Advertisement

டியான் (மலையாளம்)

நடிகர்கள் : பிருத்விராஜ், இந்திரஜித், முரளிகோபி, அனன்யா, பத்மபிரியா, சுராஜ் வெஞ்சாரமூடு, சைன் டாம் சாக்கோ மற்றும் பலர்

ஒளிப்பதிவு : சதீஷ் குறூப்

இசை : கோபிசுந்தர்

கதை : முரளிகோபி

டைரக்சன் : ஜியென் கிருஷ்ணகுமார்

ஆசிரமத்திற்கு இடம்பிடிக்கும் போர்வையில் கார்ப்பரேட் நிறுவனத்தின் கைக்கூலியாக செயல்படும் ஒரு மதகுருவை, இஸ்லாமியர் ஒருவரின் உதவியுடன் எதிர்க்கும் வேதமந்திரம் கற்ற ஒரு பண்டிதனின் கதை தான் இந்த டியான்.

உ.பி மாநிலத்தில் வறண்டுபோன ஒரு சிறிய கிராமத்தில் பல வருடங்களாக மலையாளிகள் சிலர் வசித்து வருகின்றனர். வேத பண்டிதர் ஆன இந்திரஜித் தனது மனைவி அனன்யா மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்தப்பகுதியையே 'பகவான்' என சொல்லப்படும் முரளிகோபியின் ஆட்கள் அவரது ஆசிரமத்திற்கான இடமாக மாற்ற முயல்கின்றனர். தனது மந்திர தந்திர சக்தியால் மக்களை மட்டுமல்ல, மாநில முதல்வரையே தனது பக்தராக மாற்றி வைத்திருக்கிறார் முரளிகோபி.

ஆனால் பணம், மிரட்டல் உட்பட எந்த சமரசத்துக்கும் ஒத்துக்கொள்ளாத இந்திரஜித், முரளிகோபியை எதிர்க்கிறார். இதனால் தனது குழந்தையின் மரணம் உட்பட சில மோசமான விளைவுகளை சந்திக்கிறார் இந்திரஜித். இந்தநிலையில் பாபா எனப்படும் பிருத்விராஜ், இந்திரஜித் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நுழைகிறார். அவர்மூலம் கிடைக்கும் சக்தியால் பகவானின் ஆட்களை துவம்சம் செய்கிறார் இந்திரஜித். யார் இந்த பாபா, இஸ்லாமியரான அவர் ஏன் இந்திரஜித்துக்கு உதவ வேண்டும், பாபாவின் சக்தியை கொண்டு பகவானின் சாம்ராஜ்யத்தை இந்திரஜித்தால் என்ன செய்ய முடிந்தது என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது.

வழக்கமான பாணியில் இருந்து கதையையும் கதைக்களத்தையும் புதுமையான முறையில் கையாண்டு இருப்பது சுவாரஸ்யம் தருகிறது. படத்தில் பிருத்விராஜ் இருந்தாலும் கூட இந்திரஜித் தான் பிரதான கதாநாயகனாக தெரிகிறார். பிருத்விராஜின் பிளாஸ்பேக் காட்சி 'பாட்ஷா' எபக்ட்டில் இருந்தாலும், நடப்புகாலத்தில் அவரை அமைதியான பாபாவாக மாற்றிவிட்டது ஏமாற்றமே. ஆனால் அந்த 'பாபா' கேரக்டரில் பிருத்விராஜ் செம பிட்.

பொறுமைசாலியாக இருந்து பொங்கி எழும் கேரக்டர் ஏற்கனவே 'சேகவர்', 'காஞ்சி' ஆகிய படங்களில் இந்திரஜித் பலமுறை சாப்பிட்ட அல்வா தான். என்றாலும் அதை இந்தமுறையும் திகட்டாமல் கதையுடன் நேர்த்தியாக செய்திருப்பது சிறப்பு. அனன்யா நிறைய நேரம் வந்தாலும், பத்மபிரியா சிலநிமிடங்களே வந்துபோனாலும் இருவருக்கும் நடிப்பதற்கான எல்லை குறைவுதான். பகவானாக வரும் முரளிகோபியின் படு யதார்த்தமான, குள்ளநரித்தனமான நடிப்பு மிரட்டல். நாயரான தன்னை நய்யார் என வடமாநில ஆளாக காட்டிக்கொண்டு கடை நடத்தும் சுராஜ் வெஞ்சாரமூடு, பாபாவின் உதவியாளாக வரும் ஷைன் டாம் சாக்கோ மற்றும் பகவானின் அடியாட்களாக வருபவர்களின் தேர்வு எல்லாமே கச்சிதம்.

படத்தில் ஆக்சன் காட்சிகளை பிரமிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறார்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ். ஆனால் நானம் எதிர்பார்க்கும் இடத்தில் அவை இடம்பெறாமல் போவதுதான் கொஞ்சம் ஏமாற்றம் தருகிறது. வடமாநிலங்களின் வறண்ட பகுதிகளை இயல்பு மாறாமல் படம்பிடித்திருக்கிறது சதீஷ் குறூப்பின் கேமரா. கோபிசுந்தரின் பின்னணி இசை படத்திற்கு விறுவிறுப்பேற்றுகிறது. படத்தின் நீளத்தை இன்னும் நன்றாகவே குறைத்திருந்தால் அந்த விறுவிறுப்பு இன்னும் கூடியிருக்கும்.

இத்தனை இருந்தாலும் படத்தில் ஏதோ ஒன்று குறைவது போலவே படம் முழுதும் நமக்கு தோன்றுகிறது. அது வடமாநிலமான உபியில் ஒரு வறண்ட பகுதியில் இருந்துகொண்டு அந்தப்பகுதிக்கு சொந்தம் கொண்டாடி மலையாளிகள் போராடுவதாக சொல்லப்படுவது நம் மனதோடு ஓட்ட மறுக்கிறது. அதேசமயம் ஒரு இந்துவின் உரிமையை மீட்க, ஒரு இஸ்லாமியர் தோள்கொடுப்பதாக பின்னப்பட்டிருக்கும் காட்சிகள் மதநல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக பாராட்டும்படி அமைக்கப்பட்டுள்ளது.. இதை சரியாக பேலன்ஸ் செய்து காட்சிகளை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement