Advertisement

முன்னோடி

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, தான் பார்த்த பல திரைப்படங்களை தனது படத்தின் "முன்னோடி"களாக கொண்டு, யாரிடமும் உதவியாளராக இல்லாமல் எஸ்.பி.டி ஏ.குமார் எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் தான் "முன்னோடி". இப்படத்தை ஸ்வஸ்திக் சினிவிஷன் பேனரில் சோனம் அகர்வால் - எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர் இருவரும் இணைந்து தயாரித்து வழங்க, "எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்" பி.மதன் வெளியீடு செய்திருக்கிறார்.

அம்மாவின் கவனம் எல்லாம் தன் தம்பி பிறந்த பின், தம்பியின் மீதே எனும் தவறான எண்ணத்தில் தந்தையில்லாத நடுத்தரக் குடும்பத்து இளைஞன் ஒருவன், பெரும் தாதா ஒருவரிடம் வலது கையாக வாழ்கிறான். அதனால், அவன் சந்திக்கும் பிரச்சினைகள் தான் "முன்னோடி" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம். இது கூடவே அவனது காதல், தாய், தம்பி சென்டிமென்ட், விசுவாசம், போலீஸிடம் ஏற்படும் பொல்லாப்பு, தாதாவின் சாதிவெறி பிடித்த மைத்துனரால் சந்திக்கும் சவால்கள்... இப்படி எல்லாவற்றையும் ஏற்கனவே பல படங்களில் பார்த்து, சலித்த விதத்தில் கலந்து கட்டி "முன்னோடி"-யை முன்மாதிரி எனக் கருதி தந்திருக்கின்றனர் மொத்தப்படக் குழுவினரும்.

வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக தாதாவின் வலக்கையாக ஹரீஷ்., தன் உருவத்திற்கு தாண்டிய வேலைகளில் ஈடுபட்டு நாயகியை மட்டுமின்றி ரசிகர்களையும் ஈர்க்க முயற்சித்திருக்கிறார். ஏதோ, "பாகுபலி" பிரபாஸின் தம்பி உறவுக்காரராம் மனிதர்.. அவர் செய்யும் சாகசங்களை அதனால் பார்க்கலாம். ஆனாலும், அந்த போலீஸுக்கு பழிப்பு காட்டி ஆம்புலன்ஸில் பணம் கடத்துவது, மட்டுமின்றி, அந்த அதிகாரி முன்பே ஆப்ரேஷன் சக்ஸஸ் என்பது... போலீஸ் முன் மீன் சாப்பிட்டபடி, மீன் சூப்பர்... என்று போலீஸை வெறுப்பேற்றுவது உள்ளிட்ட கோமாளி தனங்கள் கொஞ்சமே கொஞ்சம் ரசிகனின் பொறுமையை சோதிக்கின்றன.

கல்லூரி மாணவியாக கதாநாயகரின் காதலியாக யாமினி பாஸ்கர் ஒரு சில பிரேம்களில் அழகாகவும், ஒரு சில பிரேம்களில் அய்யோ பாவமென்றும் இருக்கிறார்.

தாதாவாக வரும் முரட்டுத்தனமுக அர்ஜூனாவை ஏற்கனவே ஒரு சில படங்களில் பார்த்திருந்தாலும், இந்தப் படத்தில் மனிதர் கூடுதல் மிரட்டல். அதுவும் அந்த கோயில் கொலை வெறி பைட் மிரட்டலோ, மிரட்டல்!

மாஜிநாயகி சித்தாரா நீண்ட இடைவெளிக்குப் பின் பாசக்காரத் தாயாக வாழ்ந்திருக்கிறார். தாதாவின் மனைவியாக, ஒரு பெண் குழந்தைக்கு தாயாக சுஜாவாரூனி வசீகரிக்கிறார். மலையாளவாடை வீசப் பேசும் அந்த மிடுக்கு போலீஸ் அதிகாரி, தாதாவின் சாதிவெறி மைத்துனர் உள்ளிட்டோரும், அவர்களது நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

சுதாவின் படத்தொகுப்பு "ப்ச்". அதற்கு நேர்மாறாக, வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளும், படக்காட்சி களும் பளிச்!"

பிரபுசங்கர் இசையில், "முட்டைக் கறி முட்டைக் கறி", "என்னதிது... என்னதிது....", "தெய்வம் தந்த செந்தம் ஒன்று, இன்று...", "அக்கம் பக்கம்..." உள்ளிட்ட பாடல்கள் பலே சொல்லி தாளம் போடும் ரகம். அதிலும் அந்த சிஜி ஒர்க் காட்சிகள் நிரம்பிய "அக்கம் பக்கம்... பாடல் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுசு என்பதற்காகவே "முன்னோடி" படத்தை ஒருவாட்டி பார்க்கலாம்!

எஸ்.பி.டி.ஏ.குமார் எழுத்து, இயக்கத்தில் ஆரம்ப காட்சிகள் ஆமை வேகத்தில் நகர்ந்தாலும், தாய், தம்பி, சென்டிமென்ட்... கலந்து ஒரு முழுநீள ஆக்ஷன் படம் தந்திருப்பதற்காக "முன்னோடி"-யை முன்னாடி வந்த படங்களோடு ஒப்பிட்டு பார்க்காமல் பார்ப்பதென்றால் பார்க்கலாம்!

மேலும், "முன்னோடி - பல படங்களில் பார்த்த நெடி - என்பது மட்டுமே குறை என்றாலும், இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் "பைக்ல கூட 6 இன்ச் பின்னாடி சீட் தூக்கி இருந்தா தான் கூட வாராங்க...", "அருணால்டு பாடி எல்லாம் வேஸ்ட் இப்போ பொண்ணுங்களுக்கு அனிருத் தான் டேஸ்ட்...", "ஒரு சம்பவம் பண்ணினோம்னா, ஒரு வெட்டு கூடுனா இன்னொரு வெட்டு 17, 18 வெட்டுன்னு... என்ன பெருமை வேண்டி கிடக்கு.?", உள்ளிட்ட பளிச், பளிச் ... வசனங்களுக்காகவும், இப்பட பாடல் காடசிகள், படமாக்கப்பட்டிருக்கும் விதம் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுசு என்பதற்காகவும் "முன்னோடி படத்தை பார்க்கலாம் ஒருவாட்டி!"

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement