Advertisement

பாகுபாடு வேண்டாம் ப்ளீஸ்!

”நம்மிடம் போதுமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், பாலின சமத்துவம், பாலின வன்முறை போன்ற விஷயங்கள் வரும்போது, சமூகம் அதை முழுமனத்தோடு ஏற்பதில்லை,” என்று பேசுபவர் குலிகா ரெட்டி. சென்னையில் படித்து வளர்ந்து, அமெரிக்காவில் சட்டக் கல்வி பயின்ற இவர், மனித உரிமை வழக்குகளில் ஆர்வமுள்ளவர்.

“ஆண், பெண்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை இட்டு நிரப்ப சரியான வழி, கல்விதான். பாடத் திட்டத்துடன் பாலின சமத்துவத்தையும் சொல்லித்தர வேண்டும். முதலில் பாலின வேறுபாடு இருக்கிறது என்பதை மாணவர்களுக்குப் புரிய வைத்தாலே போதும். சமத்துவம் என்றால் என்ன என்பது தன்னால் விளங்கிவிடும். அதைத்தான் நாங்கள் செய்துவருகிறோம்,” என்னும் குலிகா, இதற்காக ஓர் அமைப்பை சென்னையில் உருவாக்கி நடத்தி வருகிறார். 'சமத்துவத்துக்கான பள்ளி' (Schools of Equality) என்ற அமைப்பின் மூலம், பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறார். ஓவியங்கள் மற்றும் கலந்துரையாடல் மூலமாக, விளையாட்டு ரீதியில், மாணவர்களிடம் சமத்துவம், சம நீதி, பன்மைத்தன்மை ஆகியவற்றை எடுத்துவைக்கிறார்.
மாணவர்களை ஒருசில திரைப்படங்களையும், கார்ட்டூன் படங்களையும் பார்க்க வைக்கிறார். இசையைக் கேட்கச் சொல்கிறார், கட்டுரைகள் எழுதச் சொல்கிறார். பின்னர் இவற்றையெல்லாம் மிக நுணுக்கமாக ஆய்வுக்குட்படுத்தி, அவற்றில் உள்ள பாலின பாகுபாடுகளை விளக்குகிறார். நமக்குத் தெரியாமலேயே நமக்குள் பதிந்துபோகும் பல்வேறு தவறான சிந்தனைகளைப் புரிந்துகொள்ள, இந்த வகுப்புகள் பயனுடையதாக இருக்கின்றன.
ஆணைப் பற்றியும், பெண்ணைப் பற்றியும், சமூக ஊடகங்களிலும் வெகுஜன பரப்பிலும் பரவியுள்ள கருத்துகளை பிரித்துப் புரிய வைப்பதே, 'சமத்துவத்துக்கான பள்ளி'யின் முக்கிய நோக்கம்.
“மிகச் சின்ன வயதிலிருந்தே பாலின பாகுபாடு தொடங்கிவிடுகிறது. இரண்டு வயது குழந்தைகள்கூட, அப்பா சமையலறையில் இருப்பதை விநோதமாகவும், அம்மா சமையலறையில் இல்லாதிருப்பதை ஆச்சரியத்தோடும் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அதனால், மாற்றம் அந்தச் சிறு வயதிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். சினிமாவிலும், தொலைக்காட்சிகளிலும், விளம்பரங்களிலும் காட்டப்படும் பெண்களைப் பற்றிய காட்சிகளை முழுமையாக நம்பக்கூடாது. அதைக் கேள்வி கேட்கவேண்டும் என்று சொல்லித்தருகிறோம்.” என்கிறார் குலிகா ரெட்டி.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement