Advertisement

பேச்சுத் திறனால் உயர்ந்த மாணவர்

''சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாது. ஆனால், அது பெரிய குறையாக உறுத்தியது இல்லை. தவறாகப் பேசித்தான், சரியானவற்றை கற்றுக் கொண்டேன்” என்கிறார் குடிமைப்பணிகள் (சிவில் சர்வீசஸ்) தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்துக்குக் காத்திருக்கும் 25 வயது பூ.கோ. சரவணன்.

“அப்பா கேஸ் ஸ்டவ் ரிப்பேர் செய்யும் மெக்கானிக். காக்கிச்சட்டையில்தான் எப்பவும் அவரைப் பார்க்க முடியும். அன்றாட வாழ்க்கைத் தேவைக்கே பணம் புரட்டுவது கஷ்டம். அதில் புத்தகங்கள் வாசிப்பது எட்டாக்கனிதான். ஆனாலும், அப்பா பழைய புத்தகக் கடைகளிலிருந்து புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லி கேட்பார். புத்தகங்களை வாசித்துவிட்டு, அதை அப்பாவிற்குக் கதையாக சொல்வேன். என்னுடைய பேச்சுத்திறன் வளர ஆரம்பித்தது.
அம்மாவுக்கு அரசுப் பள்ளியில் வேலை கிடைத்தவுடன், பொருளாதாரம் தலைநிமிர ஆரம்பித்தது. வாசிப்பு பழக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. என் பேச்சின் மீது அம்மாவிற்கு அதிக நம்பிக்கை. அதனால அம்மா எழுதிக் கொடுத்து, என்னை சின்ன வயசுல மேடையில ஏத்திட்டாங்க. இரண்டு, மூணு முறை நான் அம்மா எழுதி கொடுத்ததை அப்படியே பேச முயற்சி செஞ்சேன். ஆனா எனக்கு மனப்பாடம் செஞ்சு பேசறதுல பிரச்னை இருந்துச்சு. இதைப் பார்த்த அப்பா, என்னை இனிமே சொந்தமா எழுதி பேசணும்னு சொல்லிட்டாங்க.
அதுக்கு அப்பறம், தமிழகத்துல எங்க பேச்சுப்போட்டி நடந்தாலும் நான் போயிடுவேன். என்னோட பள்ளியும் என்னோட ஆர்வத்துக்குத் தடை சொன்னது கிடையாது. தமிழ் மீடியத்துல தான் படிச்சேன். ஸ்கூல் படிக்கும்போது, மேடை நாடகம் போடறது, கவிதை எழுதி வாசிக்கிறதுன்னு படிப்பைத் தாண்டி, நிறைய விஷயங்கள் செய்யப் பிடிச்சது.
11ம் வகுப்பு வேற ஊருக்கு போனேன். எப்படியாவது 12ம் வகுப்புல நல்லா மார்க் வாங்கணும்னு சேர்த்தாங்க. ஆனா எனக்கு ஆங்கிலம் சரியா வரலங்கிறது, அங்கிருக்கிற பசங்ககூட பழகும்போது தெரிஞ்சது. தப்பும் தவறுமா ஆங்கிலம் பேசுவேன்.
சிலர் என்னை கிண்டல் பண்ணுவாங்க. ஆனா, அது எதுவுமே என்னைப் பாதிக்கல. எனக்கு நிறைய படிக்கணும், பேசணும், செய்யணும் அவ்வளவுதான். அதனால, நிறைய தேடிப் படிக்க ஆரம்பிச்சேன். தேர்வில் முதல் மதிப்பெண் வாங்குவேன்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா நல்லா மதிப்பெண் கிடைச்சா போதும்னு நம்பினேன். அப்படியே நடந்தது. சென்னை கிண்டி அண்ணா பொறியியல் கல்லூரியில படிக்கலாம்ன்னு இருந்தேன்.
ஐ.டி. துறை, கட்டடத் துறை, இப்படி நிறையத் துறைகள்ல சேர வாய்ப்புக் கிடைச்சது. ஆனா விவசாய பின்னணியில வந்ததால, விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் துறையில சேர்ந்தேன். விவசாயத்துல தொழில்நுட்ப விஷயங்களை கத்துக்கிட்டு, அதுல நிறைய விஷயங்கள் செய்ய முடியும்ன்னு நம்பினேன்.
கிராமத்திலிருந்து சென்னைக்கு வர்ரவங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் எனக்கும் இருந்தது. ஆனா அதை எல்லாத்தையும் நான் ரொம்ப பாசிட்டிவா பார்த்தேன். ஒருநாளும் நான் மத்தவங்க மாதிரி நாம இல்லையேன்னு நினைச்சது கிடையாது. இந்த அறிவை எனக்கு கொடுத்தது புத்தக வாசிப்புதான்.
கல்லூரியும், கன்னிமாரா நூலகமும் என்னோட வாழ்க்கையில மிக முக்கிய திருப்புமுனையை கொடுத்துச்சு. வரலாறு எனக்கு மிகவும் பிடித்த துறை. அதனால நிறைய மாணவர்களுக்கு வரலாறு தொடர்பான தகவல்களை கொடுக்க விரும்பினேன். அது ஒரு புத்தகமாகவும் வெளி வந்திருக்கு.
கல்லூரியில நிறைய புதிய விஷயங்களைச் செய்ய ஆரம்பிச்சேன். பல ஆளுமைகளை கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு பேசுவதற்கு ஏற்பாடு செய்து, என்னைப்போல கிராமங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வைத்தேன்.
அதேபோல, கல்லூரியில சிவில் பிரிவுக்கு இருந்த பாடப்புத்தகத்தை மாணவர்களுக்குப் புரியும்விதமாக தமிழில் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தேன்.
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் துறையில படிச்சாலும், என்னால சில விஷயங்கள்தான் பண்ண முடியும். நிறைய கல்லூரிகளில், மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்க என்னை பேச கூப்பிட்டார்கள். நிறைய கல்லூரி மாணவர்களைச் சந்தித்து, அவர்களுடன் நட்புக் கொண்டேன். மேடைப் பேச்சுகள் எனக்குத் தலைமைப் பொறுப்பு மீதான நம்பிக்கையைக் கொடுத்தது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத முடிவெடுத்தேன். அதற்காக கடுமையாகப் படித்து, வெற்றிபெற்றிருக்கிறேன். ஐ.ஆர்.எஸ்.
இடம் கிடைத்து இருக்கிறது. இன்னும் சில மாதஙகளில் பயிற்சி முடித்து நினைத்த காரியங்களை செய்ய தொடங்குவேன்''.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement