், இரு வகை உண்டு. 'குழந்தை இல்லாவிட்டால் என்ன... எனக்கு நீ, உனக்கு நான்...' என, காதலில் மூழ்கி, ஈருடல் ஓருயிராக இருக்கும் தம்பதிகள் முதல் வகை; குழந்தை இல்லாததற்கு பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டி, கீரியும், பாம்பும் போல வாழும் தம்பதியினர், இரண்டாவது வகை.
முதல் வகையில் இருந்த உன் கணவனை, கோள் மூட்டி, இரண்டாவது வகைக்கு தாவ செய்து விட்டனர், உன் கணவன் வழி சொந்தங்கள்.
குழந்தைப்பேறு முக்கியம் தான்; ஆனால், அது ஒன்றுக்காகவே நாம் பிறந்துள்ளோம் என நினைத்து, கவலையில், துடிக்க தேவையில்லை.
உன் கடிதம் முழுக்க, மாமியார் மீது புகார் வாசித்துள்ளாய். விருந்தோம்பல் என்பது, தமிழரின் பிறவி குணம். விருந்து உபசரித்து, வீணாக போனவர்கள் யாருமில்லை. நீ, நான்கு பேரின் பசியை போக்கு; இறைவன், 40 பேரின் உணவை, உனக்கு தருவான். மாமியாரிடம் மனம் விட்டு பேசு; மாதத்தில் ஒவ்வொரு மகன்களின் வீட்டிலும் மூன்று நாட்கள் என, எட்டு பிள்ளைகள் வீட்டிலும் விருந்து நடக்கட்டும் என, யோசனை கூறு. மாமியாரை சுழற்சி முறையில், எட்டு பிள்ளைகள் வீட்டுக்கும் போய் வர சொல். 'கடனாளி கணவனை, கடனிலிருந்து மீட்க, உடனிருந்து உதவுங்கள் மாமியாரே...' என, இறைஞ்சு. மொத்தத்தில், மாமியாருடனான மோதல் போக்கை, அறவே நிறுத்து.
உங்களுக்கு குழந்தை பிறக்க, 100 சதவீதம் வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை, மகப்பேறு மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள். இல்லையென்றால், கணவரின் உறவினர் அல்லது உன் பக்க உறவினர் குழந்தை ஒன்றை தத்தெடுத்துக் கொள். வளர்த்து, ஆளாக்க செலவாகும் என, நீ செலவு கணக்கு போட்டால், தத்தெடுக்கும் எண்ணத்தை விடு!
எண்பது வயதான வயோதிக பெண்மணிக்கும் சில ஆசைகள் இருக்கத் தான் செய்யும். வயதானால், முற்றும் துறந்த முனிவர் ஆகிவிட மாட்டார்கள். முடிந்தவரை, முழு மனதுடன், மாமியாரின் ஆசைகளை நிறைவேற்று; மாமியாருக்கு செய்யும் பணிவிடை, இறைவனுக்கு செய்யும் தொண்டு.
விருந்து பரிமாறியதால், உன் கணவர் கடனாளி ஆகவில்லை. வேறு காரணங்கள் இருக்கும்; அதை மோப்பம் பிடித்து அடை.
இல்லத்தரசிகள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, ஆயிரம் உபாயங்கள் உள்ளன. பொருட்கள் எதுவும் வாங்காமல், சும்மா, ஜாலியாக, 'ஷாப்பிங்' போ; கோவில் மற்றும் தோழிகளின் வீடுகளுக்கு போய் வா; கணவனுடன், வார இறுதியில் திரைப்படம் பார்; வீட்டு வாசலில், புதுப்புது கோலங்கள் போடு; வீட்டை சுற்றி இடம் இருந்தால் தோட்டம் போடு; சுயநிதிக்குழுவில் சேர்.
புலம்புவதை அறவே விடு; உன்னை தவிர எல்லாரும் ஆனந்தமாக வாழ்கின்றனர் என, நினைப்பது அபத்தம். அவரவருக்கு ஆயிரம் பிரச்னைகள். குழந்தை இருந்தே ஆக வேண்டும், வீடு கட்டியே ஆக வேண்டும், ஒரு பைசா கூட, கடன் இருக்க கூடாது என, நெருக்கடியை ஏன் உனக்குள் ஏற்படுத்துகிறாய்? மாமியார் இருக்க கூடாது, உறவினர் யாரும் வரக் கூடாது என நினைத்தால், நீ, தனி தீவில் தான் வசிக்க வேண்டும்.
கணவனுடன் தாம்பத்ய நெருக்கத்தை அதிகரித்து, தகவல் தொடர்பை மேம்படுத்து. தினமும், சமைக்க, சாப்பிட, பணி செய்ய, தூங்க என்று தான், அனைவரின் வாழ்க்கையும் கரைகிறது. அதனில், வெறுமை புகாமல், சலிப்பு தட்டாமல், புதுமையை புகுத்தும் இல்லத்தரசியாக, ஜமாய்!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement