Advertisement

உனக்கே உனக்காக கண்ணே!

தயங்கியபடி வந்து நின்றாள் கமலி.
தினசரியிலிருந்து விழிகளை எடுக்காமல், ''என்ன...'' என்றான் வசந்த்.
''கீரை, மோர்க்குழம்பு செய்திருக்கேன்... சுஜி, மோர்க் குழம்பு சாப்பிட மாட்டா; அவளுக்கு கிண்ணத்துல பருப்பு வெச்சிருக்கேன். உங்களுக்கு, பிளாஸ்க்குல காபி இருக்கு... சுஜி தானா குளிப்பா; இருந்தாலும், ஒரு கண்ணு வெச்சுக்கணும். அப்புறம், ரொம்ப நேரம் கார்ட்டூன் பாக்க விடாம, கான்வாஸ் பொருட்களையும், டிராயிங் நோட்டையும் எடுத்து, கையில கொடுத்துடுங்க. மதியம், 2:00 மணிக்கு, கொஞ்ச நேரம் தூங்க வையுங்க; அடையும், தக்காளி சட்னியும் செஞ்சு வெச்சிருக்கேன்... 4:00 மணிக்கு சாப்பிட குடுத்துடுங்க,'' என்று முடிப்பதற்குள், சற்று எரிச்சலுடன், ''தும்மல் வந்தா தலையில தட்டணும்; இருமல் வந்தா வெந்நீர் தரணும்; தூக்கம் வந்தா பாட்டு பாடணும் அவ்வளவு தானே... நீ கெளம்பு,'' என்றான்.
''இப்படி கோபமா பேசினா, எப்படி கிளம்பறது...''
''சரி, ஹிஹி... நான் பாத்துக்கறேன்; ஹிஹி... கவலைப்படாதே; ஹிஹி... போய்ட்டு வா...''
பெருமூச்சு விட்டாள் கமலி. உள்ளே போய் சமையலறையை சீராக்கியவள், அடுத்த சில நொடிகளில் தயாராகி கிளம்பினாள்.
நல்ல வேளையாக, சுஜி எழுந்திருக்கவில்லை. இல்லையென்றால், 'நீ ஏம்மா ஆபீஸ் போறே... எப்பவும் போல, அப்பா போகட்டும்; நீ வீட்டுல இரும்மா... எனக்கு சம்மர் லீவு விட்டாச்சு...' என்று, அழுது அமர்க்களப்படுத்தியிருப்பாள்.
'நாம் எதை விரும்புவதில்லையோ, அந்த இடத்திற்கு தான், இயற்கை நம்மை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறது...' என்று, எதிலோ படித்தது, அவளுக்கு நினைவுக்கு வந்தது.
அமைதியான இல்லம் தான், அவளுக்கு விருப்பம். எளிய சமையல், சிறு தோட்டம், வசந்த்துடன் அன்பான தாம்பத்யம், சுஜியிடம் பேரன்பு, கடைவீதி, கவிதைப் புத்தகம், கோலங்கள் என்று, சிக்கலற்ற வாழ்வில் தான், ஆனந்தம் இருக்கிறது என்று நம்பினாள். அவனும், அவளைச் சரியாகப் புரிந்து, நேசித்து, வீட்டின் சொர்க்கத்தை நிச்சயப்படுத்தினான்.
ஆனால், யாரும் எதிர்பார்க்காதபடி, அவனுடைய அமெரிக்க கம்பெனி, மெல்ல மெல்ல, தன் சுவாசத்தை குறைத்து, ஐ.சி.யூ.,வில் விழுந்து, கடைசியில் உயிரையும் விட்டு விட்டது. ஆறு மாதங்களாக, அவனும் பல கம்பெனிகளின் நேர்காணலுக்கு சென்று விட்டான். எதுவும் சரியாக அமையவில்லை.
ஏதோ ஒரு சிறு திறவுகோல் போல, அவள் வாங்கிய எம்.எஸ்.சி., மாத்ஸ் டிகிரியால், அருகில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில், கவுரவமான வேலை கிடைத்தது.
வசந்தை, உண்டு இல்லை என்று ஆக்கினாள், சுஜி.
'கான்வாஸ் வேணாம்; 'டிவி'யில் டோரிமானும், டோராவும் தான் பாப்பேன்...' என்று அடம் பிடித்தாள்; 'பருப்பு நீ சாப்பிடு; எனக்கு பாஸ்தா செய்து கொடு...' என்று முகம் தூக்கினாள். 'அம்மா மாதிரி பாடு, அப்ப தான் நான் தூங்குவேன்; நீ பாடறது பேய்ப்பாட்டு மாதிரி இருக்கு...' என்று கத்தினாள். தரையெல்லாம் தண்ணீரை கொட்டினாள்.
வெறுத்துப் போனான், வசந்த்.
''இப்போ என்ன தான்டி வேணும் உனக்கு?''
''பாட்டி வீட்டுக்கு போகலாம்...''
''ஏன்... அங்க என்ன இருக்கு ஸ்பெஷலா...''
''பாட்டிக்கு, 'ஸ்மைலி' தோசையும், சீஸ் ரோலும் செய்ய தெரியும்.''
''அப்புறம், உங்க அம்மா வர்ற வரையிலும் ஒழுங்கா இருப்பியா?''
''சரி,'' என்று, அவனை முறைத்து பார்த்தபடி, பதில் சொன்னாள் சுஜி.
மூன்று தென்னை மரங்கள், ஒரு கொய்யா மரம், வாசல் பக்க வேப்ப மரங்களுக்கு நடுவில், அம்மாவின் வீடு, குளிர்ச்சியாக இருந்தது. பக்கத்து காலனியிலிருந்து டியூஷன் படிக்க வந்திருந்த சிறுவர்கள், படித்து முடித்து, வெளியே வர, அவர்களை வழி அனுப்புவதற்காக வந்த அம்மா, சுஜியைப் பார்த்ததும், மலர்ந்த முகத்துடன் தூக்கி,''வாடி என் கண்ணு, ராஜாத்தி...'' என்று கொஞ்சியவள், மகனைப் பார்த்து, ''உள்ளே வாடா...''என்றாள்.
பாட்டியின் கழுத்தை கட்டி கொஞ்சிய சுஜியிடம், ''அம்மா ஸ்கூலுக்குப் போயிருக்காளா கண்ணா... நீ சாப்பிட்டியாடி ராஜாத்தி! பூனை தோசை செய்யட்டுமா...'' என்று கொஞ்சியவாறு, ''வசந்த்... குடிக்க மோர் தரட்டுமா...''என்றாள்.
பத்து நிமிடங்களில் வயிறும், மனமும் நிறைய, பாட்டி வாங்கி வைத்திருந்த நூல் கண்டு, ஜிகினா, வளையம் மற்றும் கம் எடுத்து, அணிகலன்கள் செய்யப் போனாள் சுஜி.
பெருமூச்சு விட்ட வசந்த், சோபாவில் சாய்ந்து, கண்களை மூடினான்.
அருகில் வந்து உட்கார்ந்த அம்மா, ''என்னப்பா வேலை கிடைக்கலன்னு கவலைப்படுறியா... பொறுமையா இரு; வேலை கிடைக்கும். இப்ப, கமலிக்கு வர்ற சம்பளம், பேங்க் வட்டின்னு, செலவுக்கு சரியாத் தானே இருக்கு...'' என்றாள், ஆறுதலாக!
அவன், மறுபடியும் பெருமூச்சு விட்டு, ''இந்த சுஜி ரொம்ப படுத்துதும்மா... தினமும் இதோட பெரிய பிரச்னையா இருக்கு.''
''ஏன் அவ என்ன செய்றா...''
''ஆமாம்மா... 'அம்மா மாதிரி கதை சொல்லு; இட்லி இப்படி செய்; அந்த சேனல் வேணாம், அது இது'ன்னு ஒரே தொல்ல...'' என்றான், அலுப்புடன்!
ஒரு கணம், அவனையே பார்த்தாள் அம்மா. பின், ''வசந்த்... 50 வருஷங்களுக்கு முன், வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள், வீட்டை விட்டு வெளியே வந்து, வேலை, சம்பாத்தியம்ன்னு, புது அத்தியாயங்கள எழுத ஆரம்பிச்சாங்க. டீச்சர், நர்ஸ், பேங்க், இன்ஷ்யூரன்ஸ், ரயில்வே, தலைமை செயலகம், எக்ஸ்போர்ட்ன்னு மெல்ல மெல்ல, வேலைவாய்ப்புகள் பெண்களுக்கு கிடைக்க, ஒரு தலைமுறை வாழ்க்கையே மேம்பட ஆரம்பிச்சது...
''அப்போ, ஆண்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட ஆரம்பிச்சது... வீட்டுல வேலைகளை அவங்க பகிர வேண்டிய நிலை ஏற்பட்டதும் தான், அம்மி, ஆட்டுக்கல் போய் மிக்சி, கிரைண்டர் வந்தது; எலக்ட்ரிக் குக்கர், காஸ் ஸ்டவ், ரைஸ் குக்கர், வாஷிங்மிஷன், பிரிஜ்ன்னு நிறைய கண்டுபிடிப்புகள் காலத்தின் கட்டாயமா, மார்க்கெட் முழுசும் இறங்குச்சு... ஏன், தையல் மிஷன்ல கூட எம்பிராய்டரி, எலெக்ட்ரிக் ஸ்டிட்ச், சிக்
சாக் மிஷின்னு சுலபமா தைக்கிற மாடல்கள் வந்தது...
''இப்ப, அடுத்த காலக்கட்டம்... சமமான கல்வி வாய்ப்பை, சரியா பயன்படுத்தி, கடினமான வேலைகளை கூட ஏத்துக்குறாங்க, பெண்கள். சாப்ட்வேர் புரோக்ராம் எழுதுறது, மண்டல மேலாளர் பொறுப்பு எடுத்துக்கிறது, முப்பது வயசுலயே டீம் லீடர், கல்லுாரி தலைவர், ஆர்கானிக் தோட்ட நிர்வாகின்னு எத்தனை பெண்கள பாக்கிறோம்... அதனால, கமலி மாதிரி திறமையான பெண்கள், வெளி வேலைக்கு போகும்போது, வசந்த் மாதிரி ஜென்டிலான ஆண்கள், வீட்டை அருமையா நிர்வாகம் செய்யலாமே... மனசு வெச்சா முடியும்,'' என்றாள்.
அம்மாவை யோசனையுடன் பார்த்தான், வசந்த்.
''ஆங்கிலத்துல ஒரு பழமொழி சொல்வாங்க...'நெசசிடி இஸ் மதர் ஆப் இன்வென்ஷன்ஸ்'ன்னு! குழந்தை வளர்ப்பை எப்படி எல்லாம் உற்சாகமா, ஆர்வமா, சந்தோஷமா மாத்தலாம்ன்னு கண்டுபிடி,'' என்றபோது, ஓடி வந்தாள் சுஜி.
''பாட்டி... பூனை தோசை செய்யலாமா... அப்படியே சூரியன் தோசையும்...''
''ஓ செய்யலாமே... ஒரு நிமிஷம்டி கண்ணு,'' என்று எழுந்தாள் அம்மா.
பின்னாலேயே ஓடிய சுஜியை பிடித்து இழுத்து, அருகில் அமர்த்திய வசந்த், ''சுஜி... பாட்டி வீட்டுல இருந்து, நேரே எங்க போகப் போறோம் சொல்லு பாக்கலாம்...'' என்றான்.
''வீட்டுக்கு தானே...''என்றாள்.
''அதான் இல்ல; பல்லாவரம் மலைக்கு பக்கத்துல, ஒரு குளம் இருக்கு; அங்க போய், மீன் பிடிக்கப் போறோம்,'' என்றான்.
''வாவ்... நெஜமாவாப்பா...'' விழிகள் அகல படபடத்தாள் சுஜி.
''ஆமாம்... நாளைக்கு உன் பிரெண்ட் பால்கியை வரச் சொல்லி, மலை ஏறலாம்; டிரெக்கிங், அவனுக்குப் பிடிக்கும்ன்னு சொன்னியே...''
''சூப்பர்ப்பா!'' என்று, அப்பாவை கட்டிக் கொண்டாள் சுஜி.
''சரி... அதுக்கு அடுத்த நாள் எங்க போகப் போறோம்ன்னு சொல்லு...''
''ம்...'' என்று யோசித்து, ''எல்லாரும் டிராமா பிராக்டிஸ் செய்யலாம்...'' என்றாள். ''சரி, அப்படியே செய்வோம்; பொப்பாய், ஜெர்ரி எல்லாத்தையும் வெச்சு, ஒரு கதை, 'ரெடி' செய்றேன்; உன் பிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு, நாடகம் போடலாம்.''
''சூப்பர்ப்பா... அப்புறம்...''
''உனக்கு நீச்சல் தெரியும்; கடல் அலையில எப்படி நீந்தறதுன்னு தெரியுமா?''
''தெரியாதுப்பா... அம்மா விட மாட்டாங்க; ஆனா, எனக்கு ஆசையா இருக்குப்பா...''
''கவலைப்படாதே... மெரினாவுக்கு போய் அலையில, 'ஸ்விம்' செய்றது எப்படின்னு சொல்லித் தரேன். சரி... நீ சொல்லு... வேற என்னெல்லாம் ஆசை உனக்கு?''
''வீட்டு தொட்டியில ஆலமரம் வளக்கணும்; நானும், எதிர் வீட்டு பப்புவும் பாட்டுப் பாடி, யூ - டியூப்ல ஏத்தணும்... அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காதே!''
''அம்மாகிட்ட நான் சொல்லிக்கறேன்... நீ ஸ்மைலி தோசை சாப்பிட்டு வா... நாம மீன் பிடிக்க போகலாம்,'' என்றான்.
''தாங்க்யூப்பா...'' அவன் கன்னங்களில் முத்தங்கள் பதித்து, மகிழ்ச்சியுடன் சுஜி ஓடிய போது, நன்றிப் பெருக்குடன் சமையல் அறையில் இருந்த அம்மாவை பார்த்தான்!

உஷா நேயா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement