Advertisement

புண்யாலன் பிரைவேட் லிமிடெட் (மலையாளம்)

நடிகர்கள் : ஜெயசூர்யா, அஜூ வர்கீஸ், விஜயராகவன், கின்னஸ் பக்ரு, ஸ்ரீஜித் ரவி, தர்மஜன் போல்காட்டி
டைரக்சன் : ரஞ்சித் ஷங்கர்

கடந்த 2013ல் ஜெயசூர்யா - இயக்குனர் ரஞ்சித் ஷங்கர் கூட்டணியில் வெற்றிபெற்ற 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப்படம் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தின் முடிவில் அகர்பத்தி கம்பெனி ஆரம்பித்து மிகப்பெரிய தொழிலதிபராக மாறிய ஜெயசூர்யா, இதில் சந்தர்ப்ப சூழலால் தொழிலில் நட்டமடைந்து கம்பெனியை மூடவேண்டிய நிலைக்கு ஆளாவதாக படம் துவங்குகிறது.

தொழிலில் நட்டமடைந்தாலும் மனம் தளராத ஜெயசூர்யா, மீண்டும் இன்னொரு வியாபார பொருளை உற்பத்தி செய்ய முடிவு செய்கிறார். முதல் பாகத்தில் யானையின் சாணத்தை வைத்து அகர்பத்தி தயாரித்தவர், தற்போது அதே சாணத்தை வைத்து, குடிதண்ணீருக்கு மாற்றாக புதிய பானம் ஒன்றை உருவாக்க முடிவு செய்கிறார். வங்கி அதிகாரி மற்றும் ஒருசில நண்பர்களுடன் சிறிய அளவில் அந்த நிறுவனத்தை துவங்கவும் செய்கிறார்.

ஆனால் அவற்றை வெளியூர் அனுப்புவதிலும், அவற்றை விளம்பரப்படுத்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளினாலும் சிலரின் எதிர்ப்பை சம்பாதித்து, அதன் காரணமாக சில நாட்கள் சிறை தண்டனை அனுபவிப்பதுடன், லட்சங்களில் அபராதம் கட்டவேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகிறார். இந்தநிலையில் அரசை எதிர்த்து, தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என ஒரு வீடியோ பதிவை வெளியிடுகிறார் ஜெயசூர்யா.. அது வைரலாகி, முதல்வரின் கவனத்துக்கும் செல்கிறது.

தங்கள் அரசின் மீதான தவறை மறைப்பதற்காக, குற்றச்சாட்டு கூறிய ஜெயசூர்யாவை ஒருநாள் முழுக்க தன்னுடன் கூடவே இருந்து, தனது பணியின் சிரமங்களை நேரடியாக பார்த்து அறிந்து கொள்ள ஜெயசூர்யாவுக்கு அழைப்பு விடுகிறார் முதல்வர். இந்த அழைப்பு இருவரது வாழ்க்கையிலும் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்துகிறது.. இதன் பலன் முதல்வருக்கு கிடைத்ததா, இல்லை ஜெயசூர்யாவுக்கு கிடைத்ததா என்பது க்ளைமாக்ஸ்.

ஒரு தொழிலில் நட்டபட்டவர் மீண்டு(ம்) எழுந்து வருவதை காட்சிக்கு காட்சி, தனது நடிப்பால் நம்பிக்கையூட்டும் விதமாக வெளிப்படுத்தியுள்ளார் ஜெயசூர்யா. இடைவேளைக்குப்பின் முதல்வருக்கும் அவருக்குமான ஒருநாள் பயணம், உரையாடல் எல்லாம் எதார்த்த ரீதியில் அமைந்துள்ளது. அந்தப்பயணத்தை தனக்கு சாதகமாக மாற்ற முயற்சிக்கும் அவரது யுக்தி கைதட்டலை அள்ளுகிறது.

முதல் பாகத்தில் ஜெயசூர்யாவின் மனைவியாக நடித்த நைலா உஷா, இந்தப்படத்தின் துவக்கத்திலேயே இறந்துவிட்டதாக காட்டப்படுவதால் மொத்தப்படமும் கதாநாயகி இல்லாமல், ஒரு பாடல் கூட இல்லாமல் நகர்வது கதைக்காக எந்த தியாகமும் செய்ய இயக்குனரும் ஹீரோவும் தயாராக இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

இடைவேளைக்குப்பின் படம் முழுதும் வரும் முதல்வர் கேரக்டரில் நடித்துள்ள விஜயராகவன் சம்பந்தப்பட்ட காட்சிகளை பார்க்கும்போது, மறைந்த நடிகர் ரகுவரனை மட்டுமல்ல, முதல்வன் படத்தையே ஞாபகப்படுத்துகிறார்.

ஜெயசூர்யாவின் நண்பரான அஜூ வர்கீஸ் அவருக்கு உடன் இருந்து உதவமுடியாத சூழலில், துபாயில் இருந்துகொண்டு வீடியோ போன்கால் மூலமாகவே அவருக்கு நம்பிக்கையையும் பாசிடிவ் எனர்ஜியையும் தருவது புது விஷயம்.

ஜெயசூர்யாவின் ட்ரைவராக முதல் பாகத்தில் இருந்த அதே ஸ்ரீஜித் ரவி, இதிலும் வெள்ளந்தியான குணத்துடன் காட்சிக்கு காட்சி நம்மை சிரிக்கவைக்கிறார். பேங்க் மேனேஜராக குணச்சித்திர முகம் காட்டியுள்ளார் கின்னஸ் பக்ரு.

முதல்வருடனேயே பயணம் செய்து, அவர் அருகில் இருக்கும்போதே ஊடகங்கள் வாயிலாக அரசாங்கத்தின் குறைகளை பட்டவர்த்தனமாக வெளிச்சம்போட்டு காட்டுகிறார்கள். குறிப்பாக படத்தின் சாட்டையடி வசனங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன.

“சி.எம் என்பவர் நமக்காக நாமே பார்த்து சம்பளம் கொடுத்து நியமித்த வேலைக்காரர் தான். ஒரு பெண்ணை கெடுத்து கொன்ற குற்றவாளிகள் யாரென தெரிந்தும் அவர்களை கைது செய்யாதது ஏன்.. பஸ்டாப்பில் வைபை பொறுத்த லட்சங்கள் செலவு செய்யும் அரசு, அங்கே டாய்லெட் வசதி செய்ய முன்வராதது ஏன்” என்பது உள்ளிட்ட முதல்வரிடமே கேட்கப்படும் கேள்விகள்.. சான்ஸே இல்லை.. (தமிழகத்தில் இப்படி படம் எடுக்க முடியுமா..)

ஒரு மாநில முதல்வரைவிட, அவருடன் ஒருநாள் பயணிக்கும் சாதாரண குடிமகன் தான் மீடியாக்களின் அட்ராக்சன் என்பதையும், மீடியாக்களின் அகோரப்பசியையும் பொட்டில் அடித்த மாதிரி காட்டியுள்ளார்கள். மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை இவ்வளவு அப்பட்டமாக சொன்னதற்காக இயக்குனர் ரஞ்சித் ஷங்கரை பாராட்டுவதுடன், சினிமாவை வெறும் சினிமாவாக மட்டுமே பார்த்து இதுபோன்ற படங்களுக்கு எந்தவித தொந்தரவும் செய்யாத, செய்யவிரும்பாத கேரள மாநிலத்தின் ஆளும் தலைமையயும் நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement