Advertisement

தொண்டிமுதலும் திரிக்சாட்சியும் (மலையாளம்)

நடிகர்கள் : பஹத் பாசில், சுராஜ் வெஞ்சாரமூடு, நிமிஷா சஜயன், அலான்சியர் லே
கதை : சஜீவ் பழூர் - ஷ்யாம் புஷ்கரன்
ஒளிப்பதிவு : ராஜீவ் ரவி
இசை : பிஜிபால்
இயக்கம் : திலீஷ் போத்தன்

கடந்த வருடம் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் வெற்றியை ருசித்த பஹத் பாசில் - இயக்குனர் திலீஷ் போத்தன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் இது. அந்த எதிர்பார்ப்பை இதில் ஈடேற்றி இருக்கிறார்களா..?

சாதாரண கிராமத்தில் வாழும் சுராஜ் வெஞ்சாரமூடு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரில் வேலை பார்க்கும் நிமிஷாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். தனது தோட்டத்திற்கு சொந்தமாக போர் போட பணம் புரட்டுவதற்காக ஊர் திரும்புகிறார்கள். வரும் வழியில் பேருந்து பயணத்தின்போது நிமிஷாவின் செயினை பிக்பாக்கெட் திருடனான பஹத் பாசில் திருடுகிறார். அதை உணர்ந்து நிமிஷா சுதாரிப்பதற்குள் அவர் கண் முன்பே அதை வாயில் போட்டு விழுங்கவும் செய்கிறார்.

பஸ் போலீஸ் ஸ்டேஷன் போகிறது. போலீஸ் விசாரணையில் தான் திருடவே இல்லை என சாதிக்கிறார் பஹத் பாசில். ஆனாலும் நிமிஷா தனது புகாரில் உறுதியாக இருக்கவே பஹத் பாசிலுக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் குடலில் செயின் இருப்பது தெரிய வருகிறது.

அதை காலைக்கடன் மூலம் வெளியே கொண்டு வரும் பணியில் செயினை பறிகொடுத்த சுராஜின் முன்னிலையில், அலான்சியர் லே தலைமையிலான போலீஸார் ஈடுபடுகின்றனர். அந்தசமயம் பார்த்து அனைவரின் கண்களில் மண்ணை தூவி தப்பிக்கிறார் பஹத் பாசில். அவர் மீது மிகப்பெரிய கொள்ளை குற்றத்தை சுமத்தி பெரிய ஆளாக ஆகலாம் என நினைத்த இன்ஸ்பெக்டரின் ஆசையில் மண் விழுகிறது.

பஹத் பாசிலை தீவிரமாக தேடுகிறார்கள். ஒரு கட்டத்தில் பஹத் பாசிலை பிடித்தும் விடுகிறார்கள்.. மீண்டும் அவரை எக்ஸ்ரே எடுத்து பார்க்கும்போது வயிற்றில் செயின் இல்லாதது கண்டு அதிர்ச்சியைடைகின்றனர் போலீஸார். அவரோ உதவி இன்ஸ்பெக்டர் அலான்சியர் பக்கம் கை காட்டுகிறார். தனது பக்கம் பழி திரும்புவதை பார்த்து இந்த வழக்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக போலியாக ஒரு செயினையும் தயார் செய்கிறார் அலான்சியர் லே.

உண்மையான செயின் என்ன ஆயிற்று..? பஹத் பாசிலை துரத்தும் சுராஜ் அவரிடம் பேசியது என்ன.? எதனால் பஹத் பாசில் மனம் மாறினார்.. போலீஸார் பஹத் பாசிலை என்ன செய்தனர் என்பதற்கு க்ளைமாக்ஸ் விடை சொல்கிறது.

மேற்சொன்ன விபரங்களை கதையாக படிப்பதை விட படமாக பார்க்கும்போது நம்மால் படத்துடன் இயல்பாக ஒன்ற முடிகிறது.. நிச்சயமாக இவர்களது 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தை பார்த்துவிட்டு அந்த எதிர்பார்ப்புடன் இந்தப்படத்தை பார்க்காமல் புதிய மனநிலையுடன் படத்தை பார்ப்பதே சுவாரஸ்யம் கூட்டும்..

படத்தின் ஹீரோ பஹத் பாசிலா இல்லை சுராஜ் வெஞ்சாரமூடுவா என்கிற சந்தேகம் படம் முழுவதும் இழையோடுகிறது.. காரணம் காமெடியனான சுராஜ் சீரியஸாக நடித்திருக்கிறார்.. நாயகியுடன் காதல் செய்கிறார்.. திருமணமும் செய்கிறார். ஆனால நாயகன் பஹத் பாசிலோ செயின் திருடராக காமெடி செய்கிறார். படத்தில் அவருக்கு ஜோடியும் இல்லை.. ஆனாலும் இருவருக்கும் சம அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ் ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பஹத் பாசில் உண்மையை மறைத்து அமுக்கமாகவே இருப்பதும், செயின் கிடைத்துவிடாதா என்கிற பரிதவிப்புடன் தினமும் ஸ்டேஷனுக்கு மனைவியுடன் சுராஜ் வந்துபோவதும், நம்மில் இப்படி செயினை பறிகொடுத்தவர்களின் எதார்த்த நிலையை துல்லியமாக காட்டியிருக்கிறார்கள்.

அறிமுக நாயகி நிமிஷா சஜயன் வெகு இயல்பாக இருக்கிறார். செயினை பறிகொடுத்துவிட்டு, அதையும் பஹத் தனது கண்முன்பே விழுங்கியதை பார்த்தும்விட்டு அந்த செயினுக்காக அவர் போலீஸ் ஸ்டேஷன் படியை தினமும் மிதிக்கும்போது ஒரு சராசரி பெண்ணாகவே மாறிவிடுகிறார்..

படத்தின் மிக முக்கிய பலமே போலீஸ் ஸ்டேஷனும் அதில் பணியாற்றும் எதார்த்த கதாபாத்திரங்களான போலீஸ் அதிகாரிகளும்.. ஒரு சின்ன திருட்டு என்றாலும் அதை தங்கள் பக்கம் சாதகமாக்கி வழக்கை ஸ்ட்ராங் ஆக்க அவர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர் என்கிற உண்மை நடைமுறையை அங்குள்ள போலீஸ் கேரக்டர்கள் மூலமாக நையாண்டியாக தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர் திலீஷ் போத்தன். இசையமைப்பாளர் பிஜிபாலின் பின்னணி இசையும் ராஜீவ் ரவியின் யதார்த்தம் அறையும் ஒளிப்பதிவும் இன்னும் இரு முக்கிய தூண்களாக படத்தை தாங்கி பிடிக்கின்றன.

முன்பே சொன்னதுபோல 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தை பார்த்துவிட்டு அந்த எதிர்பார்ப்பு இல்லாமல் இதை பார்த்தால் இது நிச்சயம் உங்கள் மனதை தொடும் ஒரு படமாக இருக்கும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement