Advertisement

ஆதி (மலையாளம்)

நடிகர்கள் : பிரணவ் மோகன்லால், ஜெகபதி பாபு, ஷிஜூ வில்சன், ஷராபுதீன், கிருஷ்ணகுமார், மேகநாதன், அனுஸ்ரீ, சித்திக், லேனா மற்றும் பலர்
இசை : அனில் ஜான்சன்
ஒளிப்பதிவு : சதீஷ் குறூப்
டைரக்சன் : ஜீத்து ஜோசப்..

மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் இது.. தவிர மோகன்லாலுக்கு 'த்ரிஷ்யம்' எனும் சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்த இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள படம் என இரட்டை எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்த படம், அதில் எந்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது..? பார்க்கலாம்.

மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சித்திக்கின் மகன் பிரணவ், இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பது அவரது லட்சியம். அம்மா லேனா முழு மனதுடன் பிரணவுக்கு ஊக்கம் தர, வேறு வழியின்றி அப்பா சித்திக்கும் இரண்டு வருடத்திற்குள் உன் இலக்கை அடைந்துகாட்டு என டைம் கொடுக்கிறார்.

பெங்களூரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பாடினால் அங்கு வரும் பிரபலங்களின் கவனத்தை ஈர்க்கலாம் என நண்பர்கள் பிரணவிற்கு ஐடியா கொடுக்கின்றனர். அதேசமயம் தனது முதலாளியின் காரை கேரளாவில் இருந்து பெங்களூருக்கு கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு வருமாறு தந்தை சித்திக் கூறியது பிரணவுக்கு வாய்ப்பாக அமைகிறது.

பெங்களூருவுக்கு சென்ற பிரணவ் அந்த ஹோட்டலிலும் உள்ளே நுழைந்து தனது இசையால் அங்குள்ளவர்களின் கவனத்தையும் ஈர்க்கிறார். அதேசமயம் அங்கே நடக்கும் பார்ட்டியில் தனது முதலாளி ஜெகபதிபாபுவின் மகன் மற்றும் அவரது வளர்ப்பு மகன் ஷிஜூ வில்சன் இருவருடனும் கலந்துகொள்ள வந்திருந்த பிரணவின் தோழி அதிதி ரவி அவரை அடையாளம் கண்டு உற்சாகப்படுத்துகிறார். ஆனால் இது உடன் வந்த இருவருக்கும் பிடிக்காமல் ஹோட்டலின் மொட்டைமாடியில் பிரணவுடன் கைகலப்பில் ஈடுபடுகின்றனர்.

இதில் ஷிஜூ வில்சன் தாக்கியதில் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து விழுந்து இறக்கிறார் ஜெகபதிபாபுவின் மகன். வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஜெகபதிபாபுவிடம், பிரணவ் தான் அவரது மகனை தள்ளிவிட்டு கொன்றதாக பிளேட்டை திருப்புகிறார் ஷிஜூ வில்சன். இதனால் கோபமான ஜெகபதிபாபு மகனின் மரணத்துக்கு காரணமான பிரணவை பெங்களூரை விட்டு தப்பிக்க முடியாமல் தனது பணபலம், படைபலத்தால் லாக் செய்து தேடுதல் வேட்டையை துவக்குகிறார்.

சாதாரண இளைஞனான பிரணவ், தனக்குள் இருக்கும் பார்க்கோர் விளையாட்டு திறமையாலும், பெங்களூருவில் எதிர்பாராமல் கிடைக்கும் சில நட்புகளின் உதவியாலும், ஜெகபதிபாபுவிடம் இருந்து தப்பித்து வெளிநாடு செல்ல முயற்சி எடுக்கிறார். அவரது முயற்சிகளை ஷிஜூ வில்சன் ஒவ்வொன்றாய் தடைசெய்ய, இறுதியில் ஜெகபதிபாபுவிடமே நடந்ததை கூற முடிவு செய்கிறார் பிரணவ்..

யாராலும் எளிதில் நெருங்க முடியாத, தன் மீது கொலைவெறியுடன் காத்திருக்கும் ஜெகபதிபாபுவை, ஷிஜூ வில்சனின் தேடுதல் வேட்டையையும் தாண்டி பிரணவால் சந்தித்து உண்மையை கூற முடிந்ததா..? இல்லை அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு வெளிநாட்டிற்கு தப்பினாரா பிரணவ்..? எதிர்பாராத க்ளைமாக்ஸ் இதற்கு விடை சொல்கிறது.

அறிமுகப்படம் என்றாலும் வழக்கமான காதல், நண்பர்கள் செட்டப் என்கிற சில காட்சிகளுக்கு டாட்ட பைபை சொல்லிவிட்டு, காரியத்தில் மட்டும் கண்ணாக இருப்பதாலேயே சுலபமாக நம் கவனம் ஈர்க்கிறார் பிரணவ் மோகன்லால். பார்க்கோர் எனும் தாண்டோட்டம் கலையை ரியலாக கற்றுக்கொண்டு பிரணவ் அசத்தும் காட்சிகளை பார்க்கும்போது அட, இன்னொரு ஜாக்கிசான் நமக்கு கிடைத்துவிட்டார் என்ற நினைப்பு எழாமல் இல்லை. தியேட்டரில் அவரது ஆக்சன் காட்சிகளுக்கு கிடைக்கும் கைதட்டலும் அதை உறுதிப்படுத்துகிறது.

படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் சோடைபோகாத பங்களிப்பை தந்துள்ளனர். அதில் பெங்களூருவில் எதிர்பாராத விதமாக நட்பாகும் ஷராபுதீனின் பலன் கருதா தியாகம் நம்மை நெகிழ வைக்கிறது. அவரது அக்காவாக பிரணவுக்கு உதவும் அனுஸ்ரீ, கடைசிக்கட்டம் வரை துணை நிற்கும் லாரி ட்ரைவர் மேகநாதன், அந்த கம்யூட்டர் ஹேக்கர் டோனி லுக் என மூவரும் கூட நட்பின் பிரமாண்டத்தை விரிவுபடுத்துகிறார்கள்..

ஜெகபதிபாபு.. வழக்கம்போல அடிபட்ட புலியாக உறுமுவதுடன் நின்று விடுகிறார். ஆனாலும் அவரது வளர்ப்பு மகனாக வரும் ஷிஜூ வில்சன் சைலண்ட் வில்லத்தனத்தால் கடைசிவரை மிரட்டுகிறார். கதறும் அம்மாவாக லேனாவும், பதறும் அப்பாவாக சித்திக்கும் கச்சிதம். பிரணவின் தோழியாக வந்து சூழ்நிலைக்கைதியாக மாறும் அதிதி ரவி சரியான தேர்வு.. மகன் படம் என்பதால் ஒரே ஒரு காட்சியில் மட்டும் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறார் மோகன்லால்.

ஒளிப்பதிவாளர் சதீஷ் குறூப்புக்கு இந்தப்படத்தில் இருமடங்கு வேலைப்பளு.. குறிப்பாக பார்க்கோர் காட்சிகளில் பிரணவும் எதிரிகளும் மோதுவதை படமாக்கிய விதம் அருமை. அனில் ஜான்சனின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு விறுவிறுப்பு கூட்டுகிறது. தியேட்டரில் நிறைந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது இது மோகன்லாலுக்காகவே வந்த கூட்டம் என்பதை நம்மால் உணரமுடிகிறது. இதை உணர்ந்ததாலோ என்னவோ இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் ரசிகர்களை எந்தப்பக்கமும் சிந்தனையை சுழல விடாமல் திரைக்கதையால் கட்டிப்போடுகிறார்.

பல இடங்களில் லாஜிக்காக காட்சிகளை அமைத்து, சில இடங்களில் யூகிக்க முடியாமல் என காட்சிகளை பரபரவென நகர்த்தியுள்ளார் ஜீத்து ஜோசப். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சி மிரட்டல் ரகம். அதற்கேற்றாற்போல் எந்தவித மிகை கூட்டலும் இல்லாத யதார்த்தமான நடிப்பால் படத்தை தாங்கிப்பிடித்து துணை நின்றுள்ளார் பிரணவ்..

இதற்கு முன்பு அறிமுகமான வாரிசு நடிகர்கள் எவரும் இதுபோல ஆக்சன் காட்சிகளில் அசத்தியதில்லை என்பதால் பிரணவ் இந்த ரூட்டை கெட்டியாக பிடித்துக்கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை...

ஆக, அறிமுக ஹீரோவாக முதல் படத்திலேயே வெற்றிக்கோட்டை தொட்டுள்ளார் பிரணவ் மோகன்லால்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement