Advertisement

காண வேண்டிய ஹம்பி

கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் உள்ளது ஹம்பி. உலகப் புகழ்பெற்ற, வரலாற்றுத் தொன்மை வாய்ந்த இடம். பெல்லாரியிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூருவிலிருந்து 420 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பெங்களூருவில் இருந்து சித்ரதுர்க்கா நகருக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து, ஹோஸ்பேட்டை என்னும் நகரத்தை அடைய வேண்டும்.
ஹம்பி நகரத்தின் இடிபாடுகளிலிருந்து புதியதாய் உருவாக்கிய தற்கால நகரம்தான், ஹோஸ்பேட்டை. கன்னடத்தில் ஹொஸ என்றால் புதிய என்பது பொருள். புதிய குடியிருப்புகளால் ஆகிய ஊர். எங்கிருந்து செல்வதானாலும் ஹோஸ்பேட்டை சென்றுதான் ஹம்பி செல்லவேண்டும். ஹோஸ்பேட்டையிலிருந்து ஹம்பிக்கு எட்டு கிலோ மீட்டர்தான்.
சித்ரதுர்க்காவிலிருந்து ஹோஸ்பேட்டை செல்ல, தக்காணப் பீடபூமியின் மையத்தில் அமைந்த, நீண்ட செம்மண் நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டும். வழியெங்கும் கால்நடைகள் மந்தை மந்தையாய் மேய்ந்துகொண்டிருக்கும். வேளாண்மை என்று அந்நிலப்பகுதிகளில் பெரிதாய் ஏதுமிருக்காது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை, செம்மண் நிலப்பரப்பாய் பரந்து விரிந்திருக்கும்.
ஹோஸ்பேட்டையை நெருங்கியவுடன், நம் நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான துங்கபத்திரை அணையை முதலில் பார்க்கலாம். அணைக்கரையை ஒட்டித்தான் நெடுஞ்சாலை செல்லும். மலைத்தொடரே அணைக்கரைபோல் அமைந்த இயற்கையான அணைகளில் துங்கபத்திரை அணையும் ஒன்று.
துங்கபத்திரை அணையில் நீர் நிரம்பியிருக்கும்போது பார்த்தால், “நிலநடுக்கடலோ இது” என்று வியப்போம். துங்கபத்திரை அணைக்கரையைத் தாண்டிச் செல்வதற்கு முன்பு, மலைமீது ஏறித்தான் செல்லவேண்டும். வட இந்தியா, தென்மாநிலங்களை இணைக்கும் மையச் சாலை என்பதால், எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே இருக்கும். ஆனால், தற்போது மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைத்திருக்கிறார்கள்.
ஹம்பியில் ஓரிரு விடுதிகள் இருந்தன. அவற்றை அப்புறப்படுத்தும்படி, தொல்லியல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் ஹம்பியில் தங்கும் வாய்ப்பு குறைவே. எனவே, ஹோஸ்பேட்டையில் தங்கிக் கொள்வது நல்லது. ஹோஸ்பேட்டையில் சிறிய ரயில் நிலையமும் உள்ளது. ஆனால், அது அடிக்கடி இயங்காது.
கிருஷ்ணதேவராயர் உருவாக்கிய நகரம்தான் நாகலாபுரம். அந்த நாகலாபுரம்தான் இன்றைய ஹோஸ்பேட். படையெடுப்புகளால் சிதைக்கப்பட்ட நாகலாபுரம், பிற்பாடு மீண்டும் தலையெடுத்தது. ஹோஸ்பேட்டையில் ஹம்பியைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதற்காக, இருசக்கர வாகனங்களை வாடகைக்குத் தருகிறார்கள்.
ஹம்பிக்குள் இருக்கிற பல்வேறு பகுதிகளில் கமலாபுரமும் ஒன்று. இந்த ஊரின் பெயரில் ஏரி ஒன்று இருக்கிறது. அது பறவைகள் சரணாலயமாகத் திகழ்கிறது. அதுவும் விஜயநகர அரசர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிதான். ஏரிக்கரையில் கல்லிருக்கைகள் அமைத்திருக்கிறார்கள். ஒரு மாலை நேரத்தில், அங்கே அமர்ந்து நீர்க்காட்சிகளைக் கண்டு களிக்கலாம்.
இங்கு தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும், பாறைக்குன்றுகளும் அடர்ந்திருக்கின்றன. செல்லும் இடம் எல்லாம் கோவில் இடிபாடுகளும், கட்டட மீதங்களுமாய்க் கிடக்கின்றன. யுனெஸ்கோ நிறுவனத்தின் காப்புச் செய்யப்பட்ட தொல்லிடங்களில் ஒன்றாக ஹம்பி இருக்கிறது.
துங்கபத்திரை நதியின் பழைய பெயர் பம்பை. பம்பை என்பதிலிருந்துதான் ஹம்பி என்ற பெயரே தோன்றியது.
ஹம்பி மலையில், மால்யவந்த ரகுநாதர் ஆலயம் இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால், ஹம்பி பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்தக் காட்சியும் காணக்கிடைக்கும். பாறைக்குன்றுக் கூட்டங்களும், தென்னையும், வாழையும், வயல்களும் துங்கபத்திரையின் வளைந்த ஓட்டமுமாய்க் கண்ணுக்கினிய காட்சிகள் அவை.
ஹம்பியின் கடைவீதி பகுதிக்கு வந்தால், விருபாக்சர் ஆலயம் இருக்கிறது. அது விஜயநகரப் பேரரசு தோன்றுவதற்கு முன்பே இருந்த சிவாலயம். விருபாக்சர் ஆலயக் கோபுரத்தின் உயரம் 160 அடி. அக்கோபுரத்தின் எதிரே நீண்ட அகன்ற கடைவீதி இருக்கிறது. விஜயநகர அரசர்கள் காலத்தில், பேரரசின் தலைமைக் கடைவீதியும் அதுதான். விஜயநகர அரசர்கள் காலத்தில் பொன்னும் மணிகளும் விற்கப்பட்ட தெரு அது.
விருபாக்சர் ஆலயத்திற்குக் கிழக்கே அச்சுதராயர் ஆலயம் உள்ளது. அங்கிருந்து சற்றே நடந்தால், விட்டலர் ஆலயத்தைக் காணலாம். கலைச்சிற்பங்கள் மிகுந்த விட்டலர் ஆலயத்தைக் காண்பதற்குக் கண்கோடி வேண்டும் என்றே கூறவேண்டும். கிருஷ்ணர் ஆலயமும், அதன் எதிரேயுள்ள கடைவீதியும், அக்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகங்கள் நிகழ்ந்த இடங்களாகும்.
ஹம்பியின் இன்னொரு பகுதியில், அரண்மனை இடிபாடுகள் கோட்டைச் சுவர்கள் ஆகியவற்றைக் காணலாம். அரசிகள் குளிப்பதற்காகக் கட்டப்பட்ட நீச்சல்குளம் இன்றைக்கும் சிதிலமின்றிக் காணப்படுகிறது. அரச குடும்பப் பெண்களின் மனமகிழ் கூடமான தாமரை மண்டபம் பேரழகுடையது. யானைக்கூடம், படைக்கொட்டடி, காசு அடித்த பட்டறை, மசூதிகள், கருவூலக்கூடம், நவராத்திரி விழா மேடை, படிக்குளம், நிலவறைச் சிவனாலயம், ஒற்றைக்கல் நரசிம்மர் சிலை, ஒற்றைக்கல் விநாயகர் மண்டபம், சமண ஆலயங்கள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கருவூலம், அருங்காட்சியகம், காவல் கோபுரம் என, ஹம்பியில் தங்கியிருந்து பார்ப்பதற்கு மூன்று நாட்கள் தேவைப்படும்.
துங்கபத்திரை நதியில் குளிக்கலாம். பண்டரிபுரத்துப் புரந்தரதாசர் இராம கீர்த்தனைகள் இயற்றிய மண்டபமும் ஆற்றங்கரையில் இருக்கிறது. அது புனிதப்பகுதியாகக் காப்பு செய்யப்பட்டுள்ளது.
கமலாபுரத்திற்கு அருகில் உள்ள பட்டாபிராமர் ஆலயமும் மிகப்பெரியது. அக்கோவில் அரசகுடும்பத்தினர் வழிபடுவதற்கு மட்டுமே என்று கட்டப்பட்டது.
ஹம்பியில் மூன்று நான்கு நாட்கள் தங்கிப்பார்க்கும் விதமாக, நன்கு திட்டமிட்டுச் செல்லவேண்டும். கார், ஜீப் போன்ற வாகனங்களில் செல்வது நல்லது. தங்கும் விடுதிகள் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாயில் கிடைக்கும். வாழ்நாளில் ஒருமுறையேனும் காணவேண்டிய தலம் ஹம்பி.
- மகுடேசுவரன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement