Advertisement

தமிழ் திரையுலகம் 2016

சாதனை சோதனைதமிழ் திரையுலகில் ரஜினியின், கபாலி ; விஜயின், தெறி ; சிவகார்த்திகேயனின், ரஜினி முருகன், ரெமோ ஆகிய நான்கு படங்களே 2016ல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனாலும், 2016 தமிழ் சினிமாவுக்கு நிறைய பாடங்களை கற்றுத் தந்துள்ளது.தமிழ் திரையுலகம் மறக்க முடியாத ஆண்டாக, 2016 அமைந்து விட்டது. நடிகர் சங்க தேர்தலை தொடர்ந்து நடிகர்களுக்குள் ஏற்பட்ட உரசல்கள்; தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல்; செல்லாத நோட்டு மற்றும் புயல், மழையால் தியேட்டர்களில் வசூல் பாதிப்பு என, பல சிக்கல்கள் எழுந்தன.திரையுலக ஜாம்பவான்களின் இழப்பு; இணையதள விளம்பரத்தின் வளர்ச்சி, இவற்றால் தமிழ் சினிமா பெற்ற வெற்றியை விட, இழப்பும்; கற்றுக் கொண்ட பாடமும் அதிகம்.
மெகா ஹிட் படங்கள்2016ம் ஆண்டில் ஜனவரி முதல், டிசம்பர் ௩0 வரை, 190 படங்கள் வெளியாகி உள்ளன. ஜனவரியில் 18; பிப்ரவரியில் 16; மார்ச்சில் 19; ஏப்ரலில் 21; மே மாதத்தில் 14; ஜூனில் 12; ஜூலையில் 15; ஆகஸ்டில் 16; செப்டம்பரில் 20; அக்டோபரில் 11; நவம்பரில் 10, டிசம்பரில் 18 படங்கள் என, மொத்தம், 185 படங்கள் வெளியாகின. இதில், ஜனவரியில், சிவகார்த்திகேயன் நடித்து வெளியான, ரஜினி முருகன், மார்ச்சில் - விஜய் ஆண்டனியின், பிச்சைக்காரன்; ஏப்ரலில் - விஜயின், தெறி; ஜூலையில் - ரஜினியின், கபாலி; அக்டோபரில், சிவகார்த்திகேயனின், ரெமோ ஆகிய படங்கள், 'மெகா ஹிட்' படங்களாக அமைந்தன.
அச்சச்சோ படங்கள்* பாலா இயக்கத்தில், சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் வெளியான, தாரைதப்பட்டை, பாலாவே மீண்டும் இயக்க முடியாத அளவுக்கு, சொதப்பல் படமாக அமைந்தது. இதில் இளையராஜாவின், ஆயிரமாவது படம் என்ற அம்சமும், ரசிகர்களை ஏமாற்ற வைத்தது* விஷால் நடிப்பில் வெளியான, கதகளி, மருது, கத்திச்சண்டை ஆகிய படங்கள் எதிர்பார்ப்பை தூண்டி பணால் ஆனது. இதில், கத்திச்சண்டை மட்டும் வடிவேலு, சூரியால் சற்று தப்பி பிழைத்தது* ஜீவா நடித்த, திருநாள், போக்கிரிராஜா, கவலை வேண்டாம் ஆகிய மூன்று படமுமே, ஜீவாவுக்கு கவலையையே கொடுத்தது * ஜிகர்தண்டா இயக்குனரின், இறைவி; கதையின் நாயகியாக த்ரிஷா நடித்த, நாயகி ; சிம்பு - நயன்தாரா ஜோடியில் பாண்டிராஜ் இயக்கிய, இதுநம்ம ஆளு; 'வெள்ள' நாயகன் சித்தார்த்தின், ஜில் ஜங் ஜக் ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கின.
அடடா… படங்கள்* மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தை, சுதா கோங்கரா என்ற பெண் இயக்கினார். இப்படம் ஹிட்டானது. * வெற்றிமாறன் இயக்கிய, விசாரணை, ஆஸ்கர் வரை சென்று திரும்பியது. சுசீந்திரன் இயக்கிய, மாவீரன் கிட்டு; நதியா உள்ளிட்ட பெண்கள் மட்டுமே நடித்த, திரைக்கு வராத கதை; சூர்யா நடித்த, 24; கார்த்தியின், காஷ்மோரா, தொடர் தோல்வியை சந்தித்த, வெங்கட் பிரபு இயக்கிய, சென்னை - 600028 இரண்டாம் பாகம் ஆகிய படங்கள், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தன
புது டிரென்ட்* படத்தின் வெற்றிக்கு பத்திரிகை, ஊடகம், போஸ்டர், கட் - அவுட்களே விளம்பரங்களாக அமைந்தன. இந்தாண்டு இணையதள விளம்பரமே மேலோங்கியது. இதை படத்தின் தயாரிப்பாளர், நடிகர், நடிகையர் என அனைவருமே ஊக்குவித்தனர்* மோஷன் போஸ்டர், டீசர், பிரமோ சாங் என, எதையெல்லாம் விளம்பரப்படுத்த முடியுமோ அனைத்தையும் இணையதளத்தில் உலாவவிட்டு, அதில், ஒரு கோடி 'லைக்'குகளை அள்ளினர். இதில், கபாலி, தெறி, 24, ரெமோ, எஸ் - 3 படங்கள் உச்சத்தை தொட்டன.
நடிகர்கள் மோதல்நடிகர் சங்க தேர்தல், 2015 இறுதியில் நடந்தது. இதில், சரத்குமார் அணியை எதிர்த்து போட்டியிட்ட விஷாலின், பாண்டவர் அணி வெற்றி பெற்றது. தொடர் நடவடிக்கைகள், இரு தரப்பிலும், கருத்து மோதல்களை ஏற்படுத்தின. இதன் உச்சமாக, சரத்குமார், ராதாரவி ஆகியோர், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டது. தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் மீது புகார் தெரிவித்த விஷால், தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து, தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும், திரைத்துறையின் பல சங்கங்களில், ஊழல் குற்றச்சாட்டு, மோதல் என, களேபரமாகவே உள்ளது.
வெற்றி நாயகர்கள் * விஜய் சேதுபதி நடித்த, சேதுபதி, காதலும் கடந்து போகும், தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க படங்கள் தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது.* சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.* ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்த, கடவுள் இருக்கான் குமாரு; எனக்கு இன்னொரு பேரு இருக்கு படங்கள் பெரிய ஹிட் இல்லையென்றாலும், நாயகனுக்கு பேர் சொல்லும் படமாக அமைந்தது.* தொடர் வெற்றியை குவித்த நயன்தாரா, தென்னிந்தியாவின், லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார். ஒரு படத்திற்கு, நான்கு கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறுகின்றனர் * விவேக், வடிவேலு, சூரி, சந்தானத்தை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி காமெடி நடிகராக உயர்ந்தார்
ரீமேக் * மலையாளத்தில், 'ஹிட்' ஆன, பெங்களூர் டேஸ் - தமிழில், ஆர்யா, பாபிசிம்ஹா, திவ்யா நடிப்பில், பெங்களூரு நாட்கள் ஆக, வெளி வந்தது. ஆனால் மலையாளத்தை போல், தமிழில் வெற்றி கிடைக்கவில்லை * தெலுங்கில் அல்லு அர்ஜுன், இலியானா நடித்த, ஜுலாயி படம், தமிழில் பிரசாந்த் நடிப்பில், சாஹசம் ஆக வெளியானது. இதன் வெற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை * கொரியா, இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளில் இருந்து உருவான, ஆறாது சினம், காதலும் கடந்து போகும், தோழா, மனிதன், அம்மா கணக்கு, மனிதன், மீண்டும் ஒரு காதல் கதை உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை
ஹாலிவுட் படங்கள்* இந்தாண்டும், ஹாலிவுட் படங்கள், தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தன என்றே கூறலாம். 50க்கும் மேற்பட்ட, அனிமேஷன் உள்ளிட்ட, ஹாலிவுட் படங்கள் தமிழில், 'டப்'பாகி வெளியாகின. தி ரெவனன்ட், ஜங்கிள் புக், பீலே, தி லெஜண்ட் ஆப் டார்ஜான், ஜுட்டோபியா, தி ஆங்கிரி பேர்ட் உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement