Advertisement

ஆக்கம்

ஆக்கம் - விமர்சனம்
நடிகர்கள் : ராவன், டெல்னோ டேவிஸ், ரஞ்சித், டாக்டர் சீனிவாசன்

இயக்கம் : வேலுதாஸ் ஞானசம்பந்தம்
வட சென்னையையும் அங்கு வாழும் ரவுடிகள், தாதாக்களின் வாழ்வியலையும் எத்தனையோ தமிழ் படங்கள் பேசியிருந்தாலும், அங்கு தாதாக்கள் உருவாகும் சூழலையும், கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு... எனும் மெஸேஜையும் மிக யதார்த்தமாகவும், மிகவும் புதுசாகவும் பேசி, பெருவாரியான ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் ஆதி லஷ்மி பிலிம்ஸ் இ.செல்வம், இ.ராஜா இருவரது கூட்டுத் தயாரிப்பில், புதுமுகங்கள் சதீஷ் ராவன், டெல்னா டேவிஸ் ஜோடி சேர வேலுதாஸ் ஞானசம்பந்தம் இயக்கத்தில் ஆக்கப்பூர்வமாக வெளிவந்திருக்கிறது "ஆக்கம்" திரைப்படம்.

போலீஸால் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளப்பட்ட அப்பாவுக்கும், "சின்ன சின்னதாக ஏதாவது செய்து சிறைக்கு போகாதே, கொலை, கொள்ளை.. என ஏதாவது பெரிதாக செய்து, பேரெடுத்து விட்டு வா..." என பிள்ளையை உசுப்பி விடும் போதை வஸ்து விற்கும் பெண்மணிக்கும் பிறந்தவரான ஹீரோ சதீஷ் ராவன், சட்டத்துக்கு புறம்பான தொழில்கள் செய்து வரும் சேட்டு ஒருவரது உபயத்தில், காசுக்காக கொலை, கொள்ளை.. என கண்டதையும் செய்து ஏரியாவில் பெரும் புள்ளி ஆகிறார். கூடவே, தன்னை நம்பிய பெண்களை எல்லாம் நயவஞ்சமாக அனுபவித்து நட்டாத்தில் விடும் வழக்கமுடைய அவர், ஒரு கட்டத்தில் யார் தயவால் யார்? எனும் கேள்வி எழும் சூழலில், ஈகோ மோதலில் சேட்டையே போட்டுத்தள்ள, போலீஸ் நாயகரை என்கவுண்ட்டரில் போடத் துரத்துகிறது.

இது ஒருபுறம், மற்றொரு பக்கம், நாயகரால் ஒரு கொள்ளை சம்பவத்தில் துள்ளத் துடிக்க கொல்லப்பட்ட, வாட்ச்மேன் ஒருவரது வாரிசான பொடியன், நாயகரையும், அவரது சகாக்களையும் கூட இருந்தே குழியில் தள்ள களம் இறங்குகிறான். இதையெல்லாம் தாண்டி, நாயகர் சதீஷ் ராவன் திருந்தி திரும்பி வருவார்.... என நம்பிக்கையோடு அவர் கலைக்க சொன்ன வாரிசை கருவிலேயே கலைக்காமல், பெற்றெடுத்து வளர்த்தபடி காத்திருக்கும் மீனவ பெண் காதலி டெல்னா டேவிஸின் நம்பிக்கை ஜெயித்ததா? பொய்த்ததா..? என்னும் கதையுடன திருந்தி வாழும் சேட்டின் மாஜி கையாளான ரங்கா எனும் நடிகர் ரஞ்சித் மற்றும் படித்து பட்டம் பெற்று சப் கலெக்டரான நாயகரின் நண்பர் நடராஜ் இருவரது நல்வாழ்க்கையையும், "கத்தியை தீட்டுவதைக் காட்டிலும் புத்தியை தீட்டுவது.... தான் நன்மை பயக்கும்... எனும் மெஸே ஜுடன் கூடிய இன்னும் பல நல்ல, கெட்ட விஷயங்களையும் கலந்து கட்டி, "ஆக்கம்" படத்தை அழுக்காக தெரிந்தாலும் அழகாக, அசத்தலாக, ஆக்கப்பூர்வமாக தந்திருக்கின்றனர்... இயக்குநர் வேலுதாஸ் ஞானசம்பந்தம் தலைமையிலான ஒட்டு மொத்த படக்குழுவினரும் .

ஷோக் எனும் அஷோக்காக புதுமுகநாயகர் சதீஷ் ராவன்., செம ஷோக்கு பேர் வழியாகவும், படா கில்லாடியாகவும் படம் முழுக்க பாவம், பச்சாதாபம் பார்க்காத ரவுடியாக வாழ்ந்திருக்கிறார். அவரது சகாக்களாக வரும் நண்பர்களும் அந்த ஏரியா அழுக்கு மூட்டைகளாக அசத்தல்.

நாயகரை விழுந்து, விழுந்து காதலித்து ஏமாறும் ஜெயாவாக கதை நாயகியாக டெல்னா டேவிஸ் வட சென்னை வாழ் மீனவ பெண்ணாக செம கச்சிதம்.

திருந்திய தாதாவாக ஏரியா நல்ல மனிதராக ரங்காவாக வரும் நடிகர் ரஞ்சித், செம மாஸ் காட்டியிருக்கிறார். பிள்ளையை நல்வழிப்படுத்த வீட்டை விட்டே போகும் அவரது அம்மாவாக வரும் வடிவுக்கரசி, படிப்பு வந்தும் பள்ளிக்கு பிள்ளையை அனுப்பாத போதை வஸ்து விற்கும் நாயகரின் அம்மாவாக வரும் டான்ஸர், சேட்டாக வரும் தருண் மாஸ்டர், நாயகியின் குடிகார தந்தையாக வரும் "யோகி" தேவராஜ், ஜெயிலில் ஒத்தப் பாட்டுக்கு ஒரு ரியாக்ஷனும் காட்டாது வந்து போகும் "பவர்" சீனிவாசன்... உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

ஜி.ஏ.சிவசுந்தரின் ஒளிப்பதிவு, சின்ன பட்ஜெட் படமென்றாலும் சிறப்பாக ஒளிர்ந்திருக்கிறது, மிளிர்ந்திருக்கிறது. குப்பை மேட்டில் கவுன்சிலரை ஹீரோ தீர்த்து கட்டும் காட்சி... என சகலத்திலும் இவரது ஒளிப்பதிவு , பட்ஜெட் படங்களுக்கேற்ற உயிரோட்ட பதிவு.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் "நின்னவன் நின்னவன்.... மலைமேல நின்னவன் சொன்னவன் அப்பனுக்கே சொன்னவன்...", "சொல்ல சொல்ல ஏதோ சொல்ல...", "சமரசம் வாழும் இடம்...", " தண்ணிப் போட்டா தப்புடா .. " உள்ளிட்ட சாமி பாடலும் , டூயட் பாடலும் சென்னை கானாப் பாடல்களும் ... புது விதராகத்தில் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. பின்னணி இசையும் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் மோசமில்லை.

வேலுதாஸ் ஞானசம்பந்தம் எழுத்து, இயக்கத்தில், "லவ்வ லவ்வர் கிட்ட சொல்றீங்களே இல்லியோ... லவ்வர் யாருன்னு பிரண்ட்ஸுங்கக்கிட்ட சொல்லுங்கடா....", "எவ்வளவு பெரிய வேலையில இருந்தாலும், ஒரு சில வேலைய அவன் அவன் தான் செய்யணும்.." என்பது உள்ளிட்ட நச் - டச் வசனங்களும், ஆரம்ப சவ ஊர்வலக் காட்சியில், அத்தனை நார்த் மெட்ராஸ் ரவுடிகள், தாதாக்கள் நிரம்பி இருந்தும் பாங்கு ஒதும் மசூதி அருகே சவ ஊர்வலம் சைலண்ட்டாக செல்லும் மத நல்லிணக்க காட்சிகளும் செம ரசனை!

ஆக மொத்தத்தில் ஒரு சில குறைகளும், குளறுபடிகளும் படத்தில் ஆங்காங்கே தெரிந்தாலும், இருந்தாலும், அழுக்கு சென்னையில் அழகான மெஸேஜ் சொல்லியிருக்கும் "ஆக்கம் - நிச்சயம் வயது வந்த ரசிகனுக்கு ஊக்கமும் உற்சாகமும் தரும்!"

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement