Advertisement

தலை வேணாம்!

டிங்கு முயல், இரை தேட காட்டுக்குள் சென்றது. வழியில், ஒரு பெரிய வான்கோழி, மண் திட்டில் படுத்திருப்பதை கண்டது.
வான்கோழி படுக்கும் போது, சிறகுகளுக்குள் கழுத்தை நுழைத்துவிடுவது வழக்கம். இது முயலுக்கு தெரியாது.
அதன் அருகில் சென்று, உற்று பார்த்த முயலுக்கு, வான்கோழியின் தலையை காண முடியவில்லை.
'வான்கோழி தன் தலையை என்ன செய்து விட்டது...' என்று வியப்பில் ஆழ்ந்தது முயல்.
ஒருநாள்- மாலை -
வான்கோழியை பார்த்த முயல், ''வணக்கம் வான்கோழியாரே...'' என்றது.
''வணக்கம்!'' என்று தலையை உயர்த்தியபடி கூறியது வான்கோழி.
''வான்கோழியாரே! கேட்பதற்கு மன்னிக்க வேண்டும். நீங்கள் படுத்திருக்கிற நிலையில், உங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், உங்கள் தலையை என்னால் பார்க்க முடிய வில்லை. உங்களுக்கு தலை இருக்கிறதா...'' என்று கேட்டது.
''நிச்சயமாக தலை இருக்கிறது,'' என்று தன்னுடைய சிறகின் மீது, தலையை வைத்தபடியே கூறியது வான்கோழி.
அங்குமிங்கும், வான்கோழியை பார்த்தது முயல். ஆனால், அதன் தலை அகப்பட வில்லை; முயலுக்குப் பெருத்த ஏமாற்றம்.
'வான்கோழி தன்னுடன் பேச விரும்ப வில்லை அல்லது அதனுடைய தலை எங்கே இருக்கிறது என்பதை காட்ட விரும்பவில்லை' என்று நினைத்தது முயல்.
இந்த எண்ணத்துடன் வீட்டிற்கு சென்றது முயல்.
''வான்கோழிகள் தூங்கும் போது, தங்களுடைய தலைகளை அகற்றி ஒருபுறம் வைத்து விட்டுத்தான் தூங்குகின்றன. இது உனக்கு தெரியுமா...'' என்று, தன்னுடைய மனைவியிடம் சொன்னது முயல்.
''தெரியாது...'' என்று கூறியது முயலின் மனைவி.
''நானும் வான்கோழியை போல செய்ய போகிறேன். ஏனென்றால், தலை இல்லாமல் தூங்குவது சிரமம் குறைவாக இருக்கும். உண்மையில், தூங்குவதற்கு தலையே தேவையில்லை. நீ பேச வேண்டும் என்றாலும் கூட உனக்கு தலை தேவையில்லை. ஏனென்றால், வான்கோழி என்னுடன் இப்படித்தான் தலை இல்லாமல் மிகவும் இலகுவாக பேசியது,'' என்று கூறியது.
இதை கேட்டு, அதன் மனைவிக்கு திகைப்பாயிற்று. அதே சமயம், குழப்பத்தில் ஆழ்ந்து, ஏதோ சொல்ல வாய் திறந்தது. அதற்கு முன்பாகவே வேகமாக சென்று, கோடாரியை எடுத்து, தன் தலையை வெட்டி கொண்டது முயல்.
தலை இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்து, நிரந்தரமாக தூங்கிற்று முயல்.
உங்க பிரண்ட்ஸ், இத வெச்சிருக்காங்க, அத வெச்சிருக்காங்கன்னு சொல்லி, எதுக்கும் ஆசைப்படாதீங்க. எதுவாக இருந்தாலும், நமக்கு இது, 'செட்' ஆகுமான்னு பார்த்துக்கணும். இல்லன்னா நம்ம, டிங்கு முயல் மாதிரி தான் ஆகிவிடுவோம். புரிஞ்சுதா குட்டீஸ்...

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement