Advertisement

ஹர ஹர மஹா தேவகி

பருவ வயது வயதினருக்கான படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. புதுமுக இயக்குநர் சன்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் தைரியமாக எடுத்த இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படம் இது. கண்டிப்பாக குடும்பம் குழந்தைகளுடன் பார்க்க முடியாது.

அப்படி படத்தில் என்ன தான் கதை என்று பார்த்தால் ஹீரோ கௌதம் கார்த்திக், A to Z இறந்து போனவர்களின் சடங்கு சம்பிரதாயம் செய்யும் தொழில் செய்கிறார். ஹீரோயின் நிக்கி கல்ராணி கல்லூரி மாணவி. இந்த இருவருக்கும் தொடங்கிய காதல் கல்யாணத்தில் முடிகிறதா இல்லை, காதலில் முறிவு ஏற்படுகிறதா என்ற இந்த இரண்டு வரிக்கதையில் ஏகப்பட்ட கதைகளை உள் இழுத்து விட்டுள்ளார் இயக்குநர்.

படம் துவங்கும் போதே அந்த ஹஸ்கி வாய்சில் கதாபாத்திரங்கள் அறிமுகம். அங்கேயே சில இடங்களில் இரட்டை அர்த்த வசனம் தொடங்குகிறது. ஹீரோ ஹீரோயின் இரண்டு பேரும் சந்திக்கும் சந்திப்பு ஒரு ஒரு முறையும் தியேட்டர் களேபரம் ஆகிறது.

குடியரசு மக்கள் கட்சி தலைவராக ரவிமரியா பொருத்தமான ரோல். அவரின் அல்லக் கையாக படம் முழுக்க கவிதையால் புகழும் நமோ. அடி பம்பில் பெண்களுக்கு தண்ணீர் அடித்து கொடுக்கும் பிஸ்னஸ் செய்து பின் பாம் செட்டப்பராக கலகலப்பூட்டும் ஸ்பைக் டைசன் மொட்ட ராஜேந்திரன். குமார் என்கிற கருணாகரன்.. கௌதம் நண்பராக சதீஷ்... இப்படி கேரக்டர்களை தேடிப்பிடித்து நடிக்க வைத்துள்ளார் இயக்குநர்.

ஹீரோ ஹீரோயின் இரண்டு பேருக்கும் உள்ள காதல் மோதல் ஒரு பக்கம்... குடியரசு மக்கள் கட்சி தலைவர் தேர்தலை தள்ளி வைக்க... மொட்ட ராஜேந்திரன் போடும் பாம் செட்டப்... கள்ள நோட்டை மாற்ற பாலசரவணன் எடுக்கும் முயற்சி... மகாதேவகி ரிசார்ட்டில் தங்கியிருக்கும் குழந்தை பணத்துக்காக கடத்தப்படுவதும், அதை ஆர்கே சுரேஷ் இன்ஸ்பெக்டர் தேடுவதும்... பல கிளைக் கதைகள் இந்த படத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நிக்கி கௌதமுக்கு கொடுத்த பரிசு பொருளை திரும்ப எடுத்துச்செல்லும் பையும்... அரசியல் மேடைக்கு அருகே வெடிக்கப்பட வேண்டிய பாம் பையும்.. பால சரவணனின் கள்ள நோட்டு மாற்றும் பையும்... குழந்தை கடத்தலுக்கு கொடுக்க போகும் ஒரு கோடி பணமும்... மாறி மாறி கிடைப்பது கொஞ்சம் சிரிப்பு என்றாலும் நீண்ட சீனாக இழுக்கிறது.

அண்ணன் மனைவி அம்மா மாதிரி. தம்பி மனைவி தங்கை மாதிரி என்று மொட்ட ராஜேந்திரன் கருணா பேச்சு அவ்வளவு எடுபடவில்லை. இரண்டாயிரம் ரூபாய் நோட்டு நல்ல நோட்டா கள்ள நோட்டா என்று போலீஸ் மட்டும் தான் பார்த்து வாங்க மாட்டார்கள் என்ற வசனம் படத்தில் நச் என்கிறது.

படத்தில் அந்த பாம்பை பாடாய் படுத்தி உள்ளனர்... படத்தில் காமெடி பெயரில் காமநெடி படம் முழுக்க வீசுகிறது. இந்த படத்தில் பெண்களை அதிகம் நக்கல் நையாண்டி செய்யாமல்... இயக்குநர் ஆண்களை கிண்டல் கேளியில் தெறிக்க விட்டிருக்கிறார்.

இயக்குநர் சன்தோஷ் எப்படி இப்படி ஒரூ கதையை கையில் எடுத்தார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. சதீஷ் லுங்கியுடன் வந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் அறுவை.. ஹீரோ ஜட்டியில் தொடங்கி, அரசியல் வாதியின் கட்டில் வரை ஒரே "ஏ" ரக ஜோக் என்பது எல்லோருக்கும் புரியும். சென்சார் அதிகாரிகள் கூட ஒரு கட் சொல்லாமல் படத்தை பார்த்தார்கள் என்பது அச்சம் தான்.

பதினெட்டு வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த படம் என்கின்றனர். படத்தின் இயக்குநர் அடுத்த படத்திலாவது வேறு ஒரு நல்ல களத்தை பதினெட்டு வயதினருக்கு கொடுக்க வேண்டும். காமெடி பெயரில் வெறும் ஆபாசம் மட்டும் கரை சேர்க்காது என்பதை நினைவில் வையுங்கள்.

பசங்களுக்காகவே எடுக்கபட்ட படம் ஹரஹர மகாதேவகி, பசங்களும் பார்க்க முடியுமா ஹரஹர மகாதேவகி...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement