Advertisement

வாசப் பொங்கலும், வாசனை அவியலும்

தை மாதக் குளிரில் பற்கள் கிடுகிடுவென்று நடுங்க, பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு 'வாசப்பொங்கல்' (வாசலில் வைப்பது) வைக்கும் நம் பெண்கள்… தமிழ் பாரம்பரியத்தின் அழகு அடையாளங்கள். மண் மனம் மாறா கிராமங்களிலும், கிராமங்களில் இருந்து நகரத்திற்கு இடம்பெயர்ந்தவர்களின் அடையாளமாக இல்லந்தோறும் கொண்டாடப்படும். பச்சரிசியை மட்டும் குழைய வைத்து வெண்பொங்கல் என்று சுவாமிக்கு படைப்பர். அதேபோல அனைத்து வகை காய்கறிகளைக்கொண்டு அவியல், சாம்பார் செய்வதும் பொங்கலின் முக்கிய விசேஷம். இந்த பொங்கல் விழாவுக்கு, வழக்கமான பச்சரிசி பாசிபருப்பு பொங்கலைத் தாண்டி தினையரிசிப் பொங்கலும், மண் சட்டி அவியலும் செய்யக் கற்றுத் தருகிறார் மதுரை மாவட்டம் மேலூர் டி.வெள்ளாளப்பட்டியைச்சேர்ந்த ராணி.

மண்சட்டி அவியல்
காய்கறிகள் ஒன்றாக வெந்து அவிந்து போவதை அவியல் என்கிறோம்.
தேவையானவை: கேரட், கத்தரிக்காய்,வாழைக்காய், உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு, முட்டைகோஸ், முருங்கை பீன்ஸ், சர்க்கரைவள்ளி கிழங்கு, பச்சை பட்டாணி, இனிப்பு பூசணி, சிறிய வெங்காயம் மற்றும் தேங்காய் எண்ணெய் தலா 100 கிராம். பச்சை மிளகாய் 10, தேங்காய் ஒன்று, உப்பு தேவைக்கு, சிறுஞ்சீரகம், கறிவேப்பிலை, மல்லிதழை தாளிப்பதற்கு.
செய்முறை: அனைத்து காய்கறிகளையும் கழுவி நறுக்க வேண்டும். மண் சட்டியில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் மற்றும் நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். தேங்காயைஅரைத்து சேர்த்து 5 நிமிடங்கள் கொதித்த பின், தேங்காய் எண்ணெயில் சிறுஞ்சீரகம், மல்லிதழை,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அவியலில் கொட்டி இறக்க வேண்டும். விறகு அடுப்பில் மண்சட்டியில் வெந்த அவியலின் ருசியே அலாதியாக இருக்கும்.

தித்திக்கும் தினைப்பொங்கல்
தேவையானவை: தினையரிசி அரைகிலோ, வெல்லம் அரை கிலோ, நிலக்கடலை கையளவு, முந்திரிபருப்பு, உலர்திராட்சை கையளவு, ஏலம், சுக்கு, நெய் சிறிதளவு, பால் ஒரு டம்ளர்.
செய்முறை: தினையரிசியை ஒருமுறை நன்கு கழுவ வேண்டும். இரண்டாம் முறை தண்ணீர் ஊற்றி களைந்து அந்த தண்ணீரை மண்பானையில் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். கொதிப்பதற்கு முன்பாக பாலை ஊற்ற வேண்டும். பால் பொங்கிவரும் போது அரிசியை சேர்த்து மிதமான தீயில் வேகவிட வேண்டும். முக்கால் வெந்தவுடன் வெல்லம் சேர்த்து அடிக்கடி கிளற வேண்டும். கடைசியாக நெய்யில் முந்திரிபருப்பு, கடலைபருப்பு, உலர்திராட்சையை வறுத்து பொங்கலில் கிளறி சூடாக பரிமாறவும்.

பொங்கல் உணவு குறித்து ராணி கூறுகையில்: புதுமண் அடுப்பும், புதுப்பானையும் இல்லாமல் பொங்கல் சிறக்காது. புதுமண் பானை சூடேறுவதற்கு நீண்டநேரம் ஆகும். அதனால் கிராமத்தில் கிடைக்கும் விறகு,சுள்ளி, பனைமட்டை, தென்னை மட்டையை கொண்டு, வீட்டு வாசலில் வைத்து பொங்கல் வைத்து குலவையிடுவோம்.
சமையலுக்கு தனி ருசி விறகு அடுப்பு. ஆண்டில் ஒருநாளாவது அந்த ருசியை அனுபவிப்போம். அது மட்டுமின்றி பசங்க, பொண்டுங்க சிலம்பம் ஆடுவது, மாடுபிடிப்பதும் பொங்கலுக்கே உரியது, என்றார்.

எம்.எம்.ஜெயலட்சுமி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement