Advertisement

தூக்கப் பிரியரா நீங்கள்?

இக்கேள்விக்கு, 'ஆம்...' என்போர், தங்களை மாற்றிக் கொண்டால், உங்களது வளர்ச்சியில், பல நல்ல மாற்றங்கள் வரும்.
'அந்த பெரிய மனுஷனை பார்க்க போறேன்; நீ வரலையா?'
'நீ போ... நான் வரலை; அந்தாளை பார்க்குறது வேஸ்ட்; எனக்கு தூக்கம் தூக்கமா வருது...' ஹாவ்! (கொட்டாவி)
போய் விட்டு வந்தவர், இப்படி சொல்வார்...
'எனக்கு வேலை போட்டு குடுத்துட்டார்; நான் தான் கடைசி ஆள்; இனி, நீ போனா எதுவும் நடக்காது...'
'மனை வாங்கி போட்டியே... போய் பாக்காமலேயே இருக்கே...'
'என்ன இப்போ அவசரம்... அந்த பக்கமா போகும் போது பாத்துக்கலாம்...' என்று சொல்லி, தூங்கப் போய் விடுகிறார்.
பின், சில மாதங்கள் கழித்து, அந்த நண்பர் சொல்கிறார்... 'அப்பவே சொன்னேன் நீ கேட்கலை... இப்ப, உன் மனையில மூணு, நாலு பேர் குடிசை போட்டுருக்கானுங்க...'
'ஏங்க... எந்திரிங்க... யாரோ வந்திருக்காங்க; என்னான்னு கேளுங்க...'
'அடி நீ வேற... எவனா இருந்தாலும், நான் தூங்குறேன்னு சொல்லு போ...'
பின், சில நாட்கள் கழித்து, மனைவி, 'நம்ம பொண்ணுக்கு நல்ல வரன் கொண்டு வந்தார்; என்னான்னு கூட கேட்காம போயிட்டீங்க; இப்ப, வேற இடத்துல முடிச்சுட்டார்...'
- இப்படி, எண்ணற்றவர்களுக்கு தூக்கம் கொடுத்த தண்டனைகள், கொஞ்ச நஞ்சமல்ல!
உடன் படித்த நண்பரின் மகள் திருமணத்திற்கு, மற்றொரு நண்பருடன் வெளியூருக்கு சென்றிருந்தேன்.
ரயிலில் ஏறியதும், 'டிக்கெட் பரிசோதகர், நடுராத்திரி வருவார்; நீ பார்த்துக்கோ...' என்று சொல்லி, 'பெர்த்'தில் படுக்கையை விரித்து, தூங்கி போனார், நண்பர்.
'ஊர் வரப் போகுது எழுந்திரு...' என்றதற்கு, 'இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு...' என்று கேட்டார்.
'பதினைஞ்சு நிமிஷம்...' என்றதும், 'அதற்குள், ஒரு குட்டி தூக்கம் போட்டுடறேனே ப்ளீஸ்...' என்றவர், மறுபடியும் தூங்கிப் போனார்.
ரயிலில் இருந்து இறங்கி, ஓட்டல் அறைக்கு சென்றதும், 'பயணம் செய்ததுல ரொம்பக் களைப்பா(!) இருக்கு...' என்று கூறி, மறுபடி படுத்து விட்டார்.
'நான், நடைப்பயிற்சி போயிட்டு வர்றேன்; கொக்கி போட்டுக்கோ...' என்றேன்.
சரி என்றாரே தவிர, எழுந்திருக்கவில்லை. நடை பயிற்சி முடித்து வந்தேன்; கதவு தாழிடப்படவில்லை; தூங்கிக் கொண்டிருந்தார். சிரமப்பட்டு எழுப்பி, திருமணத்திற்கு கூட்டி போவதற்குள், போதும் போதும் என்றாகி விட்டது. மாலையில் வரவேற்பு முடிந்து, ரயிலேற வேண்டும்.
வரவேற்பிற்கு நான் தயாரான போது அவர், 'நான் வரலை... என் மகனோட ரிசப்ஷனுக்கு அவன் வரலை; கணக்குன்னா கணக்கு தான்...' என்றார்.
'அப்ப, தனியா என்ன செய்ய போறே?'
'தூங்கப் போறேன்...' (அடப்பாவி மனுஷா!)
வரவேற்பு முடிந்து, திரும்பி வந்த போதும் தூங்கியபடி தான் இருந்தார். ரயிலில் ஏறியதும், அதே, 'டிட்டோ' காட்சிகள். இந்த கும்பகர்ண மகாராஜா, தம் வாழ்க்கையில், என்ன சாதித்தார் என்று நினைவுபடுத்தி பார்த்தேன்; பெரிதாக ஒன்றுமில்லை.
இதற்கு பிரதான காரணமே, இவர் தூக்கத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவமே!
தூக்கம் என்பது, நம் வாழ்வின் அடிப்படை தேவை தான்; ஆனால், ஓரளவிற்கு மேல் அதற்கு முக்கியத்துவம் தந்து விடக் கூடாது. அவரவர் வயதிற்கு ஏற்ப, 6 - 7 - 8 மணி நேர தூக்கத்தை, ஒதுக்கிவிட வேண்டும்; மாற்றமில்லை.
ஒரு கோப்பை நிறைந்த பின்னும், அதில் காபியை ஊற்றியபடி இருந்தால், அது விரயம் தானே!
இப்படி, தேவைக்கு அதிகமான தூக்கமும், சோம்பலின், அலட்சியத்தின், பொறுப்பற்ற தன்மையின் குவியலே தவிர, சக்திக்கான சேமிப்பு அல்ல!
இப்படிப்பட்ட நீண்ட தூக்கத்தை விரட்டியடித்து, இதன் மூலம் கிடைக்கும், நேரத்தை பொருள் ஈட்டவும், வாழ்வின் தேவைகளை ஈடுகட்டவும், வளர்ச்சிகளை நோக்கி நகரவும், நற்பெயர் சம்பாதிக்கவும் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கவும், பங்கு போட்டு பகிர்ந்தளித்தால், அது, மிகப் பெரிய வளர்ச்சிகளுக்கு, வழி வகுக்கும்.
வாழ்வின் தேவைகள் அதிகரித்து விட்டன; மருத்துவ கட்டணங்கள் விழி பிதுங்க வைக்கின்றன. நம் தலைமுறைகள் நம்மை போல் இல்லாமல், ஆடம்பரம், டாம்பீகம் என்று, பெருஞ்செலவு வைக்கின்றன.
உடலில் ஓடும் ரத்தம் துள்ளலோடும், துடிப்போடும் இயங்கும் வயதிலேயே, தேவைகளை அடைந்து, கடமைகளை முடிப்பது நல்லது.
மாறாக, கொட்டாவிகளுக்கு முக்கியத்துவம் தந்து, நல்வாய்ப்புகளை கோட்டை விடுவோரின் கூட்டத்தில், நாம் ஒருபோதும் சேர்ந்துவிடக் கூடாது!

லேனா தமிழ்வாணன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement