Advertisement

ரௌத்ர வீணை!

சீரும் சிறப்புமா(!) ஆட்சி நடத்திட்டு இருக்குற தமிழக முதல்வருக்கு...

உங்ககிட்டே ஒரு கதை சொல்லணும்; ஒரு கண் போன கதை. சொல்லட்டுமா?
போன மே மாசம், 16ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் எல்லாம் வேலைநிறுத்தம் பண்ணிட்டு இருந்தாங்க இல்லையா... அந்த நாள் தான் இந்த கதையோட களம். அன்னைக்கு, 'டெங்கு' ஜுரத்தால அவதிப்பட்டுட்டு இருந்த சொந்தக்காரரை பார்த்து நலம் விசாரிச்சுட்டு, ராமநாதபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்து நின்னேன். அப்போ, ராத்திரி 8:00 மணி.
பேருந்து நிலையம் முழுக்க கடல் மாதிரி மக்கள் கூட்டம். 'பஸ் எதுவும் நகரக்கூடாது'ன்னு டிரைவர், கண்டக்டர் எல்லாரும் பிரச்னை பண்ணிட்டு இருந்தாங்க.
வயசானவங்க, புள்ளதாச்சிங்க இருக்குறாங்கன்னு அழுது புரண்டதுக்கப்புறம் ஒருவழியா பேருந்து கிளம்புச்சு. பொதிமூட்டை மாதிரி பிதுங்கிட்டு கிளம்புன அந்த பேருந்துல நானும் இருந்தேன்.
உச்சிப்புளி ரயில்வே கேட் தாண்டி ஒரு கிலோ மீட்டர் துாரம் பஸ் போயிருக்கும். 'ச்ச்லீலீர்ர்...'னு ஒரு சத்தம். அந்த சத்தத்தை முழுசா உள்வாங்குறதுக்குள்ளே என் இடது கண்ணுல இருந்து ரத்தம். 'அய்யோ...'ன்னு அலறிகிட்டே கீழே சாய்ஞ்சேன். 'ஆத்தி... எத்தா தண்டி கல்லு!'ன்னு என் பக்கத்துல ஒரு குரல். கடுமையான வலியால என் கண்ணை திறக்கவே முடியலை. 'என்ன தைரியம் இருந்தா ஸ்டிரைக் அன்னைக்கு பஸ் ஓட்டுவே?'ன்னு கத்திக்கிட்டே ஒரு பைக் எங்களை கடந்து போச்சு. டிரைவருக்கு வைச்ச குறி என்னை பதம் பார்த்தது அப்போ தான் எனக்குப் புரிஞ்சது.
மண்டபம் அரசு மருத்துவமனைக்கு என்னை தூக்கிட்டு ஓடுனாங்க. அங்கே முதலுதவியை முடிச்சுக்கிட்டு, ராமநாதபுரம் மருத்துவமனைக்கு வாடகை வேன்ல போனேன். இடது கண்ணோட கருவிழி ஓரமும், மூக்கும் சேர்ற பகுதியில பலமா அடிபட்டிருக்கு. எதிர்காலத்துல ஆப்பரேஷன் தேவைப்படும்னு சொல்லிட்டாங்க. இப்போ, ஆறு தையல் போட்டிருக்கேன்.
கணவர் இல்லாத நிலையில, என் மூணு பிள்ளைகளுக்கும் நான்தான் ஆதரவு. என் கடைசி பொண்ணு கல்யாணத்துக்காக, குருவி சேர்க்குற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்துட்டு இருந்தேன். இப்போ, அந்த முயற்சியில மண் விழுந்துடுச்சு. இந்த பிரச்னையை வைச்சுக்கிட்டு நான் என்ன வேலைக்குன்னு போறது? மருந்து, மாத்திரைன்னு வைத்தியச் செலவுக்கு தினமும் அல்லாடிட்டு இருக்கேன்.
எனக்கு எதுக்கு இந்த தண்டனை? எங்களை பாதுகாக்க வேண்டிய நீங்க சந்தோஷமா இருக்குறப்போ, உங்க பாதுகாப்புல பத்திரமா இருக்க வேண்டிய நாங்க பதற்றத்தோடவே வாழணுமா?
அய்யா, மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குய்யா! இதுதான்யா மக்களுக்கான ஆட்சி!
- கடந்த மாதம் நடந்த போக்குவரத்து தொழிலாளர்களின்
வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது, கல்வீச்சில் பாதிப்புற்ற ராமேஸ்வரப் பெண் அற்புதமேரி.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement