Advertisement

டென்னிஸ் முதல்வன்

ஆண்டி முர்ரே | 15.5.1987 | க்ளாஸ்கோவ், ஸ்காட்லாந்து

“மார்ச் 1996ல் என்னுடைய வயது 9. ஆரம்பப் பள்ளியில் என்னுடைய வகுப்பில் உட்கார்ந்திருந்தேன். அப்போது, கையில் துப்பாக்கியுடன் திடீரென ஒருவன் வகுப்பறைக்குள் வந்து பட படவென சுட ஆரம்பித்தான். அந்தத் தாக்குதலில் 16 மாணவர்களும், ஓர் ஆசிரியரும் இறந்துபோனார்கள். அதிர்ச்சியான அந்த நேரத்தில், என்ன செய்வதெனத் தெரியாமல் வேகமாக ஓடி தலைமையாசிரியரின் அறையில் மறைந்துகொண்டதால் தப்பித்தேன். அந்த நிகழ்வை என்னால் என்றும் மறக்க முடியாது.” என்கிறார் ஆண்டி முர்ரே.
இவரும், செர்பிய வீரர் ஜோகோவிக்கும் 'நீயா நானா' என்று போட்டி போட்டுக்கொண்டு டென்னிஸ் விளையாடுவார்கள். பிரிட்டன் வீரர்கள் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று பல ஆண்டுகள் ஆகியிருந்தன. அதைப் பூர்த்திசெய்யும் விதமாக 2013ல், இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஜோகோவிக்கை எதிர்த்து முர்ரே வெற்றி பெற்றார். இதன் மூலம், 77 ஆண்டு கால வரலாற்றை மாற்றியமைத்த பெருமை முர்ரேவுக்குக் கிடைத்தது.
அதன்பிறகு, இவர்களுக்காகவே 2015ல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டம் அமைந்தது. இதற்குமுன் முர்ரேவிடம் தோற்ற ஜோகோவிக், அவரைப் பழிவாங்கும் ஆட்டமாக இதை அமைத்துக்கொண்டார். அப்போது, நம்பர் 1 வீரராக இருந்த ஜோகோவிக், முர்ரேவை வென்று, 5வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
நான்கு முறை (2010, 2011, 2013, 2015) இறுதிப்போட்டிவரை முன்னேறியும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் முர்ரேவுக்கு இன்னும் கிடைக்கவில்லை. 2010ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரிடம் தோல்வி, 2011, 2013, 2015ம் ஆண்டுகளில், ஜோகோவிக்கிடம் தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில், நான்கு முறை தோல்வி கண்ட ஒரே வீரர் என்ற சோதனையான சாதனை, தோல்வியின் மூலம் கிடைத்தது. ''அடுத்த ஆண்டு இறுதிப்போட்டியில் விளையாடி, வெற்றிபெற முயற்சி செய்வேன். அதில் வேறுபட்ட முடிவு கிடைக்கும்'' என்று ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் கூறினார் முர்ரே.
3 வயதில் விளையாடத் தொடங்கி, தொழில்முறை வீரராக 2005ல் மைதானத்தில் காலடி வைத்ததில் இருந்து, ஒவ்வொரு வெற்றிக்காகவும் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறார் முர்ரே. இத்தகைய கடின உழைப்பால்தான், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 11,270 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.


வெற்றிகள்:
விம்பிள்டன் - 2013, 2016
யு.எஸ். ஓபன் - 2012
ஏ.டி.பி. சர்வதேச போட்டிகள் - 2016

ஒலிம்பிக்:
தங்கம் - ( 2012, லண்டன்)
தங்கம் - (2016, ரியோ)

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement