Advertisement

கிழப் பறவை!

பாசிகுடா கடற்கரையில், அன்னப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தன. அவற்றில், ஒரு வயதான அன்னப் பறவை இருந்தது.
அப்பறவை, 'நாம் யாருக்கும் கெடுதல் செய்ய கூடாது; நன்மை தான் செய்ய வேண்டும். அப்போது தான், நம் சந்ததியினர் நலமாக இருப்பர்' என கூறி வந்தது.
இதனால், எல்லா அன்னப் பறவைகளும் அதன் மீது மரியாதை யும், மதிப்பும் வைத்திருந்தன. எந்தவொரு கருத்தையும், அதனிடமே கேட்டு நடந்தன.
அந்த வயது முதிர்ந்த அன்னப் பறவை, கஷ்டப்பட கூடாது என்று நினைத்து, அதற்கு தேவையான உணவையும் எடுத்து வந்து கொடுத்தன.
தாங்கள் இடும் முட்டைகளை, அந்த அன்னப் பறவையிடம், பாதுகாக்கும்படி விட்டு விட்டு, கடல் நீருக்குள் சென்று, இரை தேடியும், விளையாடியும் வந்தன.
ஆனால், மற்ற பறவைகள் நினைத்தது போல், அவ்வயது முதிர்ந்த அன்னப் பறவை, நல்லெண்ணம் கொண்ட பறவை இல்லை; பிற பறவைகளை ஏமாற்றும் பேர் வழியாக இருந்தது.
பறவைகள், பாதுகாத்து வைத்திருக்கும்படி கூறி விட்டுச் சென்ற முட்டைகளை, திருட்டுத்தனமாக உடைத்து சாப்பிட்டு வந்தது.
தங்கள் முட்டைகள் எங்கே என்று பறவைகள் வந்து கேட்கும் போதெல்லாம், 'தெரியவில்லை... பார்க்கவில்லை' என்ற பொய்யான காரணத்தை சொல்லி வந்தது.
''முட்டைகள் எப்படி காணாமல் போனது என்று எனக்கு தெரியல... ஒருவேளை, நான் தூங்கும்போது யார் வர்றாங்கன்னு தெரியல...'' என்று பாவமாக நடித்தது.
தங்களுக்கு வழி காட்டும் அன்னப் பறவையின் பேச்சை, உண்மை என்று நம்பின எல்லாப் பறவைகளும். ஆனால், ஒரே ஒரு பறவைக்கு மட்டும், 'எப்படி அனைவரது முட்டைகளும், அதுவும், கடலுக்குள் சென்று திரும்பும் சமயங்களில் மட்டும் காணாமல் போகிறது. நாம் இல்லாத நேரத்தில் வேறு விலங்கினங்கள் வந்தாலும், வயதான பறவையின் கண்களில் படாமல் எப்படி போகும். இதில், ஏதோ சூது இருக்கிறது!' என நினைத்தது.
மறுநாள்- -
வழக்கம் போல, எல்லா பறவைகளும், முட்டையை பாதுகாக்கும்படி வயதானப் பறவையிடம் சொல்லி விட்டு, கடலுக்குள் சென்று விட்டன. ஆனால், ஒரு குறிப்பிட்ட பறவை மட்டும் மேடான மணற்பகுதி ஒன்றில் போய் மறைந்திருந்து, நடப்பதை கவனிக்க ஆரம்பித்தது.
அன்னப்பறவைகள் கடலுக்குள் சென்று விட்டதை உறுதி செய்த கிழப்பறவை, சுற்றும், முற்றும் பார்த்து விட்டு, முட்டையை உடைத்து குடிக்க ஆரம்பித்தது. மறைந்திருந்த அன்னப்பறவை, மற்றப் பறவைகளை அழைத்து வந்தது.
சிறிது நேரம் சென்று வருவர் என்ற மெத்தனத்தில், நிதானமாக முட்டையை குடித்து கொண்டிருந்தது கிழப்பறவை.
கூடவே இருந்து குழி பறித்த கிழப் பறவையின் செயலை கண்டு, அன்னப் பறவைகள் அனைத்தும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தன.
எல்லா பறவைகளும், ஒன்று சேர்ந்து, மூர்க்கமாய் கிழப்பறவையை தாக்கின. அந்த தாக்குதலை சமாளிக்க முடியாத கிழப் பறவை, பரிதாபமாக உயிரிழந்தது.
ஒருவர், தன் சுயத்தை மறைத்து நீண்ட காலம் நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ நடிக்க முடியாது. அப்படி நடித்தால், ஒரு நேரத்தில், அவர்களின் நடிப்பு வெளிப்பட்டு விடும். தீய எண்ணம் கொண்டு நடிப்பவர்களுக்கு அன்னப்பறவையின் முடிவு தான் ஏற்படும். எனவே, எப்பவும் உண்மையாக இருங்க குட்டீஸ்...

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement