Advertisement

ஷெர்லக் டோம்ஸ் (மலையாளம்)

நடிகர்கள் : பிஜூமேனன், மியா ஜார்ஜ், சிருந்தா ஆஷப், சலீம்குமார், கலாபவன் சாஜன், விஜயராகவன், சுரேஷ்குமார் மற்றும் பலர்

கதை : சாச்சி-நஜீம் கோயா

டைரக்சன் : ஷபி

தமிழில் விக்ரம் நடித்த மஜா படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஷபி, இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் ஷெர்லக் டோம்ஸ்.

பள்ளியில் படிக்கும் போதிருந்தே ஷெர்லக் ஹோம்ஸ் நாவல்களை விரும்பி படிப்பவர் பிஜூமேனன். இதனால் தாமஸ் என்கிற அவருடைய பெயரை ஷெர்லக் டோம்ஸ் என மற்றவர்கள் அழைக்கவும் செய்கிறார்கள். அதற்கேற்றாற்போல் பின்னாளில் டிடெக்டிவ் ஆக விரும்பும் பிஜூமேனன் பக்கத்தில் உள்ள சிலரின் உதவியால் படித்து முடித்து, அவரது கனவான டிடெக்டிவ் தொடர்புடைய அமலாக்க துறை அதிகாரியாக பொறுப்பேற்கிறார்.

ஞாபகமறதி அதிகமுள்ள தந்தையுடன் வசிக்கும் பிஜூமேனனுக்கு மனைவியாக வாய்த்த சிருந்தா ஆஷப், பிஜூமேனனிடம் சதா நகை, பணம் என கேட்டு டார்ச்சர் செய்து நிம்மதியை குலைக்கிறார். பிஜூமேனன் விவாகரத்து கேட்டும் தர மறுக்கிறார் சிருந்தா. இந்நிலையில் தனியார் வங்கி ஒன்றில் கருப்பு பணம் மூன்று பெட்டிகளில் பதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வர, அதை ரகசியமாக ஆய்வு செய்ய செல்லும்போது, அவரது மனைவி விவரம் தெரியாமல் குறுக்கிட்டு காரியத்தை கெடுக்கிறார்.

இதனால் எதிரிகள் உஷாராகி விட, இது தெரியாமல் அதிரடி ரெய்டு நடத்தி, அதில் ஒன்றும் கிடைக்காத பிஜூமேனன் சஸ்பென்ட் செய்யப்படுகிறார். இந்த கருப்பு பணம் குறித்து தகவல் கொடுத்த தனது நண்பர்கள் (திருடுவதில் வல்லவர்கள்) வட்டாரத்தையே வெறுத்து ஒதுக்குகிறார். மனைவியுடன் கைகலப்பில் ஈடுபடுகிறார். இதனால் மனைவி போலீசில் புகார் செய்ய, மனநிலை சரியில்லாதவர் என முத்திரை குத்தப்படுகிறார். அதனால் இனி உயிர்வாழ வேண்டாம் என முடிவெடுத்து தற்கொலை செய்து கொள்வதற்காக ஒரு ஸ்டார் ஹோட்டல் ஒன்றின் ஐந்தாம் மாடியில் உள்ள அறை ஒன்றின் பால்கனியில் நின்றுகொண்டு பயமுறுத்துகிறார்..

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்த சமயம் என்பதால் சரியாக அதே அறையில் தான் பழைய நோட்டுக்களை மாற்றும் கும்பலை சேர்ந்த விஜயராகவன் ஒரு பேக் நிறைய பல கோடி ரூபாய் கருப்பு பணத்தை வைத்துக்கொண்டு மாற்றுவதற்காக காத்திருக்கிறார். இது எதையும் அறியாத பிஜூமேனனை போலீஸ்காரர்களும் தீயணைப்பு துறையும் சமாதனம் செய்து காப்பாற்ற முயற்சிக்கின்றனர். பிஜூமேனனால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நண்பர்களும் அங்கு வருகின்றனர்.

பிஜூமேனன் தற்கொலை முயற்சியை கைவிட்டாரா..? ஷெர்லக் ஹோம்ஸ் போல புத்திசாலித்தனம் கொண்ட பிஜூமேனன் உண்மையிலேயே தற்கொலை செய்யும் அளவுக்கு செல்ல காரணம் என்ன..? ஸ்டார் ஹோட்டலில் பதுக்கப்பட்டிருந்த கள்ளநோட்டுக்கள், ஒரு அமலாக்கத்துறை அதிகாரியான பிஜூமேனனின் தற்கொலை முயற்சியில் ஏதாவது மாற்றத்தை கொண்டுவந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

நிச்சயம் பிஜூமேனனுக்கு ஏற்ற, அவரால் மட்டுமே சரியாக பொருந்தக்கூடிய கேரக்டராக இந்த ஷெர்லக் டோம்ஸை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் ஷபி. பிஜூமேனனின் ட்ரேட் மார்க் குறும்புகளுக்கு இதிலும் பஞ்சமில்லை. இடைவேளைக்குப்பின் அவர் ஆடும் தற்கொலை ஆட்டம் இருக்கிறதே.. மனிதர் படு சுவாரஸ்யமாக ஜமாய்த்திருக்கிறார்.

நாயகிகளாக மியா ஜார்ஜ், சிருந்தா ஆஷப் என இரண்டுபேர் இருந்தாலும் கூட, கொடுமைக்கார மனைவியாக, கணவனுக்கு பிரச்சனைகளை உண்டாக்குகிற, கணவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டு ரசிக்கின்ற ரகளையான மனைவி கேரக்டரில் ரணகளப்படுத்துகிறார் சிருந்தா ஆஷப். சேனல் ஒன்றின் ரிப்போர்ட்டராக பரபரப்பான நியூஸ் தேடும் வேலையை கச்சிதமாக செய்திருக்கும் மியாவுக்கு இதில் வாய்ப்பு குறைவே.

பிஜூமேனனின் கேங் நண்பர்களாக வயதான சலீம்குமார் உள்ளிட்ட அனைவரும் பூட்டை உடைத்து மதுக்கடையில் மது பாட்டில்கள் திருடும் காட்சியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள் பிஜூமேனனால் வெறுத்து ஒதுக்கப்படும்போது 'உச்' கொட்டவைத்தாலும், க்ளைமாக்ஸில் 'அடப்பாவிகளா.. இதற்குள் இப்படி ஒரு கதை இருக்கா' என ஆச்சர்யப்படுத்தவும் தவறவில்லை.

பிஜூமேனனால் பாதிக்கப்பட்டு குடிகாரனாக மாறிய கலாபவன் சாஜன், தீயணைப்பு துறை அதிகாரியாக வரும் சுரேஷ்குமார், கழுத்துவலிக்கு மப்ளர் சுற்றிக்கொண்டு எந்நேரமும் காட்சிதரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டயம் நசீர், சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவரை வாரிவிடும் கான்ஸ்டபிள் ஹரீஷ் பெருமன்னா, ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவராக வரும் பிஜூமேனனின் தந்தை என ஒவ்வொரு கதாபாத்திரமும் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகின்றனர்.

குடும்பப்பிரச்சனை போலவே கதையை நகர்த்தி சென்று, அதற்குள் ஷெர்லக் ஹோம்ஸ் படங்களுக்கே உண்டான சில டிடெக்டிவ் ட்விஸ்ட்டுகளை வைத்து க்ளைமாக்ஸில் கதையின் கலரையே மாற்றி, 'அட..அடடே' என ஆச்சர்யப்படுத்தி நம்மை அனுப்பி வைக்கிறார் இயக்குனர் ஷபி.

மொத்தத்தில் இந்த ஷெர்லக் டோம்ஸ் - ஒரு ஜாலியான துப்பறிவாளன்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement