Advertisement

வர்ன்யத்தில் ஆசங்கா (மலையாளம்)

நடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், சுராஜ் வெஞ்சாரமூடு, செம்பான் வினோத், மணிகண்டன் ஆச்சாரி, ஷைன் டாம் சாக்கோ, ரட்சனா நாரயனன்குட்டி

டைரக்சன் : சித்தார்த் பரதன்

தமிழில் சிவாஜி-கமலை வைத்து மாபெரும் ஹிட்டான 'தேவர்மகன்' படத்தை இயக்கினாரே இயக்குனர் பரதன்.. அவரது மகன் சித்தார்த் பரதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் இந்த 'வர்ன்யத்தில் ஆசங்கா'. நகைக்கடை திருட்டு ஒன்றை மையப்படுத்தி வெளியாகி இருக்கும் புத்திசாலித்தனமான காமெடிப்படம் இது.

மீடியமான நகரம் ஒன்றில் பைக் திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பது என ஆளுக்கு தகுந்தாற்போல் திருட்டு வேலை செய்யும் நான்கு பேர் தான் குஞ்சாக்கோ போபன், செம்பான் வினோத், மணிகண்டன் ஆச்சாரி, ஷைன் டாம் சாக்கோ ஆகிய நால்வரும். ஆனால் ஊருக்குள் நல்ல பசங்க என்கிற போர்வையில் உலா வருபவர்கள். சின்னச்சின திருட்டுக்களை விட்டுவிட்டு பெரிதாக அடித்து செட்டிலாக நினைக்கும் இவர்கள் அந்த ஊரில் உள்ள சேட்டின் நகைக்கடையில் கொள்ளை அடிக்க திட்டமிடுகின்றனர்.

சரியாக நகரத்தில் சில நாட்கள் கழித்து பந்த் நடக்கவே அன்றைய தினம் இரவில் கொள்ளையடிக்க திட்டமிட்டு கடைக்கு வருகின்றனர். இந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சுராஜ் வெஞ்சாரமூடு, தனது கையில் இருந்த பணத்தை பறிகொடுத்த நிலையில் (அதை சுருட்டியதும் குஞ்சாக்கோ தான்) வீட்டிற்கு நடந்தே வருபவர் நகைக்கடை வாசலில் வந்து அமர்கிறார். அவர் அங்கிருந்து கிளம்பும் அறிகுறி தென்படாததால், கொள்ளையடிப்பதற்கு அவர் இடைஞ்சலாக இருக்க கூடாது என கருதி, அவரையும் நகைக்கடைக்குள் இழுத்து செல்கின்றனர் நால்வரும்..

ஆரம்பத்தில் அவர் முரண்டு பிடித்தாலும் நகைக்கடைக்குள் நகை இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க சிரமப்படும் குஞ்சாக்கோ டீமுக்கு சில ஐடியாக்கள் தந்து நகையை கண்டுபிடித்து அவற்றை திருட உதவி செய்து தானும் ஒரு பார்ட்னர் ஆகிறார். முன்வாசல் வழியாக வெல்டிங் மூலம் பூட்டை உடைத்து உள்ளே வந்த அவர்களை, பின்பக்க சுவரில் துளையிட்டு தப்பிக்க ஐடியா கொடுக்கிறார்.

இந்த சமயத்தில் இரவு நேர பாரா வரும் அந்த ஏரியா போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் நகைக்கடையின் முன்னால் அமர்ந்துகொண்டு சரக்கடிக்க ஆரம்பிக்கின்றனர். பின்பக்கம் வழியாக முதல் ஆளாக வெளியே வரும் சுராஜ், முன்பக்கம் போலீஸ் இருப்பதை பார்த்து ஜெர்க் ஆகிறார். அந்த போலீஸ்காரர்களிடமிருந்து தானும் மற்ற நால்வரும் தப்பிப்பதற்காக ரிஸ்க்கான முடிவு ஒன்றை எடுக்கிறார் சுராஜ் வெஞ்சாரமூடு. அது ஒர்க் அவுட் ஆனதா..? இல்லை திட்டம் மண்ணை கவ்வியதா என்பது க்ளைமாக்ஸ்.

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக வடிவமைத்து அவர்களை திரைக்கதையுடன் ஒன்றாக கோர்ப்பதில் சாமர்த்தியம் காட்டியுள்ளார் இயக்குனர் சித்தார்த் பரதன். குஞ்சாக்கோ ஜஸ்ட் லைக் தட் அலட்டிக்கொலாமால் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.. நகைக்கடையில் திருடிவிட்டு உடனே தப்பிக்க முயலாமல், திருடியவர்ரை அங்குள்ள தராசிலே எடைபோட்டு பங்கு பிரித்து, அதை பேப்பரிலும் கணக்கெழுதும் காட்சியில் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கு கூட சிரிப்பு வரமால் இருக்காது.

படத்தின் ஹீரோ குஞ்சாக்கோ போபன் தான் என்றாலும் கூட இவருடன் சேர்த்து மற்ற ஐந்து பேருக்கும் சம வாய்ப்பே வழங்கப்பட்டுள்ளது.. அதிலும் கடைசி அரைமணி நேர படம் சுராஜின் கைகளுக்குள் போய்விடுகிறது.. எந்த வேலைக்கும் போகாமல், சும்மா ஊரை சுற்றிக்கொண்டு, மனைவியின் திட்டுக்களை அழகாக சமாளிக்கும் சுராஜ் வெஞ்சாரமூடு, குஞ்சாக்கோவிடம் பணத்தை பறிகொடுப்பதும், பின் எதிர்பாராதவிதமாக அவர்களது கொள்ளை திட்டத்திலேயே பார்ட்னர் ஆவதும், பின் அந்த கொள்ளையில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க சாமர்த்தியமாக திட்டமிடுவதும் என மற்ற நால்வரையும் விட செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார். நாளுக்கு நாள் சுராஜின் நடிப்பில் மெருகேறிக்கொண்டே போவது உண்மை.

கம்மட்டிப்பாடம் புகழ் மணிகண்ட ஆச்சாரி, 'அங்கமாலி டைரீஸ்' படத்தை தொடர்ந்து இந்தப்படத்திலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.. தமிழ்நாட்டு லாரிக்காரனிடம் வம்பிழுத்து சட்டையை பறிகொடுத்துவிட்டு வெற்று உடம்புடன் அவர் வரும் காட்சி ஒன்றுபோதும் சாம்பிளுக்கு... போதை மருந்து வழக்கு புகழ் நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் இந்த கூட்டத்தில் தன்னை நன்றாக அடையாளப்படுத்தி கொள்கிறார். செம்பான் வினோத் வழக்கம்போல அலட்டால் இல்லாத ஆர்ப்பாட்டமான நடிப்பு. காமெடியில் கலக்குகிறார் மனிதர்.

படத்தில் மருந்துக்கு கூட காதல் இல்லை.. டூயட் இல்லை.. ஏன் பாடல் எதுவும் இல்லை.. கதாநாயகி என்கிற பெயரளவுக்கு சுராஜின் மனைவியாக வரும் ரட்சனா நாராயணன்குட்டி கொஞ்ச நேரமே வந்தாலும், ஊசிப்பட்டாசாக பொரிகிறார்.

மணிகண்ட ஆச்சாரி 'பாதிரியார்' ஒருவரின் பைக்கை திருடுவது, அதை தொடர்ந்து வரும் வழியில் லாரிக்காரன் ஒருவன் சட்டையில் துப்பிவிட்டான் என அவனிடம் மல்லுகட்டி அவனிடம் பணம் பிடுங்கும் நேரத்தில், அந்த பைக்கை குஞ்சாக்கோ லவட்டிக்கொண்டு போவது, உடனே மணிகண்டன் தனது நண்பனான செம்பான் வினோத்தை தேடிவந்து அந்த வண்டியை கண்டுபிடித்து தர உதவி கேட்பது, அவரோ அந்த வண்டியை திருடியது தனது நண்பன் குஞ்சாக்கோ என்பது தெரியாமல் அவரையே வரவழைத்து உதவி கேட்க அழைப்பது, இந்த விஷயம் தெரியாமல் வண்டியை ஒளித்து வைப்பதற்காக செம்பான் வினோத்தை தேடிவரும் குஞ்சாக்கோ, அங்கே யாரிடம் இருந்து வண்டியை அடித்துக்கொண்டு வந்தோமோ அந்த மணிகண்டனே தனது உதவிக்காக காத்திருப்பது கண்டு ஜெர்க் ஆவது என முதல் கால் மணி நேரத்திலேயே தொடர் காமெடி காட்சிகளால் ரசிகர்களை கலகலப்பான மூடுக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்..

இயக்குனர் சித்தார்த் பரதன் இந்தப்படத்தில் புது யுத்தி ஒன்றை கையாண்டு இருக்கிறார்.. அதாவது படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரே லொக்கேசனில் ஐந்து நிமிடம் முதல் அதற்கும் அதிமான நேரம் வரை நடப்பதாக காட்டியுள்ளது உண்மையிலேயே புதுசு. அதிலும் ஹைலைட்டாக அந்த நகைக்கடையிலேயே இடைவேளைக்கு பிந்திய முக்கால் மணி நேரப்படத்தையும் முடித்திருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது.

மொத்தத்தில் காட்சிக்கு காட்சி ரசித்து சிரிப்பதற்கேற்ற ஜாலியான ஒரு படம் தான் இந்த 'வர்ன்யத்தில் ஆசங்கா'.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement