Advertisement

சதுர அடி 3500

இனியா, ரகுமான், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், பிரதாப் போத்தன், பெசன்ட் ரவி... உள்ளிட்ட பிரபல நட்த்திரங்களுடன் புதுமுகங்கள் நிகில், ஆகாஷ், சுவாதி தீக்ஷித்... உள்ளிட்ட புதுமுகங்கள் இணைந்து நடிக்க ஜாய்சன் இயக்கத்தில் ரைட் வியூ சினிமாஸ் தயாரிப்பில் டைட்டிலில் மட்டும் வித்தியாசம் காட்டி வந்திருக்கும் வழக்கமான பேய் படம் தான் "சதுரஅடி 3500".

இளம் பொறியாளர் ஆகாஷ் கட்டுமானத் துறையில் பெரிதாக சாதனைகள் செய்ய களம் இறங்குகிறார். அவர் பிரமாண்டமாக பெரும் கடன்பட்டு கட்டும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை அடிமாட்டு விலைக்கு தாதா ஒருவர் கேட்க, அவருக்கு தர சம்மதிக்காத அந்த பொறியாளர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்.

பிறகு, அவர் கட்டி எழுப்பி புழக்கத்திற்கு வராது பாதியில் நிற்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே அவரது ஆவி உலா வருவதாகவும், அங்கு செல்பவர்களை அவரது ஆவி தாக்கி கொலை செய்ய முயற்சிப்பதாகவும் செய்திகள் பரவுகின்றன. அதைப் பற்றி விசாரிக்க களம் இறங்கும் போலீஸ் அதிகாரிகளையும் அந்த ஆவி பயமுறுத்துகிறது. அது மட்டுமின்றி அந்த இளம் பொறியாளரின் காதலி இனியா உடம்பிலும் அந்த ஆவி புகுந்து கொண்டு ஏரியாவாசிகளை கலவரப்படுத்துகிறது.

இந்நிலையில் அந்த வழக்கை விசாரிக்க புதிதாக வரும் காவல்துறை அதிகாரி நிகில், தடை பல தகர்த்து எறிந்து எப்படி அந்த வழக்கில் துப்பு துலக்குகிறார்? என்னும் கதையுடன், நிகிலது விசாரணையில் இளம் பொறியாளர் ஆகாஷ் எவ்வாறு மரணம் அடைந்தார்? அவர் உண்மையிலேயே மரணம் தான் அடைந்தாரா? அல்லது மறைந்திருந்தாரா..? அப்படி ஆகாஷ், மரணிக்கவில்லை... மறைந்து தான் இருக்கிறார்.... என்றால், அவரது காதலி இனியாவின் உடம்பிற்குள் புகுந்துள்ள ஆவி யாருடையது..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு, திகிலாகவும் திருப்பங்களுடனும் பதில் சொல்ல முயன்று, அதில், கொஞ்சம் வெற்றியும் நிறைய தோல்வியும் கண்டிருக்கிறது "சதுரஅடி 3500" படத்தின் மீதிக் கதையும் களமும்!

இளம் போலீஸ் அதிகாரியாக ரொம்பவே மிடுக்கு காட்டும் நிகிலும் சரி, இளம் பொறியாளர் ஆகாஷும் சரி ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருக்கின்றனர். ஆனாலும் இந்த புதுமுகங்கள் நடை, உடை, முகபாவங்களில் தெரியும் மலையாள வாடை சற்றே பலவீனம்.

இளம் பொறியாளரின் பேய் பிடித்த காதலியாக இனியா, பேசி வைத்துக் கொண்டு பயமுறுத்துவது பெரிதாக எடுபடவில்லை.

அதேமாதிரி அழகாக இளமையாக இருக்கும் இன்னொரு நாயகி சுவாதி தீக்ஷித்துக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறை .

போலீஸ் அதிகாரியாக இரண்டொரு சீனில் வந்து போகும் ரகுமான், எதற்காக இந்தப் படத்தில் வருகிறார், போகிறார்... என்பது புரியாத புதிர். கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் ஜோடி காமெடி என்ற பெயரில் காம நெடியாக பேசி கடிக்கின்றனர். கடுப்பேற்றுகின்றனர்.

அதேநேரம், அண்டர் கிரவுண்ட் தாதாவாக வரும் பிரதாப் போத்தன், அவரது திருந்திய கையாள் பெசன்ட் ரவி... உள்ளிட்ட பிரபலங்களின் பாத்திரங்களும் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் பிரான்சிஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம், இசையாளர் கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் குறிப்பாக குத்துப் பாடல்கள் இப்படத்திற்கு பெரும் பலம்.

இயக்குனர் ஜாய்சன் எழுத்து, இயக்கத்தில் டைட்டிலிலும், ஒப்பனிங்கிலும் ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் மோசடிகளைப் பற்றிய படம் என பில் - டப் கொடுத்து விட்டு, மொத்தப் படத்தையும் இப்படத்தில் இறக்காத ஒருத்தரின் இல்லாத பேய் பின்னாடியே ஓடவிட்டிருப்பதும், மொத்தப் படமும் கொஞ்சமும் லாஜிக் இலலாது படம் பிடிக்கப்பட்டிருப்பதும் பெரும் பலவீனம்.

ஆக மொத்தத்தில், "சதுரஅடி 3500 - இனியாவை இனிமையாக காண வந்த ரசிகர்களுக்கு பெரிய தலை இடி!"

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement