Advertisement

திண்ணை!

ஆர்.வி.பதி எழுதிய, 'தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடத்தின் மடாதிபதி, சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரியார். இவரை, 'ஞானியாரடிகள்' என்பர்; மிகச் சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளர்.
தமிழை தெளிவாகக் கற்க வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக, மு.சுவாமிநாதய்யர் எனும் தமிழாசிரியரை, தம் மடாலயத்திற்கு, தினமும் வரவழைத்து, தமிழ் கற்று வந்தார், ஞானியாரடிகள். தாம் ஓர் மடாதிபதி என்ற எண்ணம் சிறிதுமின்றி, ஆசிரியரிடத்தில் மாணவன் எப்படி நடந்து கொள்வானோ அவ்வாறு நடந்து, தமிழ் பயின்று வந்தார்.
அடிகளாருக்கு யாப்பிலக்கணத்தைக் கற்பித்து வந்த தமிழாசிரியர், தினமும், ஒரு வெண்பாவை இயற்றிச் செல்வார். அவ்வெண்பாவிற்கு சீர், தளை போன்றவற்றை எழுதி, அடுத்த நாள் ஆசிரியரிடத்தில் சமர்ப்பிப்பார், அடிகளார்.
ஒருநாள், நற்பாடலி புரத்து நாதனே நாயினேன்
பொற்பாம் நினதடியைப் போற்றினேன் - தற்போது
வேண்டுஞ் செலவிற்கு வெண்பொற்கா சுபத்து
ஈண்டு தருக இசைந்துள!
- எனும் வெண்பாவை எழுதி வைத்து விட்டு சென்றார், ஆசிரியர்.
அடுத்த நாள் மடத்திற்கு வந்த ஆசிரியர், தான் வெண்பா எழுதிய நோட்டு புத்தகத்தை பிரித்துப் பார்த்தார்; அப்புத்தகத்தினுள் பத்து ரூபாய் தாள் ஒன்று இருந்தது. ஆசிரியருக்கு பத்து ரூபாய் தேவை; அடிகளாரிடத்தில், நேரடியாக கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். ஆனால், ஆசிரியரோ தன் தேவையை, வெண்பாவாக எழுதி வைத்து சென்றார். அடிகளாரும், அதை உணர்ந்து, பத்து ரூபாய் நோட்டு ஒன்றை, வெண்பா நோட்டில் வைத்தார்.
ஆசிரியர், அடிகளாரை பார்த்து, 'நான் பாட்டுக்கு (மனம் போனபடி) ஏதோ எழுதி வைத்து விட்டுச் சென்றேன்; வேறு எதையும் எதிர்பார்த்து வெண்பா எழுதவில்லை...' என்றார்.
அதற்கு, 'நான், பாட்டுக்குத் தான் பொருள் கொடுத்தேன்; வேறு எதற்காகவும் இல்லை...' என்று சிலேடையாகப் பதிலுரைத்தார், அடிகளார்.
இதன்பின் தான், மகிழ்ச்சியோடு அப்பணத்தைப் பெற்றுக் கொண்டார் ஆசிரியர்.

கலைமாமணி, எஸ்.எம்.உமர் எழுதிய, 'கலை உலக சக்கரவர்த்திகள்' நூலிலிருந்து: தியாகராஜ பாகவதருக்கு, திருவாரூரில் ஒரு பணக்கார நண்பர் இருந்தார். கண்ணாடி மற்றும் தகடு வியாபாரம் செய்யும் அவர், ஜஸ்டிஸ் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவர். பாகவதர், திருவாரூருக்கு வந்தால், இவர் வீட்டில் தான் தங்குவார் என்பதால், அவருக்கென்றே தனிக் கழிப்பறையை, ஓலையால் கட்டி இருந்தார், நண்பர்.
ஒருமுறை, கல்யாண கச்சேரிக்கென்று, திருவாரூர் வந்த பாகவதர், வழக்கம் போல், அந்த நண்பர் வீட்டில் தங்கினார். காலை உணவுக்கு பின் பாகவதரும், நண்பர்களும் பேசியபடி அமர்ந்திருந்தனர். இடையில், கொல்லைப்புறத்துக்கு எழுந்து சென்ற பாகவதர், வெகுநேரமாகியும் திரும்பவில்லை. இந்நிலையில், திடீரென, கொல்லைப்புறத்தில் கூச்சலும், பாகவதரின், தீனக்குரலும் கேட்டது. நண்பர்களும், மற்றவர்களும் கொல்லைப்புறத்துக்கு ஓடினர். அங்கு, பாகவதருடைய, 'சில்க்' சட்டை, வேட்டி எல்லாம் நார் நாராகக் கிழிக்கப்பட்டு, திரவுபதியைப் போல், தன் மானத்தை காக்க, தீனக்குரலில் அலறியபடி இருந்தார், பாகவதர். உதவிக்கு ஓடி வந்த நண்பர்கள், அதிர்ச்சி அடைந்தனர். காரணம், கூச்சலிட்டபடி, பாகவதரை, வஸ்திராபகரணம் செய்த கவுரவர்கள், பெண்கள்!

மா.அண்ணாதுரை எழுதிய, 'பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்' நூலிலிருந்து: ஒருமுறை, பாரதிதாசனுடன் நாங்கள் கடற்கரைக்கு சென்றிருந்தோம். அங்கு, நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, சுண்டல் விற்று வந்தான், ஒருவன். அதைப் பார்த்த நாங்கள், 'சுண்டலை பற்றி பாட வேண்டும்...' என்று, விளையாட்டாக பாவேந்தரிடம் கூற, உடனே, மகிழ்ச்சியாக, 'சுண்டல் என்று, அதற்கு ஏன் பெயர் வந்தது தெரியுமா?' என்று கேட்டு, கவிதை புனையத் துவங்கி விட்டார் கவிஞர்.
இதோ அக்கவிதை...
சூட்ட டுப்பில் ஒரு பானைக்குள்
வார்த்த நீரில் ஒருபடி கடலை
போட் டெரித்துப் பொங்கிய நீரும்
சுண்ட இறக்கி தாளித் திடுவதால்
சுண்டல் என்பார் அதன் பெயர்
உண்டால் உண்ண உண்ணத் தெவிட்டாதே!

- நடுத்தெரு நாராயணன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement