Advertisement

இளஸ்..... மனஸ்... (60)

பள்ளி மாணவ - மாணவியர் தங்களின் பிரச்னைகளை எழுதி குவித்து விட்டனர். அவற்றை பார்ப்போமா...
அன்புள்ள ஜெனிபர் ஆன்டி... நான், +2 படிக்கிறேன். என் கையெழுத்து அசிங்கமா இருக்கு. அழகாக எழுதுவதற்கு, ஒரு நல்லவழி சொல்லுங்களேன்.
கவலைப்படாதே... தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் அச்சிட்ட எழுத்துப் பயிற்சி நோட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, தினமும் எழுதி எழுதிப் பழகு. மூன்றே மாதங்களில் உன் கையெழுத்து அழகாக மாறும்.
ஆன்டி... நான், +2 படிக்கும் மாணவன். மிகவும் குட்டையாக இருக்கிறேன். நான் உயரமாக வளர்வதற்கு நல்ல வழி சொல்லுங்க.
தினமும் ஸ்கிப்பிங், நீச்சல் மற்றும் பள்ளி மைதானத்திலுள்ள, 'பார்'ல் தொங்கி பழகு. இவற்றை தொடர்ந்து செய்து வந்தாலே, நல்ல பலன் கிடைக்கும்.
டியர் ஆன்டி... எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். என் பற்கள் மஞ்சள் நிறமாக உள்ளது. வெண்மை நிறம் அடைவதற்கு, நல்ல வழி சொல்லுங்க ப்ளீஸ்...
எலுமிச்சை சாறு எடுத்து, அதில் உப்பு சேர்த்து, பல் துலக்கினால், மஞ்சள் கறை போய், பற்கள் பளிச்சிடும். துளசி, புதினா இலை இவற்றை நிழலில் உலர்த்தி, மூன்று கிராம்பை சேர்த்து இடித்து, இந்த பொடியை தினமும் பற்களில் தேய்த்து வர, மஞ்சள் நிறம் போய்விடும்.
ஆன்டி... நான் +2 படிக்கும் மாணவன். எனக்கு முகத்தில் கரும்புள்ளிகளும், அதிகமாக முகப்பருக்களும், சுருங்கிய கன்னமும் காணப்படுகிறது. இதற்கு நல்ல வழி சொல்லுங்க.
மகனே... இதற்கான பதிலை, கடந்த,
பிப்., 3, 2017 இதழில் எழுதி உள்ளேன்; படித்துப் பார்.
காரட் சாறும், தேனும் கலந்து முகத்தில் தடவினால், முகப்பரு மறையும். புதினா இலையை அரைத்து தடவினாலும், பருக்களும் அதன் அடையாள குறிகளும் மறையும்.
முகச் சுருக்கம் நீங்க: முள்ளங்கிச் சாறுடன், அதே அளவு தயிர் கலந்து முகத்தில் பூசி, நன்கு உலர்ந்தவுடன் கழுவினால், முகச் சுருக்கங்கள் நீங்கும்.
ஆன்டி... நான், 10 வகுப்பு படிக்கும் மாணவன். எனக்கு வாயு தொல்லை உள்ளது. என்னால் பொது இடங்களில் அதிக நேரம் இருக்க முடிவதில்லை. எந்த உணவில் வாயு தொல்லை இருக்கிறது என்றும், அதிலிருந்து விடுபட சரியான வழி கூறுங்கள்.
லவங்க பட்டையை நன்றாக பவுடர் செய்து, மிதமான சூட்டிலுள்ள பாலில் கலந்து, ஐந்து நிமிடங்கள் சென்றபின் குடிக்கவும். வாயு தொல்லை சரியாகிவிடும். கூடுமானவரை, பட்டாணி, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது.
நான், +2 படிக்கும் மாணவன். எனக்கு கண் குறைபாடு இருக்கிறது. என்னால் சரியாக படிக்க இயலவில்லை; கண் பார்வை நன்றாக தெரிய ஆலோசனை கூறுங்கள்.
பால், முட்டை, கீரை, கேரட், கருவேப்பிலை இவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள். எதற்கும் கண் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பார்த்து, அவரது ஆலோசனை பெறுவது நலம்.
நான், +2 படிக்கும் மாணவன். எனக்கு உடல் பருமன் அதிக அளவு உள்ளது. என் எடை, 60 கிலோ. உடல் எடை குறைந்து, ஒல்லியாக ஆவதற்கு நல்ல வழி சொல்லுங்க ஆன்டி.
மகனே... இதற்கான பதிலை, கடந்த, ஜூலை 22, 2016 சிறுவர்மலர் இதழில் எழுதி உள்ளேன்; படித்து பார்.
நொறுக்கு தீனியை நிறுத்திவிட்டு, டான்ஸ், ஸ்விம்மிங், பேட்மிட்டன் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடு; எடை குறையும்.
ஆன்டி... நான், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. எனக்கு தலைமுடி உதிர்தலும், உடைதலும், ஈறு, பேன் அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வாக நல்ல வழி சொல்லுங்க.
தலை முடி உதிர்வை தடுக்க, இரவில், வெந்தயத்தை ஊற வைத்து, காலையில் அதை அரைத்து, அதனுடன், முட்டையின் வெள்ளை கரு, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தேய்த்து, அரை மணி நேரம் சென்றபின், குளித்தால், முடி உதிர்வை தடுக்கலாம்.
பேன் தொல்லை நீங்க: வசம்பை தண்ணீர் விட்டு அரைத்து, தலையில் நன்றாக தேய்த்து, ஊறியதும், தண்ணீரில் அலசு; பேன் தொல்லை மறையும்.
ஆன்டி... நான், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். எனக்கு இரவில் அதிகமாக நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு நல்லவழி சொல்லுங்க.
தினமும், தக்காளி ஜூஸ் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நெஞ்செரிச்சல் வராது. இல்லையெனில், இஞ்சி, பேரிக்காயை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி, பகல் நேரத்தில் குடித்து வந்தாலும், நெஞ்செரிச்சல் குணமடையும். இரவில் ஒரு டம்ளர் பால் குடித்து வர எரிச்சல் நீங்கும்.
போதுமா செல்லங்களா... அடுக்கடுக்கான உங்கள் கேள்விகளால் ஆன்டி ரொம்ப, 'டயர்ட்' ஆகிவிட்டேன். ஸோ... ஆப்பிள் ஜூஸ் குடிக்கப் போறேன்... பை!
உங்கள் நலனில், அக்கறை கொள்ளும்,
ஜெனிபர் பிரேம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement