Advertisement

மூணு விசிலும்... குக்கர் பொங்கலும்! கலகலப்பூட்டும் நடிகர் விவேக்

இந்தாண்டு பொங்கல் பண்டிகையுடன், சினிமாவில் நுழைந்து, 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் விவேக், தன் படங்களில் 'குபீர்' சிரிப்பை வர வைக்கும் நகைச்சுவையை 'நச்'னு கலாய்த்து, 'கருத்து கந்தசாமி'யாக நம்மை கலகலக்க வைப்பதில் கில்லாடி.
நடிப்பில் அடுத்தடுத்து பிசியாக இருந்த போதும் 'தினமலர் பொங்கல் ஸ்பெஷல்' பேட்டி என்றவுடன் அனைத்து வேலைகளையும் தள்ளி வைத்து விட்டு நம்முடன் அவர் மனம் திறந்த தருணங்கள்...

* 'குட்டீஸ்' கால பொங்கல் கொண்டாட்ட அனுபவம்...
சின்ன வயசுல நெல்லை அருகில் முருகன்குறிச்சி கிராமத்துல பாட்டி வீட்டுல தான் எங்க பொங்கல் கொண்டாட்டம். படு ஜாலியா இருக்கும். பொங்கலுக்கு முதல் நாள், எங்க வயல்ல வேலை செஞ்சவுங்க வரிசையா வந்து பாட்டியிடம் மரக்கால்ல நெல்லு, வயல்ல விளைஞ்ச கரும்பும், கூடவே புது ஆடைகளும் வாங்கிட்டு போவாங்க. வீட்டுல மாடுகளை குளிக்க வச்சு கலர் பூசி, கழுத்துல மணி கட்டி உற்சாகமாக ஊர்வலம் போய் கொண்டாடும்... அது ஒரு கிராமிய மணம் வீசும் பொங்கல்.

* சினிமாவுக்கு வந்த பின்...
கிராமத்துல மூணு பக்கமும் கல் வைத்து, விறகை எரித்து சூரியனை பார்த்து 'பொங்கலோ... பொங்கல்'னு பொங்கல் வைப்பாங்க. சினிமாவுக்கு வந்தவுடன் 'சிட்டி லைப்' ஆகிடுச்சு. காலையில எழுந்து 'ஸ்டவ்' பத்த வச்சு, 'குக்கர்'ல அரிசியை போட்டு மூணு விசிலு வந்தா இறக்கி வச்சு 'பொங்கலோ பொங்கல்'னு கொண்டாட வேண்டியதா இருக்கு. இங்கே எல்லாமே குக்கர் பொங்கலா போச்சு!

* காமெடிக்கு அனைவரும் மயங்குவது ஏன்...
அதில் உள்ள ஈர்ப்பு சக்தி தான். சோகம், எரிச்சல், கோவம், அழுகை உணர்வு களை தனியா தான் அனுபவிக்கணும். சிரிப்பு தான் இதற்கெல்லாம் 'சர்வரோக நிவாரணி'. நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி நகைச்சுவைக்கு உண்டு. பல லட்சம் ரூபாய் கொட்டி இருதய ஆப்பரேஷன் செய்து விட்டு, மருத்துவமனையில் 'பெட்'டில் இருக்கும்போது கூட நோயாளிக்கு எதிரே சின்ன 'டிவி' வச்சு அதுல காமெடி சீனை தான் ஓட்டுவாங்க. மரண பயத்துல இருக்குறவுங்கள கூட நகைச்சுவை உணர்வு காப்பாத்திடும்.

* நீங்க ரசிச்ச உங்க காமெடி...
இதுவரை 500 படங்களுக்கு மேல் நடிச்சிருக்கேன். ஒவ்வொரு காமெடியும் 'இன்வால்வ்' ஆகிதான் நடிச்சேன். ஆனால் 'சாமி' பட காமெடிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

* உங்களை கவர்ந்த காமெடி நடிகர்...
எல்லோரையும் பிடிக்கும். தற்போது 'ரோபோ' சங்கர் 'மேனரிசத்தை' ரொம்ப ரசிப்பேன்.

* எந்த ஹீரோ 'சூப்பர் காமெடியன்'...
சொல்லத் தெரியல. ஹீரோக்கள் லேசா காமெடி செய்தாலே அதிக சிரிப்பு வரும். ரஜினியின் பாம்பு காமெடி... கமலின் பல்ராம் நாயுடு காமெடிகள் சூப்பர்.

* உங்க காமெடிக்கு 'பெஸ்ட்' ஹீரோ 'காம்பினேஷன்' யாரு...
நடிகர்கள் விக்ரம், தனுஷ் 'காம்பினேஷன்' காமெடிகள் அதிகம் பிடிக்கும்.

* காமெடியில் ஏன் 'மெசேஜ்' இருக்க வேண்டும்?
சினிமாவில் பாட்டு, சண்டை, நீண்ட வசனத்திலும் கூட 'மெசேஜ்' சொல்ல முடியாது. காமெடியில் தான் 'இனிப்பு கலந்த' கருத்து சொல்லலாம். அதை கேட்டு சிரிச்சாலும், சொல்ல வர்ற விஷயம் மக்களிடம் போய் சேர்ந்துடும்.

* ஹீரோ பயணம் தொடருமா...
காமெடி தான் மெயின். ஆனாலும் வாய்ப்பு வரும்போது ஹீரோ பயணமும் தொடரும். தற்போது ராதா மோகன் இயக்கத்தில் 'பிருந்தாவனம்' படத்தில் 'நடிகர் விவேக்' ஆகவே நான் நடிக்கிறேன். படம் நன்றாக வருகிறது.

* ஜல்லிக்கட்டு - உங்க கருத்து...
பாரம்பரிய விளையாட்டு. வீட்டில் குழந்தைகளை வளர்ப்பது போலதான் மாடுகளை வளர்க்கிறார்கள். அதை வளர்ப்பவனுக்கு துன்புறுத்த மனசு வராது. அதை வீர விளையாட்டாத்தான் பார்க்கணும். கிராமத்துல விலை உயர்ந்த கார் வச்சிருக்கவுங்க அதை வீட்டு வாசல்ல நிறுத்தி வச்சுருப்பாங்க. அது ஒரு கவுரவம். அதுபோல தான் ஜல்லிக்கட்டு மாடையும் வீட்டுக்கு முன் நிறுத்தி வச்சிருப்பதை கிராமத்தில் கவுரவமா நினைக்கிறாங்க. ஆனால், அதற்கு முன் விவசாயி சந்தோஷமாக இருக்கானானு பார்ப்பது முக்கியம். இப்போதைய முதல் தேவை விவசாயத்தை மீட்டெடுக்கணும்.

* பொங்கலுக்கு 'கருத்து கந்தசாமி'யின் 'மெசேஜ்'...
பொங்கல், தீபாவளி கலாசாரத்தை வெளிப்படுத்தும் பண்டிகைகள். மக்கள் உணர்வு சார்ந்தது. இக்கொண்டாட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு திண்டாட்டமாக மாறி விடக்கூடாது. சுற்றுச் சூழலை பாதுகாப்பது, மரங்கள் நடுவது தொடர்பாக, தினமலர் நாளிதழ் பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூக பங்களிப்பை சிறப்பாக செய்து, உதாரணமாக விளங்குகிறது. அதில் நானும் பயணிக்க விரும்புகிறேன்.
என் கலைப் பயணத்துடன் அப்துல் கலாமின் 'கிரீன் கலாம்' பயணத்திலும் பங்கேற்று, 2010ம் ஆண்டு முதல் இதுவரை 27 லட்சத்து 73 ஆயிரம் மரங்கள் நட்டுள்ளேன். கலாமின் கனவு ஒரு கோடி மரங்கள். அவர் மறைந்தாலும், மறையாத அவரது உத்தரவுப்படி அந்த இலக்கை எட்டுவேன்.
தினமலர் மூலம் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
இவரை 044 - 2376 4849 ல் வாழ்த்தலாம்.

கொ.காளீஸ்வரன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement