Advertisement

பறவ (மலையாளம்)

நடிகர்கள் : துல்கர் சல்மான், ஷேன் நிகம், சிருந்தா ஆசப், சித்திக், ஷைன் டாம் சாக்கோ, சௌபின் சாஹிர், ஜேக்கப் கிரிகேரி, மாஸ்டர் அமல் ஷா, மாஸ்டர் கோவிந்த் பாய் மற்றும் பலர்

டைரக்சன் : சௌபின் சாஹிர்

துல்கர் சல்மானுடன் ஒரு குறும்படம் உட்பட ஐந்து படங்களில் இணைந்து நடித்துள்ள காமெடி நடிகர் சௌபின் சாஹிர் முதன்முதலாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் தான் இந்த 'பறவ'. புறா பந்தயம் பற்றிய களத்தில் இரண்டு சிறுவர்களின் பார்வையில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

பள்ளிச்சிறுவன் அமல் ஷாவுக்கு புறாக்கள் என்றால் உயிர்.. தன்வீட்டு மொட்டை மாடியில் பார்த்து பார்த்து வளர்ப்பதோடு, அவற்றை பந்தயத்திற்கும் பழக்குகிறான். இவனுக்கு கோவிந்த் பாய் உயிர் நண்பன். அதே ஏரியாவில் இருக்கும் டாம் சாக்கோ புறா பந்தயத்தில் இவர்களது எதிரணிக்காரர்.. பொறாமையால் அவ்வப்போது இந்த சிறுவர்களிடம் இருந்து ஒன்றிரண்டு புறாக்களை திருடி இவர்களை அழவைப்பது சாக்கோவின் வழக்கம்.

ஒருநாள் பறக்கவிதப்பட்ட புறா ஒன்றை தேடி செல்லும் அமலும் கோவிந்தும் ஒரு பங்களாவில், போதை மருந்தை ஊசியில் ஏற்றிக்கொண்டு கிறக்கத்தில் இருக்கும் சௌபின் சாஹிர் மற்றும் அவரது கூட்டாளிகளை பார்க்கின்றனர்.. சில வருடங்களுக்கு முன் அந்த ஊரில் இருந்த, ஊருக்கே செல்லப்பிள்ளையான இளைஞன் துல்கர் சல்மானுக்கு நேர்ந்த சோக நிகழ்வுக்கு காரணம் இவர்கள் தான் என்பதும் அந்த நிகழ்வு நடக்க ஒருவகையில் காரணமாக இருந்த முன்கோபியான தனது அண்ணன் ஷேன் நிகமுடன் அன்றிலிருந்து தனது தந்தை இதுநாள்வரை பேசாமல் இருப்பதும் அமலின் ஞாபகத்துக்கு வந்து போகிறது..

சில நாட்கள் கழித்து புறா பந்தயம் நடைபெறும் நாளன்று அமலின் புறாக்கள் காணமல் போக டாம் சாக்கோவின் புறாக்களை மட்டும் பந்தயத்தில் விட்டு பறக்கும் நேரத்தை கணக்கெடுக்கின்றனர். அதேசமயம் அமலின் நண்பன் கோவிந்த், நல்லவேளையாக பந்தயத்திற்கான இரண்டு புறாக்களை மட்டும் தனியாக ஒளித்து வைத்திருந்தான்.. அந்த புறாக்களை பந்தயத்தில் பறக்கவிட, சாக்கோவின் புறாக்களை விட, அமலின் புறாக்கள் அதிக நேரம் பறந்து சாதனை படைக்கின்றன..

அதேசமயம் அவை தங்கள் இருப்பிடம் திரும்பாமல் சாக்கோவின் இருப்பிடத்தில் இறங்குவதை கண்டு, அவற்றை பிடித்துவர கிளம்புகின்றனர் சிறுவர்கள் இருவரும்.. ஆனால் சாக்கோ தன்னிடம் அமலின் புறாக்கள் இல்லை என சாதிக்கிறார். அதேசமயம் அந்த புறாக்கள், போதை மருந்து சைக்கோக்களின் கைவசம் சிக்கியிருப்பது தெரியவருகிறது. அவர்கள் மீண்டும் தங்கள் வழியில் குறுக்கிடுவது கண்டு கோபம் கொள்ளும் அமலின் அண்ணன் ஷேன் நிகம் மீண்டும் அவர்களுடன் சண்டைக்கு போகிறான்.

இறுதியில் நடந்தது என்ன..? அந்த போதை மருந்து சைக்கோக்களால் ஷேன் நிகமுக்கு என்ன ஆனது...? துல்கர் சல்மான் வாழ்க்கையில் நடந்த சோக நிகழ்வு என்ன என்பதை அறிய தியேட்டருக்கு கிளம்புங்கள்.

துல்கர் சல்மான் இந்தப்படத்தில் இருந்தாலும் அவர் ஹீரோ அல்ல. கிட்டத்தட்ட அரைமணி நேரம் மட்டுமே அவர் வருகிறார். தனது நண்பர் சௌபின் சாஹிரின் நட்புக்காக இந்தப்படத்தில் நடித்திருந்தாலும், ஒரு இயக்குனராக துல்கரின் கேரக்டரை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் சௌபின் சாஹிர்.. சண்டை வேண்டாம், ஆத்திரம், முன்கோபம் வேண்டாம் என சொல்லும் துல்கருக்கு நடக்கும் சோகம் மனதை உலுக்குகிறது.. தான் ஒரு ஹீரோ என்பதை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, குணச்சித்திர நடிகராக நட்பவதாரம் எடுத்துள்ளார் துல்கர்.

படத்தின் ஹீரோ, இல்லையில்லை ஹீரோக்கள் என்றால் அது சிறுவர்கள் அமல் ஷாவும் கோவிந்த் பாயும் தான். படம் ஆரம்பத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை இவர்களை மையப்படுத்தியே நகர்கிறது. அதை உணர்ந்துள்ள இருவருமே இந்தப்படத்தில் தங்களது இயல்பான நடவடிக்கைகளால் நம்மை கவர்ந்து விடுகின்றனர்.. அதிலும் பள்ளிக்கூடம், பள்ளி காதல், காலை நேர அடல்ட்ஸ் ஒன்லி படம் என அமல் ஷா ரொமான்ஸ் பக்கம் தாவ, கோவிந்த் பாயோ காமெடியில் பிச்சு உதறுகிறான்.

படத்தின் மற்ற துணை கதாபாத்திரங்களில், முன்கோபியான ஷேன் நிகம் மீது, அதாவது அவரது கேரக்டர் மீது அவரது தந்தைக்கு மட்டுமல்ல, நமக்கே எரிச்சல் வரும்படி நடித்துள்ளார். தந்தையாக சித்திக் பக்குவமான நடிப்பு, புறா பந்தய சாக்கோ வில்லத்தனம் இல்லாத வெத்து கெத்து காட்டுகிறார். அட.. படத்தின் இயக்குனர் சௌபின் சாஹிர், தான் ஒரு காமெடி நடிகர் என்பதையே மறக்கவைக்கும் விதமாக இதில் மிரட்டலான வில்லன் ரோலையும் அனாயசமாக செய்திருக்கிறார்.

ரெக்ஸ் விஜயனின் இசையில் படத்தில் இடம்பெறும் திருமண வீட்டு பாடலும், அதன் இசையும் நம் மனதை தாளமிட்டபடி ஆடவைக்கிறது. பள்ளிப்பருவ இனக்கவர்ச்சியையும் அது கொடுக்கும் கிளுகிளுப்பையும் குறும்புத்தனத்துடன் காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் சௌபின் சாஹிர்.. அடல்ட்ஸ் ஒன்லி படம் பார்த்துவிட்டு வரும் மகனை, தந்தை எதுவுமே கண்டிக்காமல், தண்டிக்காமல் அவனது குற்ற உணர்ச்சியையே தண்டனையாக மாற்றும் காட்சி சபாஷ் சொல்ல வைக்கிறது.

புறாக்களின் பந்தயத்தை, அவற்றின் வளர்ப்பை அவ்வளவு தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருப்பது 'வாவ்[' சொல்லவைக்கிறது. இதுபோக அந்த க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படு உக்கிரம். மாஸ்டர் வேறு யாருமல்ல, நம்ம திலீப் சுப்பராயன் தான்.

அனைத்துவித கலவையான உணர்வுகளையும் உள்ளடக்கிய இந்தப்படம், தியேட்டர்களில் அதிக இடங்களில் கைதட்டலை அள்ளுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement