Advertisement

ஹே ஜூடு (மலையாளம்)

நடிகர்கள் : நிவின்பாலி, த்ரிஷா, சித்திக், அஜூ வர்கீஸ், விஜய் மேனன், நீனா குறூப்
ஒளிப்பதிவு : கிரீஷ் கங்காதரன்
இசை : அவுசப்பச்சன், ஜெயச்சந்திரன், ராகுல்ராஜ், கோபிசுந்தர்
டைரக்சன் : ஷ்யாம் பிரசாத்.

2015-ல் வெளியான இவிடே என்கிற படத்தை தொடர்ந்து நிவின்பாலியும், இயக்குனர் ஷ்யாம் பிரசாத்தும் மீண்டும் இணைந்துள்ள படம் இது. தவிர மலையாளத்தில் த்ரிஷா அடியெடுத்து வைத்துள்ள முதல் படமும் கூட.

கேரளாவில் பழமையான பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார் சித்திக். அவரது மகன் நிவின்பாலி மற்றவர்களோடு ஒட்டி பழகாத சுபாவம் கொண்டவர். எதற்காக சிரிக்க வேண்டும், எதற்காக அழ வேண்டும் என உணர்வுகளை கூட வெளிப்படுத்த தெரியாதவர். ஆனால் மீன்கள் பற்றிய படிப்பிலும் கணிதவியலிலும் கெட்டிக்காரர்.

கோவாவில் உள்ள தூரத்து உறவினரான பெண்மணி ஒருவர் இறந்துவிட்டதாக அங்கே குடும்பத்துடன் செல்கிறார் சித்திக். அந்த பெண்மணி தனது உயிலில் அவரது மிகப்பெரிய பங்களாவை சித்திக்கிற்கும், நிவின்பாலிக்கும் சேர்த்து எழுதி வைத்துள்ள விவரம் வக்கீல் மூலம் தெரியவருகிறது. அந்த வீட்டை விற்றுவிடலாம் என முடிவு செய்யும் சித்திக், அவுட் ஹவுசில் வாடகைக்கு குடியிருக்கும் த்ரிஷா மற்றும் அவரது தந்தையை காலி பண்ண சொல்கிறார்.

ஆனால் அவர்களின் ஒப்பந்தம் முடிய இரண்டு வருடங்கள் இருக்கவே, நிவின்பாலியை அவர்களுடன் நட்பாக பழகி காலி செய்ய வைக்கும் வேலையில் இறங்குகிறார் சித்திக். ஆனால் பொய் பேசி பழக்கமில்லாத நிவின்பாலி, த்ரிஷா மற்றும் அவரது தந்தையின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களிடம் நட்பாகிறார்.. த்ரிஷா மூலம் நீச்சல் கற்றுக்கொள்கிறார்.. சிரிக்க கற்றுக்கொள்கிறார்.. கோவாவில் உள்ள மீன்வளத்துறையில் வேலைக்கும் விண்ணப்பிக்கிறார்.

ஆரம்பத்தில் நிவின்பாலியின் இந்த செயல்களை சித்திக் ஆதரிக்காவிட்டாலும், போகப்போக மகனின் நடவடிக்கைகளில் மாற்றம் வருவது கண்டு மகிழ்கிறார். வீட்டை விற்கும் எண்ணத்தையும் கைவிடுகிறார்.. ஆனால் அந்த சந்தோசம் நீடிக்கவிடாமல் எதிர்பாராமல் விதி விளையாடுகிறது. இறுதியில் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்..

பொதுவாக நிவின்பாலி தேர்ந்தெடுத்து நடிக்கும் கேரக்டர்கள் எல்லாமே வித்தியாசம் தான் என்றாலும், இது ரொம்பவே புதுசு.. கிட்டத்தட்ட ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான ஒருவனின் குணாதிசயங்களுடன் படம் முழுதும் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். நிவின்பாலியை அவரது போக்கிலேயே திசைதிருப்பி தன்னம்பிக்கை தரும் கேரக்டரில் த்ரிஷா செம பிட்.. கோவாவில் வாழ்க்கையை தான் விரும்பியபடி வாழும் பெண்ணாக, இந்த கேரக்டர் த்ரிஷாவுக்கும் புதுசு.

அஜூ வர்கீஸ் இருக்கிறார், காமெடி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என நினைத்தால் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நட்புக்காக தலைகாட்டிவிட்டு ரசிகர்களை ஏமாற்றி விடுகிறார் மனிதர். ஆனால் அந்த குறை தெரியாமல் படத்தின் காமெடி காட்சிகளை கையில் எடுத்துக் கொண்டுள்ளார்கள் நிவின்பாலியின் அப்பாவாக வரும் சித்திக்கும், த்ரிஷாவின் தந்தையாக நடித்துள்ள விஜய் மேனனும். படு பாந்தமான நடிப்பில் நிவின்பாலியின் அம்மாவாக நீனா குறூப் நினைவில் நிற்கிறார்.

கோவாவை இன்னொரு கேரளா போலவே அழகுற காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன். கதைக்களம் கோவா என்பதால் பாடல்கள் எல்லாமே மேற்கத்திய பாணி தான். கதாபாத்திரங்களை உணர்வுப்பூர்வமாக அணுகுவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் ஷ்யாம் பிரசாத். அந்தவகையில் படம் சிட்டி டிராபிக்கில் சிக்கிய வால்வோ பஸ்ஸை போல கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், ரசிக்கத்தக்க விதத்தில் ஒரு பீல்குட் படமாக இதை கொடுத்துள்ளார் ஷ்யாம் பிரசாத்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement