Advertisement

கண்டுபிடிப்புகள் - 2016

உலகளவில் சிறந்த கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்களை, அமெரிக்காவின் 'டைம்' இதழ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன்படி 2016ம் ஆண்டுக்கான கண்டுபிடிப்புகள்.

குழந்தைகளுக்கான 'பேண்ட்'
அமெரிக்காவில் 4ல் ஒரு குழந்தை போதுமான உடற்பயிற்சி செய்வதில்லை. அதே போல உலகளவில் 4ல் ஒரு குழந்தைக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. இந்த இரண்டு பிரச்னைகளையும் ஒரே கருவியில் தீர்க்கும் விதமாக 'யுனிசெப்' அமைப்பு, 'கிட் பேண்ட்' ஒன்றை உருவாக்கியுள்ளது. இது 'மொபைல் ஆப்' மூலம் செயல்படும். இந்த 'பேண்ட்' ஐ குழந்தைகள் கையில் அணிந்து கொள்ள வேண்டும். இதில் ஓடுதல், விளையாடுதல் போன்ற
இலக்குகள் தரப்படும். இதனை நிறைவேற்றிய குழந்தைகளுக்கு 'யுனிசெப்' அமைப்பு உணவு வழங்கும். இதன் மூலம் உடற்பயிற்சி மற்றும் உணவு பிரச்னை தீர்க்கப்படும் என யுனிசெப் நம்பிக்கை தெரிவிக்கிறது.

நீரிழிவுக்கு 'அருமருந்து'
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கணக்கிடுவது சிரமமான வேலை. ஒவ்வொரு முறையும் ரத்தத்தை எடுத்து, சர்க்கரை அளவை கணக்கிடுவது கொடுமையானது. இதற்கு தீர்வு காண 'செயற்கை கணையம்' போல செயல்படும் 'மினிமெட் 670ஜி' கருவி, அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டின் எப்.டி.ஏ., அனுமதி வழங்கி விட்டது. 'ஐபேட்' போல உள்ள இந்த சிறிய கருவியை, உடலின் வெளிப்புறம் அணிந்து கொள்ள வேண்டும். அதுவே ரத்தத்தில் சர்க்கரை அளவை கணக்கிடும். வழக்கத்துக்கு மாறாக இருக்கும்போது, அதிக வலியில்லாத நுண் ஊசி மூலம் உடலில் இன்சுலினை, 'பம்ப்' செய்து சர்க்கரை அளவை சமன் செய்கிறது. இந்த சாதனம் வரும் ௨௦௧௭ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வருகிறது. இக்கருவி சோதனையின் போது, இதனை அணிந்த நோயாளிகளின் சர்க்கரை அளவை துல்லியமாக கட்டுப்படுத்த முடிந்தது என நிரூபிக்கப்பட்டது.

ஹலோ சென்ஸ்
ஹலோ சென்ஸ் என்ற கேட்ஜெட், அலாரம் போல நாம் விரும்பும் நேரம் எழுவதற்கு உதவுகிறது. ஆனால் இது நாம் செட் செய்யும் நேரத்துக்கு ஒலி
எழுப்புமே அந்த சாதாரண அலாரம் கிடையாது. இது அலாரம் அடிப்பதில்லை. நமது துாக்கம் இனிமையாக இருக்க வழி செய்கிறது. எப்படியெனில் துாங்கும் அறையின் வெப்பநிலையை குறைக்கிறது. ஈரப்பதம், வெளிச்சம் மற்றும் காற்றின் தரம் ஆகியவற்றையும் இந்த கேட்ஜெட் தெரிவிக்கிறது. மின்சாரத்தில் இயங்கும் இந்த கேட்ஜெட், அலைபேசியுடன் இணைக்கப்பட்டவுடன், அலைபேசியில் அந்த விபரம் அனைத்தும் தெரியும். வழக்கமான உறக்கத்தை கணக்கிட்டு நாம் எழுந்திருக்க வழி செய்கிறது.

மின்சார கார்
அதிகரிக்கும் டீசல், பெட்ரோல் விலை காரணமாக மின்சார காரின் மீது பலரது கவனம் திரும்பியுள்ளது. மின்சார கார்கள் ஏற்கனவே அறிமுகமாகி உள்ளது. இருப்பினும் இதன் விலை கூடுதலாகவும் மற்றும் மைலேஜ் (ஒருமுறை சார்ஜ்க்கு 160 கி.மீ.,) குறைவாகவும் இருப்பதால் அதனை வாங்க தயங்கினர்.
இந்நிலையில் செவர்லட் நிறுவனம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 320 கி.மீ., தூரம் செல்லும் மின்சார காரை அறிமுகப்படுத்தி உள்ளது. விலையும் குறைக்கப்பட்டுள்ளது. மின்சார கார் பிரியர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்தது. இதன் விலை ரூ. 27 லட்சம்.

மடிக்கும் ஹெல்மெட்
வெளிநாடுகளில் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் ஹெல்மெட் அணிவது வழக்கம். இதனால் விபத்தில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் சிலர் இதனை
அணிவதில்லை. இதற்கு ஹெல்மெட் அளவு மற்றும் அதனை கையில் எடுத்துச் செல்வதில் உள்ள சிரமம் போன்றவை காரணமாக கூறப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் விதமாக, சாதாரண ஹெல்மெட்டுக்கு பதிலாக மடித்து பயன்படுத்தும் ஹெல்மெட்டை தயாரித்து உள்ளனர். இதனை கொண்டு செல்வது எளிது என்பதால் அதிகமானோர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் விலை ரூ. 8,000.

ஆட்டோமேடிக் ஷூ
சாதாரண ஷூ வியாபாரத்தில் கூட டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்து விட்டது. பிரபல நைக் நிறுவனம், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் ஷூவை (நைக் ஹைபர்அடாப்ட் 1.0) தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவெனில் இதில் உள்ள லேஸ்கள், சாதாரண கயிறு அல்ல; டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைந்த 'பவர் லேசர்'. இதை அணிபவரின் கால் அளவுக்கு ஏற்பவும், நடந்து சென்றால் அதற்கேற்பவும் தானாகவே தளர்த்தி கொள்ளும். இதற்காக இந்த ஷூவில் பிளஸ் / மைனஸ் பட்டன் உள்ளது. சார்ஜ் செய்து கொள்ளும் பேட்டரி இதில் உள்ளது. விலை ரூ. 48 ஆயிரம்.

வித்தியாசமான கால்பந்து மைதானம்
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஒரு கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான செவ்வக வடிவிலான மைதானம் போல் இல்லாமல்,
எல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த குடியிருப்பு பகுதிக்குள் இருந்த தனியார் காலி இடத்தில், அந்த இடத்துக்கு ஏற்ற வகையிலேயே இந்த மைதானத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர் கட்டட வடிவமைப்பாளர்கள். இந்த மைதானம் சிறுவர்கள் விளையாடுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதுவே உலகின் செவ்வக வடிவு அல்லாத முதல் கால்பந்து மைதானம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement