Advertisement

விருதுகள்

இந்த ஆண்டு விருது வென்ற சில சாதனையாளர்கள்

ஆய்வுக்கு அங்கீகாரம்
பிரான்ஸ் தலைநகர் பாரிசை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு (ஐ.ஏ.எப்.,) விண்வெளி அறிவியல், தொழில்நுட்ப துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 'ஹால் ஆப் பேம் விருது' வழங்குகிறது. 2016ல் யு.ஆர்.ராவை தேர்வு செய்தது. இவ்விருதை பெறும் முதல் இந்திய விஞ்ஞானியான இவர், 'இஸ்ரோ'வின் முன்னாள் தலைவர்.

வானுயர்ந்த வண்ணதாசன்
சாகித்ய அகாடமி விருது 1954ல் உருவாக்கப்பட்டது. சிறந்த இலக்கிய படைப்புகளுக்காக (கவிதைகள், சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம்) 1955 முதல் ஆண்டுதோறும் தமிழ் உட்பட 24 மொழிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய் காசோலை வழங்கப்படும். 2016 தமிழ்மொழிக்கான விருதுக்கு சிறந்த சிறுகதைக்காக (ஒரு சிறு இசை) எழுத்தாளர் வண்ணதாசன் தேர்வு.

வங்கத்தின் சங்கா
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புக்கு 1965ல் இருந்து ஞானபீட விருது வழங்கப்படுகிறது. 2016க்கான இவ்விருதுக்கு
வங்க கவிஞர் சங்கா கோஷ் தேர்வு.

'புக்கர்' பெருமை
உலக அளவில் இலக்கியத்திற்கான மிக உயர்ந்த 'மேன் புக்கர்' விருதை 'தி செல் அவுட்' என்ற நாவலுக்காக பால் பீட்டி பெற்றார். இவ்விருதை பெறும் முதல் அமெரிக்கர் இவர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தவர்கள் அனுபவிக்கும் நிறவெறி பிரச்னைகளை எழுதியுள்ளார்.

நடிப்பின் இலக்கணம்
இந்திய திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் 'தாதாசாகேப் பால்கே' என்ற உயரிய விருதினை 1969 முதல் மத்திய அரசு வழங்குகிறது. 2015க்கான விருது இந்தி நடிகர் மனோஜ் குமாருக்கு வழங்கப்பட்டது.

மாணவிக்கு மகுடம்
சர்வதேச குழந்தைகள் அமைதி விருது 2005ல், நெதர்லாந்தில் தொடங்கப்பட்டது. விருதுடன் 72 லட்ச ரூபாய் வழங்கப்படும். 2016க்கான விருது யு.ஏ.இ.,யில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவி கேஹ்காசன் பாசுவுக்கு வழங்கப்பட்டது. இவர், 'கிரீன் ஹோப்' என்ற பசுமை அமைப்பை நிறுவி, இயற்கை பாதுகாப்பு தொடர்பான பணிகளை செயல்படுத்தி வருகிறார்.

'நோபல்' கவுரவம்
உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 1901 முதல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை கொலம்பிய அதிபர் யுவான் மேனுவல் சாண்டோஸ் வென்றார். இவர், உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார்.

கில்லாடி டெய்லர்
அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு 'கிராமி விருது' 1951ல் இருந்து வழங்கப்படுகிறது. 2015ல் 'சிறந்த ஆல்பத்துக்கான' விருதை பாடகி டெய்லர் ஸ்விப்ட் பெற்றார். '1989' என்ற ஆல்பத்துக்காக இவ்விருதை பெற்றார்.

'கடல் ராணி'
கடல் பயணத்தில் வீரதீர செயல்புரிபவர்களுக்கு சர்வதேச கடல்சார் அமைப்பு விருது வழங்குகிறது. 2016க்கான விருது இந்திய கப்பல்படை பெண் கேப்டன் ராதிகா மேனனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பெறும் உலகின் முதல் பெண் இவரே. ஒடிசாவின் கோபால்பூர் அருகே வங்கக்கடலில் கடந்தாண்டு ஜூன் 22-ல், 7 மீனவர்கள் சென்ற படகு மூழ்கியது. பலத்த மழையும், சூறாவளிக் காற்றும் வீசிக் கொண்டிருந்தது. கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை ராதிகா மேனன் தலைமையிலான மீட்புக் குழுவினர் மீட்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement