Advertisement

பார்த்திபனின் பொங்கல் பானையும், இந்திகாரரும்!

வித்தியாசமான நடிகர் என்றால் முதலில் தெரிவது பார்த்திபன். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலிருந்து பட தலைப்பு, விளம்பரங்கள் என எல்லாவற்றிலும் வித்தியாசத்தை காட்டுபவர். தன் அடுத்த படைப்பான 'கோடிட்ட இடங்களை நிரப்புக' பட இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருந்தவரிடம், பொங்கல் மலருக்காக தொடர்பு கொண்ட போது, 'கேள்வியும் நானே பதிலும் நானே' என்ற பாணியில் பேசினார்.
அதிலிருந்து....
வெளியாகவுள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல், தயாரிப்பு மற்றும் சூழ்நிலை காரணமாக நானே விநியோகஸ்தர் பொறுப்பையும் செய்துள்ளேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்வளவு விஷயத்தையும் நம்மால் செய்ய முடியுமா? தோளில் இவ்வளவு சுமையை சுமக்க முடியுமா? ஆனால் இதற்கெல்லாம் பின்னால் இருப்பது கொஞ்சம் தைரியம் தான். அந்த தைரியத்திற்குள்ள பின்னணி, திரைக் கதையில் இருக்கிற விஷயம். எனவே நல்ல திறமை இருந்தால் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. இது பொங்கலுக்கு நான் தெரிவிக்கும் கருத்து.
பொங்கல் ரொம்ப இனிப்பாக இருக்க வேண்டும் என்றால், இருக்கிறதை எல்லாம் இல்லாதவங்களுக்கு போட்டு சாப்பிட்டு பாருங்கள். அந்த பொங்கலில் தனிச் சுவை தெரியும். இருக்கிறதை எல்லாம் போட்டு, இல்லாததையும் கடன் வாங்கி செய்திருக்கும் படம் தான் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. இது எப்ப சுவையான பொங்கலாக மாறும்ன்னா, திரையிட்ட இடங்களில் ரசிகர்களின் கைத்தட்டல்களால் அரங்கம் நிரம்பும் போது மட்டும் தான் பொங்கல் எனக்கு சுவையாக இருக்கும். 'பைரவா' மாதிரி பெரிய படங்கள் வெளியாவதற்கு மத்தியில் இப்படம் வருகிறது.
இந்த மாதிரி வித்தியாசமான படங்களை ஆதரிக்க வேண்டிய கடமை ரசிகர்களுக்கு உண்டு. சினிமா இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்கவே முடியாது. இந்த மாதிரி வித்தியாசமான கதையம்சமுள்ள படங்கள் ஓடியே தீர வேண்டும். நல்ல படங்கள் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளர்கள் ஓடி விடுவர்.
இந்த படத்தில் குருவிற்கு செய்யுற நன்றி கடனாக நினைத்து, சாந்தனுவில் (இயக்குனர் பாக்யராஜ் மகன்) ஆரம்பித்தேன். ஆனால் அவர் பெரிய நடிகர் என்பதை நான் தெரிந்து கொள்ளுமளவுக்கு, அருமையாக நடித்திருக்கிறார். படம் வெளியானதற்கு பிறகு அவரது கால்ஷீட் கிடைப்பது கடினமாகி விடும்.
நாயகி பார்வதி. படம் எடுக்கும் போது திருப்தியில்லாத நாயகி எனக் கருதினர். ஆனால் படம் முடிந்த பிறகு பொருத்தமான நாயகி என அனைவருமே
முடிவுக்கு வந்தோம். அதற்கு அவரது வேடப்பொருத்தம் காரணம். தம்பி ராமையா இன்னொரு ஸ்பெஷாலிட்டி.
நட்புக்காக சிம்ரன், நட்புக்கு மரியாதையாக பிரபுதேவா நடனம், டி.ராஜேந்தர் பாடல் பாடியுள்ளனர். ரசிகர்கள் திரும்பி, திரும்பி பார்க்கும் வகையில் அழகாக இருக்கும்.
பண்டிகையன்று சந்தோஷமாக இருக்க வேண்டும் என முடிவு செய்பவன் நான் இல்லை. சந்தோஷமாக இருக்கும் நாளெல்லாம் 'பண்டிகை நாள்' என நினைப்பவன். என் குழந்தைகளும் அப்படி தான். ஆனால் இந்த பொங்கல் எனக்கு ஸ்பெஷல். தலைப்பொங்கல் மாதிரி. ரசிகர்களுடன் 'பைரவா' பார்ப்பேன். பின்னர் கோடிட்ட இடங்களை பார்ப்பேன். நானும் ஒரு விஜய் ரசிகன் தான்.
கதை வித்தியாசமாக இருக்குறதால தலைப்பும் வித்தியாசமாக வைக்க வேண்டியிருக்கிறது. வித்தியாசமான படங்களை பார்க்கிறதை ரசிகர்கள் விரும்புவர். எதிர்பாராதது நடப்பதுதான் வித்தியாசமான படம். ஒரு முறை பொங்கலுக்கு என் படம் தேசிய விருது பெற்ற போது, பொங்கல் பானை வைத்து ஒரு இந்திகாரரிடம் அதில் தமிழில் 'இன்பபொங்கல்' என எழுத வைத்தேன். அதில் சின்ன கர்வம். இந்திகாரரை தமிழில் எழுத வைத்தேன் என்பதில். ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் இடைவெளி கதை தயாரிப்பதற்கு என்றால் அது பொய். கடந்த படம் வெற்றி பெற்றது. அடுத்தபடத்திற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. நானே நாலு காசு சம்பாதித்து அதில் தயாரிக்கும்படம் தான், கோடிட்ட இடங்களை நிரப்புக.
நான் வில்லனா, கதாநாயகனா என்பது முக்கிய விஷயமல்ல. படத்தில் நான் என்ன பண்ணுறேன் என்பது தான் முக்கியம். அவ்வளவு தான். வில்லனாக நடித்த 'நானும் ரவுடி தான்' படம் வெற்றி பெற்றதில் எனக்கும் ஒரு பங்குண்டு. மறக்க முடியாத நிகழ்ச்சிகள் வாழ்வில் பல இருக்கிறது. அதில் எதை சொல்வது? ஒரு காலத்தில் எங்க வீட்டில், பொங்கலுக்கு கரும்பு வாங்க காசு இருக்காது. அப்ப ராஜா அண்ணன் ஒருவர் இருந்தார். சும்மா பொங்கலுக்கு என அரிசி போட்டு பொங்குவாங்க... அப்போது ராஜா அண்ணன் இரு பெரிய கரும்புகளோடு வருவார். அவர் வந்தா தான் பொங்கல் நிறைவடையும். அந்த இரண்டு கரும்பை பார்த்ததும் சந்தோஷமாக இருக்கும். அந்த மாதிரி வசதியில்லாத குடும்பத்தில் இருந்து வந்து இன்று சந்தோஷமாக பொங்கிட்டு இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் ரசிகர்கள் தான். அவர்களுக்கு மாறுபட்ட படங்களை கொடுக்கிறது தான் நான் காட்டும் நன்றிக்கடன்.
கன்னடத்தில் 'தாதா' என்ற படத்தில் நடித்து இருக்கிறேன். விரைவில் வெளிவரும்.
என்னுடைய 'திரைக்கதை வசனம்' படத்தை குருநாதர் பாக்யராஜ் பாராட்டியதை மறக்க முடியாது. நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அவருடன் மீண்டும் நடித்தால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும், என்றார்.

எம்.ரமேஷ்பாபு

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement