Advertisement

'அக்ரி கிளினிக்' 'அக்ரி பிசினஸ்': வங்கிக் கடனில் 'பண்ணையம்'

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயம் மற்றும் விவசாய தொழில்களை உருவாக்கும் விவசாயத் தொழில் முனைவோருக்கு பல லட்சம் ரூபாய் கடன் மற்றும் மானியம் வழங்கி வருகிறது. மத்திய அரசின் 'அக்ரி கிளினிக்' மற்றும் 'அக்ரி பிசினஸ்' திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க 16 லட்சம் ரூபாய் வங்கிக்கடன். 36 சதவிகிதம் மானியம் (3.65 லட்சம் ரூபாய்) என விவசாயிகளுக்கு கிடைக்கிறது.மதுரை மாவட்டம்
விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி முன்னோடி விவசாயிகள் பா.வைரமணி, பா.பூமிநாதன். பட்டதாரி சகோதரர்களான இவர்கள், தங்களது ஒரு ஏக்கர் நிலத்தில் 'ஒருங்கிணைந்த பண்ணையம்' அமைக்க ஜெர்ஸி இனத்தின்10 கறவை மாடுகள், இன விருத்திக்காக ஒரு ஜெர்ஸி காளை, கொட்டில் முறை ஆடு வளர்ப்புக்கு 25 வெள்ளாடுகள், 250 நாட்டுக்கோழிகள், 100 தேன் பெட்டிகள் வாங்க கனரா வங்கி 16 லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளது. பயனாளியின் பங்களிப்பு தொகையாக 4 லட்சம் ரூபாயை செலுத்தினர். தவிர 36 சதவிகிதம் மானியம் (3.65 லட்சம் ரூபாய்) கிடைக்கிறது. பண்ணையம் மூலம் கிடைக்கும் லாபத்தில் மாத தவணை 20 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்தி வருகின்றனர்.விவசாய சகோதரர்கள் கூறியதாவது: ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்காக மதுரை வேளாண் பல்கலை, அங்குள்ள கே.வி.கே., அறிவியல் நிலையம், திருப்பரங்குன்றம் கால்நடை பராமரிப்புத்துறை பல்கலை உள்ளிட்டவற்றில் முறையாக பயிற்சி எடுத்தோம். ஒரு ஏக்கரில் பண்ணையம் அமைக்க வங்கிக்கடன் எதிர்பார்த்து மூன்று ஆண்டுகள்
கஷ்டப்பட்டோம். எங்களின் விடா முயற்சி, தொழில் நேர்த்தியை கண்டு 16 லட்சம் ரூபாய் கனரா வங்கி 'அக்ரி கிளினிக்' 'அக்ரி பிசினஸ்' திட்டத்தின் கீழ் மேலாளர் ஆறுமுகம் கடன் வழங்கினார்.கறவை மாடுகள், ஆடுகளுக்கு இயற்கை முறையில் புரோட்டீன் சத்துக்கள் மிக்க தீவனம் வழங்குவதற்காக இரண்டு ஏக்கரில் கோ 4, கோ 5 மற்றும் நேத்தியர் புல் ரகங்கள், வேலி மசால், அகத்தி, கம்பு, அசோலா போன்றவை வளர்த்து கால்நடைகளுக்கு வழங்குவதால் பால் கறவை நன்றாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 40 - 50 லிட்டர் பால் கிடைக்கிறது. பண்ணைக்கே வந்து வாங்கி செல்கின்றனர். வெள்ளாடுகள் புஷ்டியாக வளர்கிறது. வெள்ளாட்டுக்கறி கிலோ 600 ரூபாய். எமது பண்ணையில் ஆட்டை எடை போட்டு கிலோ 250 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்கிறேன். பண்ணையம் மூலம் நாள் ஒன்றுக்கு 10 பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறோம். லாபத்தில் இருந்து மாதம் 20 ஆயிரம் ரூபாய் வங்கிக்கடன் செலுத்தி வருகிறோம். ஐந்து ஆண்டுகள் வரை கடன் தவணை செலுத்த வேண்டும். கடன் முழுவதும் பைசல் ஆகும் போது மொத்த லாபம் 20 லட்சம் ரூபாயை தாண்டும். கறவை மாடுகள், வெள்ளாடுகள், நாட்டுக்கோழிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாயாக உயரும் என்றனர். சகோதரர்களை வாழ்த்த 98421 79980.
- கா.சுப்பிரமணியன் மதுரை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement