Advertisement

தரங்கம் (மலையாளம்)

நடிகர்கள் : டொவினோ தாமஸ், சாந்தி பாலச்சந்திரன், பாலு வர்கீஸ், உன்னி முகுந்தன், நேஹா ஐயர், மனோஜ் கே.ஜெயன், ஷைஜு குறூப், விஜயராகவன், அலான்சியர் லே மற்றும் பலர்

டைரக்சன் : டொமினிக் அருண்

தயாரிப்பு : தனுஷ் - வுண்டர்பார் பிலிம்ஸ்

நடிகர் தனுஷ் முதன்முதலாக மலையாளத்தில் தயாரித்துள்ள படம் தான் இந்த 'தரங்கம்'.
சிலை கடத்தலை தடுக்கப்போன இடத்தில் போலீஸ் அதிகாரி மனோஜ் கே.ஜெயன் சுட்டுக்கொல்லப்பட, அதன் காரணமாக உடன் சென்றிருந்த கான்ஸ்டபிள்களான டொவினோ தாமஸும், பாலு வர்கீஸூம் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்கள்.

இந்த நேரத்தில் அலான்சியர் லேவிடம் ஒரு வேலையை முடித்து தருவதாக ஐந்து லட்சம் வாங்கிய டொவினோவால் அந்த வேலையையும் முடிக்க முடியவில்லை. வாங்கிய காசையும் திருப்பி கொடுக்கமுடியவில்லை.

பணம் கேட்டு நெருக்கடி அதிகமாகவே, பணத்திற்காக, நகரத்தில் உள்ள பணக்காரர் ஷம்மி திலகன், தனது மனைவி நேஹா ஐயரை வேவு பார்க்க சொன்ன வேலையை செய்ய ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் வேவு பார்த்து குத்துமதிப்பாக சொன்ன தகவல்களை வைத்து, அதிர்ச்சியாகும் ஷம்மி திலகன் தன்னைத்தானே சுட்டுக்கொள்கிறார்.

இவை சிசிடிவியில் பதிவாக அதை வைத்து அவரது மனைவி நேஹா ஐயர் இவர்கள் இருவரையும் மிரட்டுகிறார். இந்த சூழலில் நேஹாவின் முன்னாள் காதலனும் சிலை கடத்தல் டானுமான உன்னி முகுந்தனின் தந்தையின் அஸ்தி அடைத்து வைக்கப்பட்ட செயின் லாக்கெட் நேஹாவின் கைக்கு வருகிறது. அதை கங்கையில் கரைத்து காரியங்கள் செய்வதற்காக உன்னி முகுந்தன் வெளிநாட்டில் இருந்து வருகிறார்.

அதேசமயம் டொவினோவின் காதலி சாந்தியின் அஜாக்கிரதையால் சிலை கடத்தல் திருடன் ஒருவனிடம் அந்த லாக்கெட் பறிபோகிறது. அதை மீட்டுக்கொடுத்துவிட்டு காதலியை அழைத்துச்செல் என சாந்தியை பிடித்து பணயமாக வைத்துக்கொள்கிறார் நேஹா. அந்த லாக்கெட், அது இருந்த கைப்பை, அதை வைத்திருந்த நேஹாவின் கார் என எல்லாமே சில குளறுபடிகளால் வெவ்வேறு ஆட்கள் வசம் கைமாறுகிறது. அந்த லாக்கெட்டை கண்டுபிடித்து, காதலியை டொவினோ மீட்டாரா, சிலை கடத்தல்காரர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஆரம்பத்தில் இருந்து கவனம் பிசகாமல் படத்தை பார்த்தால் மட்டுமே புரியும் விதமாக காட்சிகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் டொமினிக் அருண்.. மெயின் கதை, அதற்குள் சில கிளைக்கதைகள் என ரீலுக்கு ஒன்றாக கதைகள் விரிந்தாலும், எதையும் சுவாரஸ்யம் குறையாமல் காட்சிப்படுத்தியுள்ளதை பாராட்டியே ஆகவேண்டும்..

நாயகன் டொவினோ தாமஸ் அப்பாவி, அடப்பாவி என இரண்டு கேரக்டர்களையும் மிக்ஸ் பண்ணி நடித்துள்ளார். காதலியிடம் மட்டுமல்ல, வில்லனிடம், வில்லியிடம் கூட கெஞ்சுவது, கொஞ்சுவது, மிஞ்சுவது என மூன்றுவித முகங்களை காட்டி காரியம் சாதிக்கும் காரியவாதி கேரக்டரில் சரியாக பிட் ஆகியிருக்கிறார். இவருடன் படம் முழுக்க இன்னொரு நாயகன் போலவே வலம்வருகிறார் காமெடி நடிகர் பாலு வர்கீஸ்..

அறிமுக நாயகி சாந்தி பாலச்சந்திரன் மலையாள சினிமாவுக்கு ஒரு நல்வரவு. தான் கர்ப்பம் என சொல்லி காதலனை மிரள வைப்பதும், தன்னுடைய கிளப்டோமேனியா (தனக்கு பிடித்தமான அடுத்தவர் பொருளை திருடும் பழக்கம்) வியாதியால் காதலனுக்கு சிக்கலை கொண்டு வருவதுமாக படத்தில் பிரதான இடத்தை பிடித்துள்ளார். அழகான வில்லியாக கதாநாயகிக்கு இணையாக கெத்து காட்டியுள்ளார் நேஹா ஐயர்.

கொடுத்த பணத்தை கேட்டு அலையை அலையும் அலான்சியர் லே, சிலை கடத்தல் கும்பல் தலைவனாக இருந்தாலும், நாடகத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டும் ஷைஜு குறூப், மனைவியை சந்தேகப்பட்டு டென்சனாகும் ஷம்மி திலகன், சிலை கடத்தலில் டபுள் கேம் ஆடும் கமிஷனராக விஜயராகவன், ஹீரோவை காப்பற்றப்போய் பரிதாபமாக உயிரை விடும் மனோஜ் கே.ஜெயன், சிலைத்திருடனாக வந்து அனைவர் கண்களிலும் விரலை விட்டு ஆட்டும் அந்த காமெடி நடிகர் என படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களும் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டவே செய்கின்றன.. க்ளைமாக்ஸில் வெறும் பத்து நிமிடங்கள் வந்தாலும் மனதில் நிற்கிறார் உன்னி முகுந்தன்.

இடைவேளை வரை காட்சிகள் விறுவிறுப்பாக நகர்ந்தாலும் இடைவேளைக்குப்பின் அந்த லாக்கெட் விஷயத்தில் வளவள என இழுக்காமல் கிரிப்பாக முடித்திருக்கலாம். குறிப்பாக க்ளைமாக்ஸில் அந்த லாக்கெட் அருகில் இருப்பவனின் பாக்கெட்டில் இருந்தும், அதை எடுத்து தர முயலாமல் அலட்சியமாக நிற்கும் ஹீரோவின் போக்கில் கதையை இழுத்து நேரத்தையும் விரயமாக்கி இருக்க தேவையில்லை.

இப்படி சொல்லிக்கொள்ளும்படி ஒன்றிரண்டு குறைகளே இருப்பதால் படத்தின் சுவாரஸ்யம் குறையாதது படத்தின் பிளஸ்.. அதிலும் இறந்தபின் மேலோகத்திற்கு சென்ற மானிடன் ஒருவன் (கேரளாவில் புகழ்பெற்ற கள்ளன் பவித்ரன்) கடவுளிடம், வைக்கும் கோரிக்கையாக இந்த கதையை நகர்த்தியிருப்பது புதிய யுத்தி. கடவுளாக கோட், சூட் என ஹைடெக் காஸ்ட்யூமில் ஜமாய்க்கிறார் இயக்குனர் திலீஷ் போத்தன்

மொத்தத்தில் தரங்கம் ஜாலியான கலகலப்பான பொழுதுபோக்கு படம் என்பதால் ஒரு தயாரிப்பாளராக மலையாளத்தில் முதல் அடியை வெற்றிகரமாகவே எடுத்து வைத்துள்ளார் நடிகர் தனுஷ்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement