Advertisement

ராம்லீலா (மலையாளம்)

ராம்லீலா (மலையாளம்) - விமர்சனம்நடிகர்கள் : திலீப், பிரயாகா மார்ட்டின், ராதிகா சரத்குமார், சித்திக், கலாபவன் சாஜன், விஜயராகவன், சலீம்குமார், சுரேஷ்குமார் மற்றும் பலர்.
கதை : சாச்சி
டைரடக்சன் : அருண்கோபி
தயாரிப்பு : தோமிச்சன் முலக்குபாடம்

மலையாள நடிகர் திலீப் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'ராம்லீலா'.. நடிகை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்துவரும் திலீப்பிற்கு மக்கள் மத்தியில் தற்போதைய ஆதரவு எப்படி இருக்கிறது என பல்ஸ் பார்க்கும் விதமாக வெளியாகியுள்ள இந்தப்படம் திலீப்பிற்கு ஆசுவாசம் தந்துள்ளதா..? பார்க்கலாம்.

மாநிலத்தின் இரண்டு முக்கிய கட்சிகளில் ஒன்றில் எம்.எல்.ஏ வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் திலீப். ஆனால் திலீப்பின் தந்தையோ கம்யூனிஸ்ட் கட்சிக்காக பாடுபட்டு தன்னுயிரை இழந்தவர் என்பதால், கட்சியை தெய்வமாக நினைக்கும் ராதிகாவுக்கு, மகனின் இந்த போக்கு பிடிக்கவில்லை. திலீப்பிற்கு செக் வைக்கும் விதமாக அவருக்கு போட்டி வேட்பாளாராக ராதிகாவையே நிறுத்துகிறது கம்யூனிஸ்ட் கட்சி.

திலீப் இருக்கும் கட்சியில் மூத்த அரசியல்வாதியான சித்திக்கும், தங்களது கட்சியை விட்டு பிரிந்துபோய் திலீப் எதிர்க்கட்சி வேட்பாளரானதால் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருக்கும் விஜயராகவனும் திலீப்பை கவிழ்க்க சமயம் பார்த்து காத்திருக்கின்றனர். தேர்தல் நெருங்கிவரும் வேளையில் புட்பால் நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுக்க செல்கிறார் திலீப். அங்கே ராதிகாவுடன் பிரச்சாரத்திற்கு வரும் எதிர் கட்சித்தலைவர் விஜயராகவன் திடீரென யாராலோ சுடப்பட்டு இறக்கிறார்.

காரணங்கள் திலீப்புக்கு எதிராக திரும்ப, போலீஸ் திலீப்பையும் அவரது உதவியாளர் கலாபவன் சாஜனையும் கஸ்டடியில் எடுக்கிறது.. ஆனால் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்கும் இந்த இருவரையும் திலீப்பின் நண்பர் மகளான பிரயாக மார்ட்டின் தந்திரமாக கோவா அருகில் ஒரு தீவில் உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்து சென்று தங்க வைக்கிறார்.

ஆனால் அவர்கள் இருவருக்கும் தெரியாமலேயே அவர்களது நடவடிக்கைகள் அனைத்தையும் பிக்பாஸ் வீட்டைப்போல பல கேமராக்கள், சிசிடிவி நிகழ்ச்சி மூலமாக ரெக்கார்டு செய்கிறார் பிரயாகா. அத்துடன் நிற்காமல் அதை வெளிநாட்டு சர்வர் மூலமாக தினசரி ஒரு எபிசோட் என கேரள சேனல்களுக்கு அனுப்பியும் வைக்க, அரசியல் அரங்கில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.

ஆனாலும் போலீசாருக்கு இவர்கள் இருக்கும் இடத்தை ட்ரேஸ் செய்ய முடியவில்லை. அங்கே நடப்பது எதையும் அறியாத திலீப்பும் சாஜனும் ரிசார்ட்டில் பல உண்மைகளை வெளிப்படையாக பேசிக்கொள்ள, அதை கேரளாவே வேடிக்கை பார்க்கிறது. அவர்களது பேச்சே உண்மையான குற்றவாளி யார் என்பதையும் அடையாளம் கட்டுகிறது.

பிரயாகா மார்ட்டின் எதற்காக திலீப்புக்கு கூட தெரியாமல் இப்படி ஒரு காரியத்தை செய்தார், விஜயராகவனை கொன்ற உண்மையான கொலையாளி யார், அல்லது திலீப்பே தான் இந்த கொலையை செய்தாரா, அப்படி செய்யவில்லையென்றால் பிரயாகா செய்த வீடியோ லீக்கேஜின் மூலம் திலீப்புக்கு புதிய சிக்கல் எதுவும் வந்ததா என பல கேள்விகளுக்கு திருப்பங்கள் மேல் திருப்பமாக விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்..

முழுக்க முழுக்க அரசியலை மட்டுமே களமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் ரொமான்ஸ், ஆக்சனுக்கு எந்த வேலையுமே இல்லை என்பது ஆச்சர்யம்.. அதேசமயம், படத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் திலீப்பின் தற்போதைய நிலையை உணர்த்துவதாகவே அமைந்திருப்பதும் ஆச்சர்யமான ஒன்று..

அரசியல்வாதி என்றால் அடிமட்ட தொண்டனாக இருந்து போராட்டமெல்லாம் நடத்தாமல் வாரிசு தகுதியில் நேரடியாக அரசியலில் நுழைந்தவர் என்பதால் திலீப்பின் கதாபாத்திரம் நாம் இதற்குமுன் பார்த்திருக்கும் முந்தைய அரசியல் கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு இருப்பது நிஜம். அரசியலில் தனது எதிரிகளை கருவறுக்க திலீப் காய் நகர்த்தும் சாதுர்யம், உண்மைகளை வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எல்லாம் அவரை ஒரு பக்கா அரசியல்வாதியாகவே காட்டியிருக்கிறது.

படம் முழுதும் திலீப்பின் உதவியாளராகவே பயணிக்கும் கலாபவன் சாஜன் காமெடி மட்டுமல்லாமல், சீரியஸ், பரபரப்பு ஏரியாவிலும் புகுந்து விளையாடுகிறார். கதாநாயகி என ஆரம்பத்தில் பெயரளவுக்கு தலையைக்காட்டும் பிரயாகா மார்ட்டின் பிற்பாதியில் விஸ்வரூபம் எடுப்பது எதிர்பாராதது. திலீப்பின் அம்மாவாக ராதிகா சரத்குமார் கட்சிப்பாசத்தையும், கட்சி மாறிப்போன மகன் மீதான வெறுப்பையும் அதேசமயம் மகன் என்கிற பாசத்தையும் காண்பிக்கவேண்டிய கலவையான கேரக்டரை மிக எளிதாக சமாளித்திருக்கிறார்.

நரித்தந்திரம் காட்டும் அரசியல்வாதிகளாக வரும் சித்திக், விஜயராகவன் இருவரும் அவர்கள் இதற்குமுன் பலமுறை செய்த கேரக்டர்கள் என்பதால் ஜஸ்ட் லைக், ஊதித்தள்ளிவிட்டு போகிறார்கள். படத்தின் இடைவேளைவரை அரசியல் போர்க்களமாக காட்சி தரும் படம், இடைவேளைக்குப்பின் வேறுவிதமாக யூ டர்ன் எடுப்பது எதிர்பாராத ட்விஸ்ட். கேண்டிட் கேமரா முறையில் ஒரு கொலைக்குற்ற வழக்கில் கொலையாளியை கண்டுபிடிப்பது புதுசு சென்றால் அதை போலீஸோ, நாயகனோ செய்யாமல், கதாநாயகி செய்வது, அதுவும் நாயகனுக்கே தெரியாத விதமாக செய்வது புதுசோ புதுசு..

இடைவேளைக்குப்பின் முக்கால்வாசி நேரம் திலீப் ரிசார்ட்டிலேயே இருப்பதால் அவரது ஹீரோயிசம் அடிபட்டதாக நாம் நினைக்கும்போது க்ளைமாக்ஸில் புதிய திருப்பம் ஒன்றை வைத்து 'அட' என திலீப் மீது ஆச்சர்ய பார்வையை திருப்ப வைக்கிறார் இயக்குனர் அருண்கோபி.

ராம்லீலா விறுவிறுப்பான படம் என்பதையும், திலீப் மீது இருக்கும் தனிப்பட்ட கோபதாபங்களை வைத்து ஒதுக்க கூடாத படம் என்பதையும் இந்தப்படம் தெள்ளத்தெளிவாக உணர்த்தியுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement