Advertisement

சண்டே ஹாலிடே (மலையாளம்)

நடிகர்கள் : சீனிவாசன், ஆசிப் அலி, ஆஷா சரத், அபர்ணா பாலமுரளி, சித்திக், லால் ஜோஸ், சுதீர் காரமணா, கே.பி.ஏ.சி லலிதா, அலான்சியர் லே, தர்மஜன் போல்காட்டி மற்றும் பலர்

இசை : தீபக் தேவ்

ஒளிப்பதிவு : அலெக்ஸ் புள்ளிக்கல்

டைரக்சன் : ஜிஸ் ஜாய்

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆகியிருக்கும் இயக்குனர் லால் ஜோஸிடம், கல்லூரி பேராசியரும் சினிமாவில் நுழைய துடிப்பவமருமான சீனிவாசன், கதை சொல்லி வாய்ப்பு கேட்பதாக படம் ஆரம்பிக்கிறது. அவர் சொல்லும் கதையே முழுப்படமாக விரிகிறது.

கிராமத்து வாத்தியக்குழு நடத்தும் அலான்சியர் லேயின் மகன் ஆசிப் அலி. பக்கத்து வீட்டுப்பெண்ணுடன் சிறுவயதில் இருந்தே நட்பு, பின் காதலாக பழகிவருகிறார். அவளோ வெளிநாட்டு டாக்டர் மாப்பிள்ளை தேடிவந்ததும் ஆசிப்பின் காதலுக்கு குட்பை சொல்லிவிடுகிறாள். மனம் உடைந்த ஆசிப் அலியை ஒரு மனமாற்றத்திற்காக அவரது தந்தை டவுனுக்கு .அனுப்புகிறார்.

அங்கே டப்பிங் சினிமாவுக்கு வசனம் எழுதும் சித்திக், சினிமாவில் நடிக்க முயற்சி செய்யும் தர்மஜன் போல்காட்டி ஆகியோருடன் தங்கும் ஆசிப் அலி கிறிஸ்தவ பாடல் சிடிக்களை விற்கும் மார்க்கெட்டிங் வேலையில் இறங்குகிறார். அங்கே அவரைப்போலவே, வேறொரு மார்க்கெட்டிங் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் அபர்ணா பாலமுரளியை சந்திக்கிறார்..

ஆரம்பத்தில் முட்டல் மோதலுக்குப்பின் போகப்போக இருவரும் நட்பாகிறார்கள். அபர்ணா அனாதை என்பதும் மருத்துவ கல்லூரி மாணவி என்பதும், படிப்பிற்கான பணம் தேடி லீவு நாட்களில் இப்படி மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவதும் ஆசிப் அலிக்கு தெரியவருகிறது. தன்னையறியாமலேயே ஒரு கட்டத்தில் அபர்ணா மீது காதலாகிறார் ஆசிப் அலி. அபர்ணாவும் அப்படியே.. ஆனால் அபர்ணாவை நீண்ட நாட்களாக தொடர்ந்து டார்ச்சர் செய்யும் காண்ட்ராக்டர் உருவத்தில் விதி குறுக்கிடுகிறது.

அபர்ணாவுக்கு என்ன ஆனது, ஆசிப் அலிக்கு இந்த காதலாவது சுவாசம் தந்ததா, இந்த கதையை சொன்ன சீனிவாசனுக்கு லால் ஜோஸ் வாய்ப்பு தந்தாரா...? என்கிற விஷயங்களுக்கு க்ளைமாக்ஸ் விடை சொல்கிறது. இதில் ஆசிப் அலியின் பக்கத்து வீட்டு சுதீர் காரமணா இரண்டு கோடி ரூபாயை கொள்ளையடித்து அதை ஆசிப்பிடம் நம்பிக்கையாக கொடுத்து மறைத்து வைப்பதும், ரூம் மேட்டான டப்பிங் எழுத்தாளரான சித்திக் அந்தப்பணத்தை அடித்துக்கொண்டு எஸ்கேப் ஆவதும் இந்த கதையில் கிளைக்கதையாய் பிரிந்து நெகிழ்ச்சியூட்டுகிறது.

காதலில் தோற்ற இளைஞனுக்கு, காதலில் நம்பிக்கை துரோகத்தை சந்தித்த இளைஞனுக்கு தன்னை உதறிய காதலிக்கு எப்படி நாகரிகமாக பதிலடி கொடுப்பது என்கிற விஷயத்தை கதையின் அடிநாதமாக கையாண்டிருக்கிறார்கள்..

காதலில் தோற்று மீண்டுவரும் கேரக்டரில் ஆசிப் அலி செம பிட்.. அவரது கோபமும் டக்கென எடுத்ததற்கெல்லாம் உணர்ச்சி வசப்படும் அவரது குணமும் அவருக்கு பிளஸ் பாயிண்ட்டாகவே அமைந்துள்ளன. தன்னை உதறிய காதலியை கடைசியில் ஒரு பார்வையுடன் வழியனுப்பி வைக்கிறார் பாருங்கள்.. தியேட்டரில் கிளாப்ஸ் பறக்கிறது..

மகேஷிண்டே பிரதிகாரம் படம் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி அபர்ணா பாலமுரளி (தமிழில் 8 தோட்டாக்கள் படத்தில் நடித்தவர்) இந்தப்படத்திலும் அந்த வேலையை இன்னும் சிறப்பாக செய்திருக்கிறார். படம் முழுதும் நம்மை ஒருவித புன்னகை முகத்துடன் நம்மை உட்கார வைப்பதில் அபர்ணாவின் பங்கு அதிகம்.

டப்பிங் படங்களுக்கு இப்படித்தான் வசனம் எழுதுவார்களோ என சிரிக்கவைக்கும் சித்திக், பிளாஸ்பேக் கதை சொல்லி நெகிழ வைப்பதுடன் பணத்தை அபேஸ் பண்ணும்போது பகீர் கிளப்பவும் செய்கிறார். கதைசொல்லியாக சீனிவாசன், டைரக்டராக லால்ஜோஸ் இவர்களைப்பற்றி சொல்லியா தெரிய வேண்டும்.. டாக்டராக வரும் ஆஷா சரத் கொஞ்ச காட்களில் மட்டுமே வந்தாலும் க்யூட் சிரிப்பால் ரசிக்கவைக்கிறார். அவரது கேரக்டரில் கூட ஒரு ட்விஸ்ட் வைத்து அட.. இங்க பாருடா என சொல்ல வைத்திருக்கிறார் இயக்குனர் ஜிஸ் ஜாய்..

கோபக்கார இளைஞாக சுதீர் காரமணாவை சித்தரித்து, அதேசமயம் அவரின் இன்னொரு மறுபக்கத்தையும் காட்டியிருப்பதும் சரியானா ஒன்று. தர்மஜன் போல்காட்டி ஓரிரு இடங்களில் மட்டும் சிரிக்க வைப்பதோடு தனது வேலையை முடித்துக்கொள்கிறார்.

தீபக் தேவின் இசை அழகான பாடலுடன் மாண்டேஜ் காட்சிகளாய் படத்தை நகர்த்துகிறது.

அலெக்ஸ் புள்ளிக்களின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் ரசிக்கும்படி படமாக்கப்பட்டு இருக்கின்றன.

ஒரு காதல், அதில் ஒரு தோல்வி, அதற்கு மருந்தாக இன்னொரு காதல் என்கிற வழக்காமான கதையை நேர்த்தியாக சொன்ன விதத்தில் தான், அறிமுக இயக்குனர் ஜிஸ் ஜாய் தனித்து தெரிகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement