Advertisement

கற்பனையில் தானம் செய்த பலன்!

இப்பிறவிக்கு மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் நற்பலனை கொடுக்கக் கூடியது, தானம் செய்தல்! அதனால் தான், நம் முன்னோர், தானம், தர்மத்தை இல்லறத்தானின் மிகப் பெரிய கடமையாக கருதினர். தானத்தினால் வளம் பெற்ற மன்னனின் கதை இது:
தேவேந்திரனையும் வெற்றி கொண்ட பராக்கிரமிக்க மன்னன் சித்திரநாதன். இவரது அரசாட்சியில், மக்கள் ஒரு குறையும் இன்றி வாழ்ந்தனர்; அரண்மனை பொக்கிஷமும் நிறைந்திருந்தது. அத்துடன், அழகும், நற்குணங்களும் கொண்ட, நற் குழந்தைகள் என, நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார், மன்னர்.
அதனால், 'இப்படிப்பட்ட ஆனந்தமான வாழ்வு, எனக்கு எப்படி கிடைத்தது... மறுபிறவியிலும் இவை கிடைக்க, என்ன செய்ய வேண்டும்...' என, எண்ணினார், மன்னர்.
குல குருவான வசிஷ்டரிடம், 'குருதேவா... நான் எண்ணியதெல்லாம் நிறைவேறுகின்றன; முற்பிறவியில் நான் செய்த புண்ணியத்தின் காரணமாக தான், நல்வாழ்வு கிடைத்துள்ளது. அதனால், நான் செய்த புண்ணியம் என்ன என்பதை தேவரீர் சொல்ல வேண்டும்...' என, வேண்டினார்.
'மன்னா... அவந்திப்பட்டிணத்தில், தர்மபாலன் எனும் அரசர் ஆட்சி செய்த காலம் அது... பெயருக்கு ஏற்றார் போல, தர்மங்கள் செய்து வந்தார், மன்னர். ஆனாலும், மிகவும் கொடிய வறுமையில் வாடினான், ஏழை ஒருவன்.
'இந்நிலையில், அந்நாட்டில் மழை பொய்த்து, பஞ்சம் வந்தது. இதனால், காட்டிலாவது ஏதாவது சாப்பிட கிடைக்கும் என்று எண்ணி, தன் மனைவியுடன் காட்டிற்கு சென்றான், அந்த ஏழை.
'அங்கு, கிழங்குகளை புசித்து வாழ்ந்து வந்தனர், அத்தம்பதி. சில மாதங்களில் அங்கும் பஞ்சம் வர, அங்கிருந்த காய்ந்த மரங்களை வெட்டி எடுத்து, நகருக்கு எடுத்துச் சென்று விற்று, அந்த வருவாயில் வாழ்ந்து வந்தனர்.
'ஒருநாள், பல இடங்களில் சுற்றியும், விறகு விலை போகவில்லை. அன்றைய நாள், மாசி மாத பவுர்ணமி; கிரகண நாள்; கிரகண நேரம். வேதியர்கள் சிலர், வியாபாரி ஒருவரின் வீட்டில், ஹோமம் செய்து கொண்டிருந்தனர். விறகு விற்க போன ஏழையும், அவன் மனைவியும், அதை வேடிக்கை பார்க்க நின்றனர்.
'அப்போது, அங்கே குளிர் அதிகமாக இருந்ததால், குளிரில் நடுங்கத் துவங்கினர், வேதியர். அதைப்பார்த்த ஏழை, தன்னிடமிருந்த விறகை எரித்து, அவர்கள் குளிரை போக்கினான். ஹோமம் முடிந்ததும், வேதியர்களுக்கு, நூறு பவுன் பொன்னை, தானமாக கொடுத்தார், வியாபாரி.
'அதைப் பார்த்த ஏழை, 'ஆகா... இது கிரகண காலம்; உத்தமமான இந்நேரத்தில், இந்த உத்தமர்களுக்கு தானம் கொடுக்க, நம்மிடம் ஒன்றுமில்லையே... மனதாலாவது தானம் செய்வோம்...' என்று, மனதால், கற்பனையாக தானம் செய்தான்...' என்று கூறிய வசிஷ்டர், 'சித்திரநாதா... மனதாலேயே தானம் செய்த அந்த ஏழை, அதன் புண்ணியத்தால், அரசனாக பிறந்து, உயர் வாழ்வை அடைந்தான்; அந்த ஏழை தான் நீ.
'இது, அடுத்த பிறவியிலும் தொடர வேண்டுமானால், உன்னால் இயன்ற வரை பூமி தானம் செய்...' என்றார்.
மனதால், கற்பனையாக தானம் செய்ததற்கே, மாமன்னர் பதவியென்றால்...
இயன்ற வரை தானம் செய்வோம்; இடும்பையில்லா இன்ப வாழ்வை அடைவோம்!

பி.என். பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!
இறைவனை, நேருக்கு நேர் நின்று வணங்கலாமா?
இறைவனுக்கு, மூன்று கண்கள்; இவற்றில், நெற்றிக்கண், நெருப்பு வடிவமானது; இப்பார்வை, நன்மை அளிக்காது. மற்ற இரு கண்கள் சூரிய, சந்திர வடிவமானவை. இவை, நன்மை பயக்க கூடியவை. தெய்வத்தின், கடைக்கண் பார்வை தான், நமக்கு வேண்டும். இதை தான், கடாட்சம் என்பர்.
கட என்றால், கடைசி; அட்சம் என்றால், கண். அதாவது, கடைக்கண் பார்வை. இது, கருணையே வடிவமானது; சகல ஐஸ்வர்யங்களையும் தர வல்லது. அதற்காகத்தான், நேருக்கு நேர் நின்று தரிசிக்காமல், ஒரு பக்கமாக நின்று, வழிபட வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement