Advertisement

'பஞ்ச மூலிகை' பொங்கல் பிரண்டையை 'பிரண்டாக்குவோம்'

இயற்கையின் கொடையால் எழும் உற்சாக ஒலியே 'பொங்கலோ பொங்கல்'. காப்பு கட்டு துவங்கி காணும் பொங்கல் வரை தொடரும் இயற்கை திருவிழா.
இங்கு இயற்கைதான் பிரதானம். மனித இனமே இயற்கையில் இருந்து பிறந்ததுதானே. இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்த நமது முன்னோர் நமக்கு அளித்த வரமே பொங்கல் திருநாள்.
உணவை மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கான அருமருந்தையும் இயற்கை கொடுக்கிறது.
பொங்கல் நமக்கு உணவு. வீட்டு வாசலில் சொருகும் காப்பு கட்டு, மருந்து. உடல் நலத்தை பேணவே பொங்கல் பண்டிகையில் 'காப்பு கட்டுதல்' கலந்துள்ளது.
பொங்கல் காப்பு கட்டில் பயன்படுத்தப்படும் சிறுபீளை(கூரைப்பூ), ஆவாரம்பூ, பிரண்டை, வேப்பிலை, மஞ்சள் கொத்து இவற்றைத்தான் பஞ்ச மூலிகைகள் என்கிறோம்.

ஆவாரம்பூ
ஆவாரம்பூவை பொன் மூலிகை என்று நமது சித்தர்கள் கொண்டாடுவர். வேர், இலை, பூ, காய், கட்டை, பிசின் என்று எல்லாமே மூலிகை குணம் உடையதுதான். தங்க சத்து நிறைந்தது. நரம்பு தளர்ச்சியை போக்கும். இன்சுலினை சுரக்கச் செய்யும் சர்க்கரை கொல்லி, சிறுநீர் கல்லை கரைக்கும். சிறுநீரக கோளாறுகள் நீங்கும். உடல் குளிர்ச்சி, கருங்கூந்தல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நீக்கும். குடிநீரில் குடிநீரில் ஆவாரம்பூவை சேர்த்து பருகலாம். 'ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டது உண்டோ' என்பது பழமொழி. எமனை விரட்டும் எளிய மூலிகை.

பிரண்டை
இதற்கு சஞ்சீவி, வஜ்ரவல்லி என்ற வேறு பெயர்கள், ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என்ற வகைப்பாடு உண்டு. ஓலை பிரண்டை, முப்பிரண்டை, உருட்டு பிரண்டை, தட்டை பிரண்டை, களிப் பிரண்டை, புளிப்பிரண்டை என்று இதன் வகைகள் நீளும்.
முப்பிரண்டை காண கிடைப்பது அரிது. வீடு முதல் 'சுடு' காடு வரை இதன்பயன்பாடு உண்டு.
பிரண்டையின் துவையல், பிஞ்சு பொரியல், ரசம், வடகம் எல்லாம் உடலுக்கு ஊட்டம் தருபவை. உடல் பருமனை குறைப்பவை. தளர்ச்சியை நீக்கி, ஆண்மையை பெருக்கி, இதயத்திற்கு வலு சேர்ப்பவை. முறிந்த எலும்புகளையும் எளிதில் ஒட்ட வைக்கும் தன்மை பிரண்டைக்கு உண்டு. இதனால் இதை 'வஜ்ரவல்லி' என்பர். எனவே பிரண்டையை இப்பொங்கல் முதல் நம் 'பிரண்டா'க்கிக் கொள்வோம்.

மஞ்சள்
நறுமணம், சமையல் பொருள், கிருமி நாசினி, புனித பொருள் என்று மஞ்சள் பயன்பாடு அதிகம். பண்பாட்டிலும், பயன்பாட்டிலும், இதற்கு ஈடு இணை இல்லை. முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள் என்ற வகைகள் உண்டு. சளித் தொல்லை, வயிற்று உபாதைகள், தோல் நோய்கள், வெப்பு நோய்கள், ரத்தத்தை சுத்தம் செய்தல் என்று இதன் மருத்துவ பயன்களின் பட்டியல் தொடரும். மஞ்சள் இல்லா வீடு மணக்குமா?

வேம்பு
பேய்க்கு மட்டுமல்ல நோய்க்கும் எதிரி வேப்பிலை. அந்த அளவிற்கு கோடைகால கொடையாக இருப்பது வேம்பு. பித்தம், நீரிழிவு, தொழுநோய், தோல் நோய், பூச்சிக் கொல்லி, அம்மை நோய்களுக்கு அருமருந்து. நோய் எதிர்ப்பு சக்தி, குடல் நோய்கள் என்று வெப்ப காலத்தில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும். சர்வ நிவாரணி, மாத விலக்கை தூண்டும், மஞ்சள் காமாலையை குறைக்கும்'வேம்பு நமக்கெல்லாம் தெம்பு'.

சிறுபீளை (கூரைப்பூ)
காப்பு கட்டில் சிறப்பிடம் பெறும் மூலிகை இது என்றே சொல்லலாம். ஈரப்பாங்கான இடங்களில் மார்கழி குளிரில் ஏராளமாக விளைந்து கிடக்கும். இதன் அனைத்து பாகங்களும் அருமைதான். சிறுநீரை பெருக்குதல், சிறுநீர் கட்டிகளை கரைத்தல், சிறுநீர் பாதை அடைப்பு என்று சிறுநீரக பிரச்னைகள் அனைத்தும் போக்கும் அரிய மூலிகை.
கர்ப்பிணிகளுக்கு உடல் வலுவை கொடுக்கும். வெள்ளை படுதலை தடுக்கும்.

காந்திகிராம பல்கலை பேராசிரியர் முத்தையா கூறியதாவது: இந்த பஞ்ச மூலிகைகள் பஞ்ச காலத்திலும் நமக்கு எளிதில் கிடைப்பவை. இவற்றின் மகத்துவம் அறியாமல் இனியும் இருக்கலாமா. இந்த பொங்கல் நமக்கு எல்லாம் பஞ்ச மூலிகை பொங்கலாய் அமையட்டும்.

எஸ்.அரியநாயகம்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement