Advertisement

ஸ்பெஷல் கட்டுரை

பிரிட்டன் 'அவுட்'ஐரோப்பிய கூட்டமைப்பில் 28 நாடுகள் இடம் பெற்றிருந்தன. இவை பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டன. பொதுவான கரன்சியாக 'யூரோ' இருந்தது. இதிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இது பற்றி கருத்து ஓட்டெடுப்பு, டேவிட் கேமரூன் மீண்டும் பிரதமரானதும், ஜூன், 23ல் நடந்தது. பிரிட்டன் வெளியேறுவதற்கு, 52 சதவீத மக்களும், தொடர வேண்டும் என, 48 சதவீத மக்களும் ஓட்டளித்தனர். ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என, வலியுறுத்தி வந்த பிரதமர் கேமரூன், மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றார். 'இரும்பு பெண்மணி' மார்கரெட் தாட்சருக்கு பின் 2வது பெண் பிரதமர் இவரே. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேற 2 ஆண்டுகள் தேவைப்படும்.விளைவுகள்: பிரிட்டனின் முடிவால் அன்றைய தினம் அமெரிக்க டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்ட் மதிப்பு, கடந்த, 31 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. இதன் பாதிப்பு, பல்வேறு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. மந்தமான பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை அதிகரித்தல், அகதிகள் பிரச்னை, கிரீஸ் நாட்டின் கடன் பிரச்னைகள், உக்ரைன் உள்நாட்டு போர் என, பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் ஐரோப்பிய யூனியனுக்கு, பிரிட்டன் வெளியேறுவது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வல்லரசு நாயகன்உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்க அதிபர் தேர்தல், 2016ல் அதிக கவனத்தை ஈர்த்தது. அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமாவின் பதவிக்காலம் 2017 ஜன., 20ல் முடிவடைகிறது. இதனால் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை 2016 துவக்கத்திலேயே துவங்கியது. ஒவ்வொரு கட்சி சார்பிலும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்வு முதலில் நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப், சுதந்திரவாதி கட்சி சார்பில் கேரி ஜான்சன் தேர்வாகினர். ஆனால் அமெரிக்காவில் இரு கட்சி ஆட்சி முறை தான் வழக்கம் என்பதால் உண்மையான போட்டி என்பது ஹிலாரி மற்றும் டிரம்ப் இடையே தான் நடந்தது. விவாத நிகழ்ச்சிகளில் மக்களின் ஆதரவு மற்றும் கருத்துகணிப்புகளின் முடிவுகள் ஹிலாரிக்கு சாதகமாக இருந்தன. ஆனால் தேர்தல் முடிவு வேறுவிதமாக அமைந்தது. நவ., 8ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 50 மாகாணங்களில் 538 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் 270 இடங்களில் வெற்றி பெற்றால் அதிபராகலாம் என்ற நிலையில் டொனால்டு டிரம்ப், 304 இடங்களில் வென்று வல்லரசின் புதிய அதிபரானார்.பின் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் ('எலெக்ட்டோரல் காலேஜ்') ஒன்று கூடி டிச., 20ல், அதிபராக அதிகாரப்பூர்வமாக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். வரும் ஜன., 20ல் அதிபராக பதவியேற்க உள்ளார்.
சீனக் கடலில் திக்... திக்... திக்தென் கிழக்காசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த, தென் சீனக் கடல் விவகாரத்தில், 'வரலாற்று ரீதியாக உரிமை கோருவதற்கு, சீனாவுக்கு சட்ட அடிப்படை ஏதுமில்லை' என, சர்வதேச தீர்ப்பாயம் ஜூலை 12ல் உத்தரவிட்டது. தென் சீனக் கடலில், சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு, பல்வேறு பகுதிகளில் மணல், கற்களை கொட்டி செயற்கை தீவுகளை, சீனா அமைத்து வருகிறது. விமானப்படை தளம், கலங்கரை விளக்கம், கடற்படை தளம் போன்றவற்றை உருவாக்கி வருகிறது. இதன் காரணமாக, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், மலேசியா, தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுக்கிறது. இந்த கடல் பகுதியில் உள்ள முக்கிய தீவுகளை சீனா பல ஆண்டுகளாகவே, தன் வரைபடத்தில் சேர்த்து வெளியிடுகிறது. இதில் பல தீவுகளுக்கு பிலிப்பைன்சும் உரிமை கொண்டாடி வருகிறது. இரு நாடுகளுக்கும் 19 ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு பல சுற்று பேச்சு நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலையில் பிலிப்பைன்ஸ், ஐ.நா.,வின் கடல்சட்ட கூட்டமைப்பின் உதவியை நாடியது. இது குறித்து விசாரிப்பதற்காக ஐந்து பேர் அடங்கிய சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. ஜூலை 22ல் தீர்ப்பு வெளியானது. சீனாவுக்கு உரிமை இல்லை என்ற தீர்ப்பை பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் வரவேற்றன. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது.முக்கிய கடல் பகுதி: சீனாவின் தென்பகுதியில் பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக, தென் சீனக் கடல் அமைந்துள்ளது. இது, சிங்கப்பூர், தைவான் ஜலசந்திக்கு நடுவே உள்ளது. உலகின், மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, இந்த பகுதி வழியே நடப்பதால், மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கடலின் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருக்கிறது. இதனால், அந்த கடல்பகுதியை, சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதனால் அதேபகுதியைச் சேர்ந்த மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement