Advertisement

அவளே சரணம்

மதுரையின் கே.கே.நகர். தமிழ் வாழும் ஓர் இல்லத்தின் வாயில். மேற்கினுள் தன்னை கொஞ்சம், கொஞ்சமாய் சூரியன் புதைத்துக் கொண்டிருந்த நேரம்.

'ரெடி... ரெடி... க்ளிக்'
எடுத்த புகைப்படம் சரியாக வந்திருக்கிறதா என்று கேமராவை பார்க்கையில், 61 வயது கு.ஞானசம்பந்தன் - 52 வயது அமுதா இருவரையும் விட, அவர்களின் தோள்களுக்கு இடையே அழகாய் மின்னியது, அவர்களின், 33 வருட திருமண வாழ்க்கையின் அன்பு.
அந்த அன்பின் பெயர் அமுதகம். அது, 'அவளே சரணம்' என உலகுக்குச் சொல்லும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் இல்லம்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் 29 ஆண்டுகளாய் தமிழ் பேராசிரியர், ஓய்வுக்குப் பின் கடந்த இரண்டு ஆண்டுகளாய் தகைசால் பேராசிரியர், சிரிப்புக்கும் சிந்தனைக்கும் வித்திடும், 16 புத்தகங்களின் ஆசிரியர், உலக நாடுகள் அத்தனையிலும் கால் பதித்திருக்கும் பட்டிமன்ற நடுவர், சின்னத்திரை நெறியாளர், பரபரப்பான திரைப்பட நடிகர்... ஆயிற்று, 61 வயது. 'அதனால் என்ன?' என்று ஓய்வெடுக்க மறுக்கிறார். இன்னமும் ஓடிக்கொண்டே இருக்கிறார். உறுதுணையாய் இருக்கிறார் அமுதா ஞானசம்பந்தன்.

'இவரோட இந்த வெற்றிக்கு நான்தான் காரணம்' - உங்களால இப்படி சொல்ல முடியுமா?
ம்ஹும்...! 'துவங்குன இடத்துலேயே நிற்கிற மாதிரி இருக்கு அமுதா'ன்னு இப்பவும் அவர் அடிக்கடி சொல்றார். கரவொலிகளும், புகழ்மொழிகளும், பணமும், பாராட்டும் தான் வெற்றின்னு நினைக்கிற அளவுக்கு அவர் சராசரி மனிதர் இல்லை. அவர் நிறைய படிச்சிருக்கார். அதைவிட முக்கியம், இன்னும் படிச்சிட்டே இருக்குறார். எப்போ வாசிப்பு நிற்குதோ அப்போதானே, 'தான்'ங்கிற எண்ணம் வரும். அவர் என்னைக்கும் வாசிப்பை நிறுத்தப் போறதில்லை. அதனால, 'நான்'ங்கிற கர்வத்தோட அவர் வாழப் போறதும் இல்லை. இந்த சிந்தனை இருக்கிறவரைக்கும், வெற்றிகள் அத்தனையும் அவருக்கு தாமரை இலை தண்ணீர் தான்! அவருக்கே இப்படின்னா, நான் எப்படி நீங்க கேட்குற மாதிரி சொல்ல முடியும்?
மனைவியின் வார்த்தைகளை பேராசிரியர் ரசித்துக் கொண்டிருந்த நேரம், வீட்டிற்கு பூ வருகிறது. சோபாவில் இருந்து சிரமப்பட்டு எழுந்து, மல்லிகைப் பந்தை தன் கையால் வாங்கி, மெது மெதுவாய் அடியெடுத்து நடந்து, தன் மாமியாரின் கால் தடம் பதிந்த கல் இருக்கும் பூஜையறைக்குள் வைத்துவிட்டு திரும்புகிறார் அமுதா. ஆறு மாதங்களுக்கு முன், இடதுகாலில் நடந்த மூட்டுமாற்று அறுவை சிகிச்சை, இன்னும் அவரை இயல்பாய் இயங்கவிடவில்லை. அந்த வருத்தம் அவரைவிட பேராசிரியருக்கு அதிகமிருக்கிறது.

ஓய்வெடுக்க வேண்டிய நேரத்துல எதைத் தேடி இந்த ஓட்டம்?
ஆத்ம திருப்தி. எனக்கு அந்த திருப்தி இன்னும் முழுமையா கிடைக்கலை. என் கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் அது கிடைக்காது. கிடைக்கவும் கூடாது. அப்போதான் நான் உண்மையா வாழ்ந்திருக்கேன்னு அர்த்தம். அன்பான மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, நல்ல வாழ்க்கைன்னு எல்லாம் எனக்கிருக்கு. ஆனா, எனக்கு கிடைச்ச அறிவு, அனுபவங்களை, முடிஞ்சவரைக்கும் நான் நிறைய பேருக்கு கடத்தணும். எனக்கு கிடைக்கிற வாய்ப்புகள் மூலமா அதைத்தான் இப்போ நான் பண்ணிட்டு இருக்குறேன். ஆனாலும், இந்த திருப்தி எனக்கு பத்தாது. நான் ஏத்தி வைக்கிற மெழுகுவர்த்திகளோட வெளிச்சம் இருளை முழுமையா ஒழிச்சதுன்னு இருக்கணுமே தவிர, இருள் குறைச்சதா மட்டும் இருக்கக் கூடாது.

சரிங்கய்யா... ஆனா, முதுமையில கணவனோட அருகாமை...?
மனைவிக்கு தேவை தான்! கடந்த ஆறு மாசமா இந்த குற்ற உணர்வோடத் தான் நான் அலைஞ்சுட்டு இருக்குறேன். இந்த அறுவை சிகிச்சைக்கு முன்னாடி வரைக்கும், எந்த
நிகழ்ச்சிக்கு நான் போனாலும் அவங்களும் என் கூட வருவாங்க. முதல் விமர்சகரா இருப்பாங்க. அவங்க இல்லாத சமீபத்திய ரஷ்யப் பயணம் ரொம்பவே சிரமப் படுத்திருச்சு. குறைந்தபட்சம், என் மாணவர்கள், 300 பேருக்காவது அவங்க தாலி எடுத்துக் கொடுத்து தான் திருமணமே
நடந்திருக்கு. இப்போ, வீட்டை விட்டு சகஜமா வெளியே நடமாட முடியாத அளவுக்கு, உடல்நிலையில ஒரு சின்ன தொந்தரவு! இருக்கட்டும், எங்கே இருந்தா என்ன, எனக்கு கிடைக்கிற ஒவ்வொரு பாராட்டுக்கும் சொந்தக்காரி அமுதா தானே!
உண்மை தான்! எந்த நேரமும் பேராசிரியருக்கு கலைப்பணி! உறக்கம் கூட பெரும்பாலும் பயணத்தில் தான்! ஆனாலும், ஒருமுறை கூட முகம் சுருக்கியதில்லையாம்
எம்.பில்., பட்டதாரியான அமுதாம்மா! அதனால் தான், 32 ஆண்டுகளாக பட்டிமன்ற மேடைகளில் நடுவராக ஜொலிக்கிறார் இந்த தமிழய்யா.

விசாலாட்சி/அமுதா - ஒப்பிட முடியுமா?
குருநாதனுக்கு மனைவியாகி எனக்கு உயிர் தந்தவள் என் தாய் விசாலாட்சி. எனக்குள் விதையாகி என்னை விருட்சமாக்குபவள் என் அமுதா. தாய் போலவே மனைவி அமையறது வரம். எனக்கு அந்த வரம் கிடைச்சிருக்கு.
பேராசிரியர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தவழ்ந்து வந்து அவர் காலை கட்டிப்பிடித்துக் கொள்கிறாள் ஒரு வயது நிரம்பிய சாய் ஆதிரை. பேத்தியை வாஞ்சையோடு தூக்கி முத்தமிட்டபடி பேராசிரியர் சொன்னார்... 'பங்குனி 31, இவ பிறந்த நாள்'அன்று தான், விசாலாட்சி அம்மாவின் நினைவு நாள்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement