Advertisement

பொதுவாக எம்மனசு தங்கம்

உதயநிதி ஸ்டாலின், முதன்முதலாக முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் நிரம்பிய கதையில் நடிக்க, அவருடன் "ஒரு நாள் கூத்து" நிவேதா பெத்துராஜ் இணை சேர, இந்த ஜோடியுடன் சூரி, பார்த்திபன், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், ஜி.எம்.சுந்தர், ரமா, நமோ நாராயணன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்க, தளபதி பிரபுவின் எழுத்து, இயக்கத்தில், "தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட்" தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படமே "பொதுவாக எம்மனசு தங்கம்".

கதைப்படி, தான் பட்ட அவமானத்திற்காக ஒரு ஊரையே நிர்மூலமாக்க நினைக்கும் பார்த்திபனுக்கு, அந்த ஊருக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கும் அதே ஊரைச்சார்ந்த உதயநிதி ஸ்டாலின் மருமகனாகும் லவ், காமெடி, சென்டிமென்ட்.... ஸ்டோரி தான் ..."பொதுவாக என் மனசு தங்கம்" படத்தின் கதையும், களமும்!

அந்த ஒட்டுமொத்த கிராமத்திற்கும் நல்லது செய்ய போய் அடிக்கடி கெட்டப்பெயர் எடுக்கும் கணேஷ் எனும் இளைஞரான உதயநிதி ஸ்டாலின், தன் ஊருக்கு நல்லது செய்வது மாதிரி கெட்டது செய்யும் ஊர் பெரிய மனிதர் ஊத்துக் காட்டான் - பார்த்திபனை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்கிறார். அதன்பின், பார்த்திபன் பாணியிலேயே அவரை போட்டு தாக்குவதில் தொடங்கி சூரியுடன் கிராமத்து இளைஞராக வளைய வருவது காதலி லீலாவதி - நிவேதாவிடம் அவரது அப்பாவைப் பற்றிய உண்மைகளை சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது தவிப்பது, இறுதியில் ஊருக்காக காதலை விட்டுத் தர துணிவது என சகலத்திலும் கிராமத்து இளைஞர் கணேஷாக தன்னால் இயன்ற அளவு புகுந்து புறப்பட்டிருக்கிறார். பலே , பலே !

கிராமத்து நாயகி லீலாவதியாக "ஒரு நாள் கூத்து" படத்திற்கு அப்புறம் நிவேதா பெத்துராஜ் ஹோம்லி குல்கந்தாக ஜொலிக்கிறார். இவரது வசீகர பார்வையில் தன் மனதை இப்படக் கதைப்படி பறி கொடுப்பது நாயகர் மட்டுமல்ல படம் பார்க்கும் ரசிகர்களும் தான்.

கிட்டத்தட்ட வில்லனாக, குலசாமியை கும்பிட வந்த இடத்தில்., தன் குலசாமி குடியிருக்கும் ஊர் மக்களால் உறவுகளின் முன்னிலையில் அவமானத்திற்கு ஆளாகும் பெரிய மனிதர் ஊத்துக்காட்டானாக தன்னைச் சுற்றி புத்திசாலிகளே இருக்க கூடாது எனக் கருதும் அதி புத்திசாலி பெரிய மனிதராக, நாயகி லீலாவின் அப்பாவாக பார்த்திபன், வழக்கம் போல மிரட்டியிருக்கிறார் மிரட்டி. வைகை புயல் வடிவேலையே சில படங்களில் தன் சிலேடை பேச்சால் அலறவிட்ட இவர் இந்தப் படத்தில் உதயநிதியின் ஊர் மக்களையும், தன் உதவியாளர் மயில்சாமியையும் படுத்தி எடுக்கிறார். சில இடங்களில் பாவம் ரசிகர்களையும்.

உதயநிதியின் நண்பர் டைகர் பாண்டியாக சூரி, உதயை விட ஜாஸ்தி சவுண்டு கொடுக்கும் சவுண்டு பார்ட்டியாக பல இடங்களில் காமெடியிலும், சில இடங்களில் கடியிலும் சதாய்க்கிறார்

ஊத்துக்காட்டான் - பார்த்திபனின் ஓட்டுநராக மயில்சாமி, ஊர் தலைவர் தர்மலிங்கமாக ஜி.எம்.சுந்தர், ஊத்தின் தங்கச்சி மாப்பிள்ளை ராமலிங்கமாக நமோ நாராயணன், ஊர்க்கார வாலிபர் முருகேசனாக விவேக் பிரசன்னா.. உள்ளிட்ட அனைவரும் இயக்குனர் சொன்னதை செய்திருக்கின்றனர்.

ஒரே ஒரு சண்டைக் காட்சி தான் என்றாலும் ஸ்டண்ட் சிவாவின் சண்டைப் பயிற்சியில் அந்த பைட்சீன் சிறப்பு.

தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு சற்று படுத்தும் பலவீனத்தொகுப்பு. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை கண்முன் கொண்டு வரும் பளிச் பதிவு!

டி.இமானின் இசையில், யுகபாரதியின் வரிகளில் "சும்மா இருக்கிறது...", "அம்மணி நீ...", "சிங்கக்குட்டி....", "என்னனு சொல்வேன்..." உள்ளிட்ட பாடல்கள் கிராமிய தாலாட்டு பின்னணி இசை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை.

தளபதி பிரபுவின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் ஒரு சில லாஜிக் குறைகள் சில பல டிராமா - சினிமாடிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும், குலசாமி கோயில், திரெளபதி அம்மன் சாமி... என கிராமிய ஆன்மிகத்துடன் ஒரு அழகிய காதல் கதை இப்படத்தில் சொல்லப்பட்டிருப்பது, நம் சொந்த ஊருக்கு போய் வந்த அனுபவத்தையும் திருப்தியையும் தருகிறது என்பது ஆறுதல்!

மொத்தத்தில், ரொம்ப நாளைக்கு அப்புறம் கிராமத்து கதையம்சத்துடன் கூடிய காதல் கதையாக வந்திருக்கும் "பொதுவாக எம்மனசு தங்கம் - கிராமத்து ரசிகர்களுக்கு தங்கம்! நகரத்து பின்னணியை கொண்டவர்களுக்கு? உதயநிதியும், இயக்குநரும் தான் சொல்ல வேண்டும்!"

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

 • Nathardeen Rph - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நல்ல படம். vip 2 க்கு இந்த படம் எவ்வளவோ தேவலை. தேனீ மாவட்ட அழகை கண் முன்னே நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர். ரொம்ப சீரியஸா போகாம காமெடி பன்னி என்ஜாய் பண்ண வைக்கிறார்கள்

 • POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ

  ஆமாம்,உதயநிதி மகன் எப்போது கதாநாயகனாக நடிப்பார் ....? தங்கத் தமிழகம் தவம் இருக்கிறது ...

 • மகேஷ்ராஜா -

  சுமாா்

 • Jack J - Chennai,இந்தியா

  மொக்க படம்..எப்பெடி இந்த டைரக்டர் இப்படிஎல்லாம் யோசித்து படம் பண்ண வாய்ப்பு கிடைத்ததோ ? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் அதுல உதயநிதி அயோ அயோ நடிப்பே வரல, இவரால் எப்படி மனசு வருதோ மக்களை கஷ்டப்படுத்த ??? ப்ளீஸ் நடிக்காதீங்க ...உங்க தாத்தா , அப்பா பணத்துல படம் எடுங்க அது OK பட் நீங்க நோ

 • padkavathi -

  படம் சூப்பர்.

 • jackjoshua -

  vip 2 ku indha padam romba super . comedy entertainer movie .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement