Advertisement

மாண்புமிகு மாணவி

'பொதி சுமக்குற சாதாரண ஜீவனா இல்லாம, அறிவுப் புதையலை சுமக்குற சக்திகளா நம்ம மாணவர்கள் மாற்றப்படணும். டிஜிட்டல் புத்தகங்களும், ஸ்மார்ட் வகுப்பறைகளும் இந்த விஷயத்தை நிச்சயம் சாத்தியமாக்கும். 'நீட்' எழுதி ஜெயிக்கிற அளவுக்கு, நம்ம கல்வி நம்ம மாணவர்களை தயார் படுத்தணும். ஏன்னா, போட்டிகள் தான் வாழ்க்கையோட சுவாரஸ்யம்.
அதுல கிடைக்கிற வெற்றிகள் தான் வாழ்க்கையோட அர்த்தம்!' வார்த்தைக்கு வார்த்தை நமக்குள் ஆச்சரியம் விதைக்கிறார், 16 வயது ஸ்ரீ சக்ரவர்த்தி.

ஸ்ரீ விரும்பும் உலகம்
அமைதி ததும்புற என் கனவு உலகத்துல, மரநிழல்கள் சாலையை போர்த்தியிருக்கும். மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மட்டுமே மக்கள் பயன்பாட்டுல இருக்கும். மழைநீரை வீணாக்காத மக்கள். மக்கள் சக்தியை வீணாக்காத அரசு. சக மனிதனோட மனசை காயப்படுத்தாத அன்பு. எந்த உறவா இருந்தாலும் விட்டுக்கொடுக்குற மனப்பான்மை. வேணுங்கிற அளவுக்கு பணத்தை சம்பாதிக்கிற உழைப்பு. அந்த பணத்தை சந்தோஷமா பங்கு போட்டுக்கிற பாசம். வாழ்ற காலத்தை அர்த்தமுள்ளதா மாத்திக்கிற வாழ்க்கை... இப்படி, என் உலகம் ரொம்பவே அழகு!

உன் தோழியை பற்றிச் சொல்; உன்னைப் பற்றி அறிகிறேன்!
ஸ்ரீ: 'பொறுமையா இருக்க மாட்டியா?' - இந்த கேள்வியை எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து பலதடவை பலபேர்கிட்டே சந்திச்சிருக்கேன். அந்த சந்தர்ப்பங்கள்ல, அவசரப்படுறோம், அதனால கோபப்படுறோம்னு எனக்கு நல்லாவே புரியும். ஆனாலும், என்னால என் இயல்பை மாத்திக்க முடியாது. ஆனா, இப்போ நான் அப்படி இல்லை. இதுக்கு காரணம் ஸ்ருதி. என் போக்குல என்னை போக விட்டு, என் குணம் ஏற்படுத்துற விளைவுகளை எனக்கு பக்குவமா புரிய வைச்சவ! அவசர புத்தியினால நான் இழந்த விஷயங்கள், கோபத்தினால தவற விட்ட உறவுகள், வெற்றிகள் எல்லாத்தையும் எனக்கு அடையாளம் காட்டினா. தப்பை சுட்டிக்காட்டுறது மட்டுமில்ல, அதை பக்குவமா திருத்த உதவுறது தான் நல்ல நட்புன்னா, ஸ்ருதி எனக்கு நல்ல தோழி.

கடவுள், இந்த நொடி முன் வந்து நின்றால்...?
ஸ்ரீ: 'செவ்வாய் கிரகத்தை பார்க்க ணும்'னு, வயசுக்கு தகுந்த குறும்போட முதல்ல கேட்பேன். அப்புறம், அறிவுக்கு தகுந்த பொறுப்புணர் வோட, 'எந்த அரசும் மீட்டு கொண்டு வராத கறுப்பு பணம் இந்தியாவுக்கு வரணும். தமிழக விவசாயிகளோட வங்கிக்கடன்கள் தள்ளுபடி ஆகணும். தமிழகம் முழுக்க அடைமழை பெய்யணும்'னு வேண்டிக்குவேன்.

யார் இவர்?
பெயர்: ஸ்ரீ சக்ரவர்த்தி
வகுப்பு: பிளஸ் 1
பள்ளி: செட்டிநாடு வித்யாஷ்ரம், சென்னை.
பெற்றோர்: சத்ய நாராயணன் - ஹேமமாலினி
லட்சியம்: விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆவது

எங்கள் ஸ்ரீ சக்ரவர்த்தி - ஹேமமாலினி, ஸ்ரீசக்கரவர்த்தியின் தாய்
'செய்றது சின்ன காரியமா இருந்தாலும், அதுலேயும் தன்னோட தனித்தன்மை வெளிப்படணும்னு நினைக்கிறவ ஸ்ரீ. அவகிட்டே மனிதம் உண்டு. தன்னோட சேர்த்து தன் நாடும் உயரணுங்கிற நல்ல எண்ணம் உண்டு. நிறைய படிக்கிறா; படிச்சதை தயக்கம் இல்லாம நண்பர்களோட பகிர்ந்துக்கிறா. மிகப் பெரிய உயரங்கள் அவளுக்கு நிச்சயம்!'

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement