Advertisement

எல்லாரையும் கொண்டாடுவோம்!

இரண்டரை நாட்கள் நானும், பாலுவும், வாலுவும், ஞாநி மாமாவும் ஊர் சுற்றிவிட்டு வந்தோம். ஊர் சுற்றுவது ஏன் மாமாவுக்குப் பிடித்திருக்கிறது என்று இப்போதுதான் புரிந்தது. விதவிதமான ஊர்கள். விதவிதமான மனிதர்கள். அதுவே படு சுவாரஸ்யமாக இருக்கிறது.
விமானத்தில் திருவனந்தபுரத்துக்குப் போனோம். விமான நிலையங்கள், ரயில், பஸ் நிலையங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன. பஸ், ரயில் நிலையங்களில் இல்லாத நிறைய வசதிகள் அங்கே இருக்கின்றன. சுமையை எடுத்துச் செல்ல டிராலிகள். சுத்தமான கழிப்பறைகள். காத்திருக்கும்போது, உட்கார்ந்திருக்க வசதியான நாற்காலிகள். முழுக்க ஏர் கண்டிஷனிங் செய்த வசதியான கூடங்கள். ஏன் இது மாதிரி, பஸ், ரயில் நிலையங்களிலும் செய்யக்கூடாது?
முதலில், மாமாவின் நண்பர் சங்கர் வீட்டுக்குப் போனோம். அவர் செய்தித்தாளை மடித்து, ஒரு தொப்பி செய்து காட்டினார். அப்புறம் அந்த தொப்பியிலேயே சின்ன சின்ன வித்தியாசமான மடிப்புகள் செய்து, அதையே மூன்று விதமான தொப்பிகளாக மாற்றிக் காட்டினார்.
“இதைத்தான் ஃபூல்ஸ்கேப் பேப்பர் என்கிறார்களா?” என்று பாலு கேட்டான். கடையில் விற்கும் ஃபூல்ஸ் கேப் பேப்பர் என்பது எட்டரை அங்குல அகலம், 14 அங்குல நீளம் இருக்கும் என்றது வாலு. அந்த பேப்பரில் கழுதை மாதிரி காதுகள் வைத்து, உச்சியில் கூம்பு வைத்து தொப்பி செய்தால், அதுதான் ஐரோப்பிய அரசவைகளில் ஃபூல் எனப்பட்ட கோமாளிகள் போட்டுக் கொண்டிருந்த ஃபூல்ஸ் கேப். சங்கர் மாமா, பேப்பர், மெல்லிய அட்டை இவற்றில் பட்டாம் பூச்சி, டிரே எல்லாம் செய்து காட்டினார். அவர் வீட்டு கடிகாரத்தில் ஒரு வாசகம் இருந்தது- 'காலத்தால் அழியாதது நம் குழந்தைத்தனம்'. ரொம்ப சரி. அறுபது வயதுக்கு மேல் அவர் குழந்தை மாதிரி தொப்பி செய்து, சந்தோஷமாக எங்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அடுத்து ஞாநி மாமா, தன் நண்பர் ஓவியர் சஜீதா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அறை நிறைய முழு சுவரையும் அடைக்கிற மாதிரி விதவிதமான ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தார். “எதுவும் எனக்குப் புரியவில்லை” என்றான் பாலு. “புரிய வேண்டாம். பிடித்திருக்கிறதா என்று மட்டும் யோசி” என்றார் மாமா. சில ஓவியங்கள் பிடித்திருந்தன. சஜீதா எங்களைக் காரில் ஏற்றிக் கொண்டு, 40 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
சென்னை வெயிலில் இருந்து வந்திருந்த எங்களுக்கு, அந்த இடம் படு குளுமையாக இருந்தது. அமைதியாக ஒரு சிற்றாறு ஓடிக் கொண்டிருந்தது. அதன் குறுக்கே மறு கரைக்குச் செல்ல ஒரு பாலம். இந்தக் கரையில் சஜீதாவின் ஓவிய வீடு. அந்த வீட்டு மாடி பால்கனியில், கைப்பிடி சுவரே இல்லை. அதற்கு பதில் கம்பியில் முழுக்க நாற்காலியாகப் போட்டிருந்தது. முதுகுப் பக்க கம்பு அப்படியே கைப்பிடி சுவராகிவிடும். நாம் உட்காரவும் இருக்கையாகிவிடும்.
சென்னையில் கேட்டிராத பறவைகள், பூச்சிகள் குரல்களையெல்லாம் அங்கே கேட்டேன். அதற்குப் பின்னர், மாமாவுடன் கவிஞர் சுகுமாரனைப் போய் பார்த்தோம். அவருடைய சில கவிதைகளை மாமாவின் நாடகக்குழுவினர் நாடகமாக நடித்துப் பார்த்திருக்கிறேன். எனக்குப் புரியாவிட்டாலும், ஒரே ஒரு கவிதை எனக்குப் பிடித்திருந்தது. ஓடுகிற ஆற்றுத் தண்ணீரில் அள்ளி, ஒரு கைப் பள்ளத்தில் தேக்கினால் அது ஓடாமல் கையில் நிற்கிறது. திரும்ப கையில் இருக்கும் நீரை ஆற்றில் சேர்த்தால், ஓடும் நீரில் எது என் கை நீர்? எல்லாம் கலந்துவிடுகிறது என்ற அர்த்தம் வருகிற மாதிரி இருக்கும் அந்தக் கவிதை.
காலையில் திருவனந்தபுரத்தில் சுற்றியபோது, வழி நெடுக கோவில்களில் பக்திப் பாடல்களை ஒலிபெருக்கியில் பரப்பிக் கொண்டிருந்தார்கள். மதியத்துக்கு மேல் சுற்றியபோது கவனித்தேன். அங்கே ஒலிபெருக்கிகளில் அரசியல் கேட்டுக் கொண்டிருந்தது. அடுத்து நாகர்கோயிலுக்கு ரயிலில் போனோம். அங்கே இருந்த எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) வேலையே செய்யவில்லை. ரயிலில் இரண்டு மணி நேரப் பயணம் போனதே தெரியவில்லை. சுற்றி விதவிதமான மனிதர்கள். கொஞ்சம் தமிழ்க் குரல்கள்; கொஞ்சம் மலையாளக் குரல்கள்; கொஞ்சம் ஹிந்தி, நேபாளி குரல்கள்.
நாகர்கோயிலில், சென்னையைவிட மோசமான வெயில். கவிஞர் மாமாவுக்குத் தெரிந்த ஆட்டோ டிரைவர் சிவாவின் வண்டியில் போனோம். இறங்கும்போதுதான் தெரிந்தது. சிவா மாமாவுக்கு போலியோவினால் இரு கால்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உற்சாகமாக வண்டி ஓட்டுகிறார். உடம்பைவிட மனசு உறுதியாக இருப்பதுதான் அவசியம் என்று புரிந்தது.
மாமா எங்களை காலச்சுவடு கண்ணன் மாமா வீட்டுக்கு சிற்றுண்டிக்கு அழைத்துச் சென்றார். சுடச் சுடக் குழிப் பணியாரம் சாப்பிட்டோம். நான் மனசுக்குள் நினைத்ததை, பாலு வெளியே சொல்லிவிட்டான். “ஏன் மாமா எங்க வீட்டுல மட்டும் தெனமும் அதே இட்லி, வெங்காயச் சட்னி செய்யறாங்க?” என்றான். அடுத்து நர்ஸ் ரேஷ்மியின் திருமணத்துக்குப் போனோம்.
நான் நிறைய என் உறவுக்காரர்கள்வீட்டு திருமணங்களுக்குப் போயிருக்கிறேன். நாதசுரம், தவில், இசைக் கச்சேரி, மந்திரங்கள் என்று ஒரே கலகலப்பாக இருக்கும். இங்கே பார்த்த திருமணம் வித்தியாசமாக இருந்தது. ஆர்கன் இசையுடன் ஒரு பாட்டு, ஒரு ஜெபம், திரும்ப ஒரு பாட்டு, ஒரு ஜெபம். மணமக்களைப் பார்த்து, திருமணம் செய்துகொள்ள சம்மதமா என்று கேட்டார் பாதிரியார். சம்மதம் என்றதும், எல்லாரும் கைதட்டினார்கள். திரும்ப ஒரு பாட்டு.
மறுபடியும், ரயிலில் திருவனந்தபுரம் வந்து விமானத்தைப் பிடிக்க ஓடோ ஓடு என்று ஓடினோம். எதிர்பாராத மழை! எல்லாரும் தொப்பலாக நனைந்தோம். விமான நிலைய வாசலிலேயே ஈரத் துணியைக் கழற்றி, உலர்ந்த உடையை பையிலிருந்து எடுத்து மாற்றிக் கொண்டது, ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
சுமார் 60 மணி நேரத்துக்குள் எத்தனை விதமான அனுபவங்கள். கண்ணையும் காதையும் திறந்துவைத்துக் கொண்டால், கிடைப்பதற்கு நிறைய இருக்கின்றன. இதை மாமாவிடம் சொன்னதும் அவர் சொன்னார், -“வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு வெரைட்டியை நாம் பார்க்கமுடியாது. அடுத்து வடகிழக்கே நாம் போகவேண்டும். இன்னும் பிரமிப்பாக இருக்கும். இந்தியாவில்தான் பலவகை கலாசாரங்கள்; பலவகை பழக்க வழக்கங்கள்; பல வகையான மனிதர்கள்!”.
இதை நாம் கொண்டாடவேண்டாமா? என்று கேட்டேன். “ஐ.நா. சபையே இதைக் கொண்டாடச் சொல்கிறது.
மே 21 உலகக் கலாசாரப் பன்மைக்கான தினம்'' என்றது வாலு. “கலாசாரப் பன்மை இயற்கையிலேயே இருப்பதுதானே. எல்லாவற்றுக்கும் கொண்டாட்டமா? அதற்கு ஓர் அளவு கிடையாதா?” என்றான் பாலு.
“அளவுக்கே ஒரு கொண்டாட்டம் இருக்கிறது” என்றார் மாமா.
“நீளம் என்றால் மீட்டர்; கனம் என்றால் கிலோகிராம்; நேரம் என்றால் நொடி. இப்படி ஒவ்வொன்றுக்கும் அளவிட அடிப்படை இருக்கிறதல்லவா. இந்த அளவியலுக்கு மெட்ராலஜி என்று பெயர். 1865ல் மே 20ம் நாள் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, பொது அளவுகளை நிர்ணயித்தன. அந்த நாளை அளவியல் நாளாக கொண்டாடுகிறோம்.” என்றார் மாமா.
“எல்லாவற்றையும் கொண்டாடுவோம். எல்லாரையும் கொண்டாடுவோம்” என்றது வாலு.

வாலுபீடியா 1: கோமாளி தொப்பி என்பது, பளிச் வண்ணங்களுடனும், மணிகளுடனும் இருக்கும். இதைச் செய்ய பயன்படுத்தும் பேப்பரின் அளவு ஃபூல்ஸ்கேப். முதன்முதலில், 1479ல் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. இப்போதும், அமெரிக்காவில் இந்த அளவு பேப்பர்தான் லீகல் பேப்பர் என்று அழைக்கப்படுகிறது.
வாலுபீடியா 2: ஆப்கானிஸ்தானில், பாமியன் பள்ளத்தாக்கில் 1800 வருடங்கள்முன்னர் குடையப்பட்ட புத்தர் சிலைகள் தங்கள் மத நம்பிக்கைக்கு விரோதமானவை என்று சொல்லி, 2001ல் தாலிபான் அமைப்பு குண்டுகள் வைத்து தகர்த்தது. இதையடுத்துத்தான், உலகத்தில் கலாசாரப் பன்மை பாதுகாக்கப்படவேண்டும்; வெவ்வேறு பண்பாடுகளைப் பின்பற்றுவோர் மற்ற பண்பாடுகளை மதிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த, யுனெஸ்கோ உலகக் கலாசாரப் பன்மை கொண்டாட்ட நாளை அறிவித்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement