Advertisement

கோடையில் சில பயிற்சிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாணவர்களுக்கு பல விளையாட்டுப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. நீச்சல், இறகுப்பந்து, கிரிக்கெட், வாள் சண்டைப் பயிற்சி, ஜிம்னாஸ்டிக், பாக்ஸிங் என, பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகள், அதன் எல்லா அரங்கங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கோடையை முன்னிறுத்தி, மாநிலம் முழுவதிலும் குறுகிய காலப் பயிற்சிகள் தொடங்கப்பட்டு, ஜூன் மாத இறுதிவரைக்கும் திட்டமிடப்பட்டு, பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 5 வயது முதல் இப்பயிற்சி வகுப்புகளில் சேரலாம்.
சென்னை கிண்டியில் உள்ள, அக்வாக்டிக் காம்ப்ளக்ஸில் (வேளச்சேரி செல்லும் வழியில் அமைந்துள்ள சர்வதேச நீச்சல்குள வளாகம்), கோடைகால சிறப்பு பயிற்சிகளாக நீச்சல், இறகுப்பந்து, ஜிம்னாஸ்டிக் பயிற்சி வகுப்புகள் நடந்துவருகின்றன. நாம் அங்கு போனபோது, நீச்சல் குளத்தைச் சுற்றி சிறுவர், சிறுமியரின் கூட்டம் அலைமோதியது. வரிசையாக நின்று ஒவ்வொருவராக தண்ணீருக்குள் குதித்துக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் பயிற்சியாளர்கள் தனி கவனம் எடுத்து சொல்லிக்கொடுப்பதையும் காணமுடிந்தது. ரெகுலர் வகுப்புகளுக்கு வருகிறவர்கள் ஒரு பக்கமும், குறுகிய கால வகுப்புகளுக்கு வருகிறவர்கள் இன்னொரு பக்கமுமாக நீச்சல் குளத்தில் குதித்துக்கொண்டிருந்தனர். சூரியன் சுட்டெரிக்கும் இக்கோடையில் தண்ணீருக்குள் நேரம் செலவழிக்கவேண்டும் என்றால், வாண்டுகளுக்குக் கசக்கவா போகிறது? நீச்சலுடையில் இருந்த அத்தனை பேரிடமும் அவ்வளவு உற்சாகம்.
இதே உற்சாகத்தை, ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுக்கும் அரங்கிலும் பார்த்தோம். குழுவாக அமர்ந்துகொண்டு வார்ம் அப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கால்களை நீட்டி உட்கார புதியவர்கள் சிரமப்படும்போது, எப்படி அமர்ந்தால் சுலபமாக இருக்கும் என்று அதன் சூட்சுமத்தை சொல்லிக்கொடுத்தார் பயிற்சியாளர். இதன்பின், ரெகுலர் வகுப்பு, கோடைகால பயிற்சிக்கு வந்திருந்தவர்கள் என அணி பிரிந்து, பயிற்சியில் ஈடுபடலாயினர். கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்த நமக்கே உடம்பு வலி ஏற்பட்டுவிடும்போல இருந்தது. ஆனால், பயிற்சியில் ஈடுபட்டிருந்த அத்தனை பேரும் எப்படித்தான் இப்படி உற்சாகமாக ஜிம்னாஸ்டிக் செய்கிறார்களோ என்று வியந்தபடியே, இறகுப்பந்து அரங்கை அடைந்தோம்.
அங்கே, மூன்று பயிற்சி ஆடுகளங்கள் இருக்கின்றன. இங்கேயும் ரெகுலர், கோடை வகுப்புக்கு வந்தவர்கள் என்று இரண்டு பிரிவுகள். இறகுப்பந்தை காற்றில் தூக்கிப்போட்டு, எப்படி அடிக்கவேண்டும் என்பது தொடங்கி, பந்து பறந்து எதிரில் இருப்பவர் அடிக்கும் லாவகம் பார்த்து, பந்து எந்தப் பக்கம் வரும் என்பதை அறிந்து, எப்படித் தயாராக இருக்கவேண்டும் என்றெல்லாம் பயிற்சியாளர் சொல்லிக்கொடுத்து, விளையாட வைத்துக்கொண்டிருந்தார்.
எல்லா இடங்களையும் பார்வையிட்ட பின், அரங்க அதிகாரியான வீரபத்திரனை சந்தித்தோம்.
“ஏப்ரல் தொடங்கி, ஜூன் மாத கடைசி வாரம் வரைக்கும் 6 பிரிவாகப் பிரிந்து, நாங்கள் கோடைவகுப்புகள் எடுக்கிறோம். ஒவ்வொரு வகுப்பும் 12 நாட்கள். காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 6.30 வரை நடைபெறுகின்றன. இந்த அரங்கில், நீச்சல், ஜிம்னாஸ்டிக், இறகுப்பந்து ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோடை பயிற்சியில், இவ்விளையாட்டுகளின் அடிப்படையைக் கற்றுக்கொள்ள முடியும். அதன்பின் ஆர்வம் இருக்கும் மாணவர்கள் தொடர்ந்து ரெகுலர் வகுப்புகளில் சேர்ந்துகொள்ளலாம். இங்கே ரெகுலர் பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள், மாநில, தேசிய, ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை அள்ளி வந்துள்ளனர். நம் பிள்ளைகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்னு பல பெற்றோர் நினைக்கிறாங்க. விளையாட்டுப் பயிற்சியும் மாணவர்களுக்கு பல விஷயங்களில் உதவும்னு அவங்களுக்கு தெரியறதில்லை. இங்கே எங்க அரங்கத்தில் சிறப்புக் குழந்தைகளையும் ரெகுலர் வகுப்புகளில் எடுத்துக்கொள்கிறோம். இங்கே பயிற்சிபெறும் சிறப்புக் குழந்தைகள், பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் போறாங்க. இதே மற்ற இடங்களில் நடக்கும் வகுப்புகளிலும், சிறப்புக் குழந்தைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அவர்களுக்கான வாய்ப்புகளையும் நாமதானே உருவாக்கிக்கொடுக்கவேண்டும்” என்றார் வீரபத்திரன்.
இக்கோடை வகுப்புகள் தமிழகம் முழுவதும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் விளையாட்டுப் பயிற்சி மையங்களோடு ஒப்பிடுகையில், அரசு நடத்தும் இப்பயிற்சிகளுக்கு கட்டணம் குறைவே.

வயது வரம்பு-
ஜிம்னாஸ்டிக் - 5 வயதிற்கு மேல்.
டென்னிஸ், கபடி - 7 வயதிற்கு மேல்.
கால்பந்து, பாக்ஸிங், ஓட்டப்பந்தயம் - 10 வயதிற்கு மேல்.
துப்பாக்கி சுடுதல் / பளு தூக்குதல்- 12 வயதிற்கு மேல்

சென்னையில் பயிற்சிபெற விரும்புகிறவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய விபரம்
1. நீச்சல் - 7401703473
2. பாக்ஸிங் - 9444456277
3. துப்பாக்கி சுடுதல் - 9444495252
4. பளு தூக்குதல் - 9176737291
5. கைப் பந்து - 9750347039
6. டென்னிஸ் - 9003441514
7. கபடி - 9080286232
8. ஜூடோ - 9840272711
9. ஹாக்கி - 9894211742
10. ஜிம்னாஸ்டிக் - 9444280951
11. வாள் சண்டை - 9994452031
12. கிரிக்கெட் - 9865813404
13. இறகுப்பந்து - 9751877666
14. அத்லடிக் - 9444136735

மாவட்ட விளையாட்டுப் பிரிவு அதிகாரிகள் தொடர்பு எண்கள்:
1. அரியலூர் - 7401703499
2. சென்னை - 7401703480
3. கோயம்புத்தூர் - 7401703489
4. கடலூர் - 7401703495
5. தர்மபுரி - 7401703486
6. திண்டுக்கல் - 7401703504
7. ஈரோடு - 7401703490
8. கன்னியாகுமரி - 7401703507
9. காஞ்சிபுரம் - 7401703481
10. மதுரை - 7401703501
11. நாகபட்டினம் - 7401703497
12. தேனி - 7401703505
13. பெரம்பலூர் - 7401703516
14. ராமநாதபுரம் - 7401703509
15. நீலகிரி - 7401703491
16. திருநெல்வேலி - 7401703506
17. திருப்பூர் - 7401703515
18. திருவள்ளூர் - 7401703482
19. விழுப்புரம் - 7401703485

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement