Advertisement

புது நீர மோந்து வந்து முளைபரப்பி....

பச்சரிசி, வெல்லம், கரும்பு, மாக்கோலம், காப்பு. இவை இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றிக்கடன் செலுத்தும் பொங்கல் திருநாளின் அடையாளங்கள்.
இதுபோல் கிராம சிறு தெய்வ வழிபாட்டு திருவிழாவிற்கு, பல்வேறு அடையாளங்கள் உள்ளன. கிராமங்களில் விவசாயம் செழிக்க வேண்டும்; மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முளைப்பாரி வைக்கின்றனர். மொச்சை, தட்டைப் பயறுகளை சேர்த்தோ அல்லது தனியாகவோ, உளுந்து, சிறுதானியமான கம்புவை தனியாக முளைக்க வைப்பர்.
கிராமங்களில் வைகாசி மாத செவ்வாய், புதன்கிழமைகளில் கோயில் திருவிழா நடப்பது வழக்கம். அதற்கு முந்தைய வாரம் செவ்வாய்கிழமை இரவு, ஊர் கூட்டத்தில் திருவிழா பற்றி விவாதித்தபின், தண்டோரா மூலம் அறிவிப்பு செய்வர். அன்று இரவு வீடுகள் தோறும் பயறு, சிறுதானிய வகைகளை முளைப்பாரி வளர்க்க, அதற்கு பொறுப்பான குடும்பத்தாரிடம் ஒப்படைப்பர். அக்குடும்பத்தினர் அதை தண்ணீரில் ஊறவைப்பர். மறுநாள் தண்ணீரை வடித்தபின், கோணிப்பையில் கட்டி வைப்பர்.
பூச்செடிகள் வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் தொட்டிகளை, ஒவ்வொரு வீட்டினரும், முளைப்பாரி வளர்க்கும் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பர். அவற்றில் காய்ந்த பருத்திச்செடியின் குச்சிகள், நெல் வைக்கோல், மாட்டுச் சாணத்தை இடுவர். அவற்றின் மீது பயறு, சிறுதானியங்களை தூவுவர். முளைப்பாரி வளர்க்கும் இடத்தைச் சுற்றிலும் சேலைகளால் திரைபோல் கட்டி, மறைத்துவிடுவர். தூய்மையை பேண வேண்டும் என்ற நோக்கில், முளைப்பாரியை வளர்க்கும் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் உள்ளே அனுமதியில்லை. முளைப்பாரிக்கு தினமும் தண்ணீர் விட்டு, ஊதுபத்தி, சூடம் ஏற்றி பூஜை செய்வர்.
ஏழாவது நாள் திருவிழாவின்போது கிராம நிர்வாகிகள், காவல்காரர்கள், தச்சர் முன்னிலையில் முளைப்பாரிகளுக்கு வழிபாடு நடத்தப்படும். பெண்கள் அவரவர் வீடுகளுக்கு முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்று காதோலை, கருகுமணியால் அலங்காரம் செய்வர். சந்தனம், பானகரம் (புளி, வெல்லம் கலந்த பானம்) வைத்து வழிபடுவர். புதன்கிழமை காலை, முளைப் பாரிகளை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வருவர். வியாழக்கிழமை முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, தெப்பத்தில் கரைத்துவிடுவர்.
ஏழு நாட்களும் முளைப்பாரியை போற்றி, வட்டமிட்டு பெண்கள் 'உன்னளந்த நாளையில, உசந்த செவ்வாய்கிழமையிலே, வருணப்பெட்டி தலையிலிட்டு, வகையுடனே பயறு வாங்கி, புத்தாபுது குடம் எடுத்து, புதுநீர மோந்து வந்து முளைபரப்பி, குசவனாறு சுள்ளியிலே, கோள வர்ண ஓடெடுத்து, ஆட்டுத்தொழு துறந்து, மாட்டுத்தொழு துறந்து, மாட்டெருவ அள்ளிவந்து, முதலாளி படப்புல முத்து வைக்கோல் அள்ளி வந்து முளைபரப்பி...,' என கும்மிப்பாட்டு இரவில் பாடுவது தனி அழகு.
'காளி பிறந்தது கண்ணூர் மேடையிலே...,' என்றொரு பாடலும், 'சித்திரைச் சம்பா வளம்பெறுவது...,' என வகைவகையான பாடல்களை அவர்களே சுயமாக இயற்றி, மெட்டுஅமைத்து கும்மிப்பாடல் பாடுவர். இதை எழுதிவைத்து படிப்பதில்லை. சில கிராமங்களில் கோயில் திருவிழாக்களில் முளைப்பாரியை அடையாளப்படுத்தும் விதமாக 'முளைக்கொட்டு'த் திருவிழா என அழைப்பது வழக்கம். கிராம சிறு தெய்வ வழிபாட்டுத் திருவிழாவின் அடையாளமாக உயிர்ப்புடன் உள்ளது முளைப்பாரி.

ந.ராஜகுமார்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement