Advertisement

சர்வோபரி பாலக்காரன் (மலையாளம்)

நடிகர்கள் : அனூப் மேனன், அபர்ணா பாலமுரளி, அனு சித்தாரா, அலான்சியர் லே, பாலு வர்கீஸ், காயத்ரி அருண், நந்து

இசை : பிஜிபால்

டைரக்சன் : வேணுகோபன்

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், சமூக விழிப்புணர்வு போராட்டங்களில் கலந்துகொள்ளும் இளம்பெண்ணுக்குமான ஈகோ யுத்தமும், அது எந்தவிதமான நிகழ்வுகளை அரங்கேற்றுகிறது என்பதும் தான் படத்தின் கதை.

இன்ஸ்பெக்டர் அனூப் மேனன், அனு சித்தாரவுடன் திருமணம் நிச்சயமானவர். இந்த நேரத்தில் பெண்களை கடத்தி விற்கும் நந்து என்பவனை பிடிக்கும் பொறுப்பு அனூப் மேனனிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த டென்சனில் இருக்கும் அனூப் மேனன் வாழ்வில், ஏதேச்சையாக போகிறபோக்கில் குறுக்கிடுகிறார் சமூக விழிப்புணர்வு போராளியான அபர்ணா பாலமுரளி. அவருடைய தன்னம்பிக்கை கொண்ட துணிச்சலான சில நடவடிக்கைகள் குற்றவாளியை தேடும் பணியில் ஏற்கனவே டென்சனுடன் இருக்கும் அனூப் மேனனின் ஈகோவை தூண்டிவிடுகின்றன. ஒரு சமயம் அனூப் மேனன் தேடும் குற்றவாளி தப்பிப்போகவும் அபர்ணாவின் செயல் காரணமாகி விடுகிறது.

இதனால் அனுபமாவிற்கு பாடம் கற்பிப்பதாக அவரை ஸ்டேஷனில் கொண்டுபோய் வைக்கும் எல்லை வரை போகிறார் அனூப் மேனன். ஆனாலும் அபர்ணா எந்த தவறும் இல்லாதவர் என நிரூபணமாக, அனூப் மேனன் தான் விசாரிக்கும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ஆனால் அடுத்தடுத்து வரும் நாட்களில், சூழ்நிலை கீரியும் பாம்புமாக இருந்த அனூப் மேனனையும் அபர்ணாவையும் நண்பர்களாக்குகிறது.

இந்தநிலையில் அபர்ணாவை பற்றிய சில உண்மைகளும், தான் தேடிக்கொண்டு இருக்கும் குற்றவாளி நந்துவுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது பற்றியும் அனூப் மேனனுக்கு தெரிய வருகிறது.. இதை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் எங்கே போய் முடிகின்றது என்பது மீதிக்கதை.
ஜாலியான, அதே சமயம் டென்சனான போலீஸ் அதிகாரியாக அனூப் மேனன், ஒவ்வொரு காட்சியிலும் இந்த குணாதிசயங்களை மிகச்சரியாக பிரதிபலிக்கிறார். அபர்ணாவின் மேல் அவர் கோபம் கொள்ளும் காட்சிகள் ஒரு அடாவடி போலீசாரின் மனநிலையை நன்றாகவே படம் போட்டு காட்டுகின்றன.

புரியாத புதிரான கேரக்டரில் அபர்ணா பாலமுரளி. நள்ளிரவில் மிக நீளமான குடையை கையில் பிடித்தபடி, எந்த பயமும் இல்லாமல் நடந்து வருவதும், எதிர் கேள்விகள் கேட்டு அனூப் மேனனின் கோபத்தை தூண்டுவதும் என இருக்கும் அபர்ணாவின் இன்னொரு முகம் க்ளைமாக்ஸில் வெளிப்படும்போது ஆச்சர்யப்பட வைக்கிறது.

இன்னொரு கதாநாயகி அனு சித்தாரா பார்க்க அழகாக இருக்கிறார். ஆனாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக வேலை எதுவும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரியாக வரும் காயத்ரி அருணின் நடிப்பில் செம மிடுக்கு. பெண் கடத்தல் வியாபாரியாக தலைமறைவு குற்றவாளியாக வரும் நந்துவுக்கும் அந்த கேரக்டர் சரியாக பொருந்துகிறது.. சீரியஸாக செல்லும் படத்தை அவ்வப்போது காமெடி ரூட்டிற்கு பிடித்து இழுத்து வருகிறார்கள் இளைஞர் பாலு வர்கீசும், அனூப் மேனனின் தந்தையான அலான்சியர் லேயும்.. இவர்கள் இருவரின் ப்ரண்ட்ஷிப்பும், அவர்கள் சேர்ந்து அடிக்கும் கூத்துக்களும் வயதுகளை கடந்த நட்பின் இன்னொரு பரிணாமம்.

ஜஸ்ட் ஒருமுறை பார்ப்பதில் ஒன்றும் தப்பில்லை என சொல்லும் அளவுக்கு(த்தான்) இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் வேணுகோபன்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement