Advertisement

ரங்கூன்

கெளதம் கார்த்திக் - சனா ஜோடி நடிக்க, பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி எழுத்து, இயக்கத்தில், செளகார்பேட்டை சேட்டுடன் சேர்ந்து தங்க கடத்தலில் ஈடுபட்டு, சிக்கலில் மாட்டும் பர்மா அகதி, அதனால் குழந்தை கடத்தல் உள்ளிட்ட கொடூரங்களிலும் ஈடுபடும் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் தான் ரங்கூன் திரைப்படம். இதுகூடவே, நாயகன் - நாயகியின் காதல் கண்ணாமூச்சியையும் கலர்புல்லாக, கருத்தாழமிக்கதாக காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.
"பொறக்கறது ஈஸி, சாகறது ரொம்ப ஈஸி ஆனா வாழறது ரொம்ப ரொம்ப கஷ்டம்..." என்றபடி, சோகமயமாக என்ட்ரீ ஆகும் வெங்கட் எனும் வெங்கடேசனாக கெளதம் கார்த்திக், இந்தியாவில் மறுகுடியேறிய பர்மா தமிழராக அகதியாக, அழகாக கம்பீரம் காட்டியிருக்கிறார். ஆனால், அவரது சாக்லெட் பாய் முகமும், இமேஜும் கொஞ்சமே கொஞ்சம், இது மாதிரி அடாவடி கேரக்டருக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. மற்றபடி, அவரது பாத்திரமும் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இப்படக் கதையும் அவரது முந்தைய படங்களை காட்டிலும் சிறப்பு என்பது சிலேகிப்பு!
"நான் விசுவாசிடா... ஆனால் முட்டாள் கிடையாது..." என்றபடி, துரோகி முதலாளியிடம் துள்ளுவதிலாகட்டும், "ஒரு அகதியா ஆரம்பிச்ச என் வாழ்க்கையில என்னை சேர்ந்தவங்களே எனக்கு செய்தது தான் பெரும் துரோகம்..." என புலம்புவதிலாகட்டும், "இங்கு யாருமே நல்லவங்க, கெட்டவங்கன்னு கிடையாது.... எல்லாருமே இங்க, அதிர்ஷ்டத்தை நம்பி தான் வாழுறாங்க..." என வருத்தப்படுவதிலாகட்டும்... என மெஸேஜ் தருவதிலாகட்டும் சகலத்திலும் நட்பை நம்பி பாதிக்கப்பட்ட பர்மா அகதியாகவே பளிச்சிட முயற்சித்திருப்பது பாராட்டு லுக்குரியது.
நம்பிக்கைக்குரிய அறிமுக நாயகியாக நடாஷா எனும் பாத்திரத்தில் சனா கெளதம் கார்த்திக்கை மட்டுமின்றி... ரசிகர்களையும் சேர்த்து, பார்வையாலேயே இன்ப வதை செய்கிறார். இதில் ப்ரீ கிப்ட் எனும் பெயரில் அவ்வப்போது அசத்தல் முத்தக்காட்சிகளில் வேறு அம்மணி அசரடித்திருக்கிறார். வாவ்!
"நான் நட்டப்படலாம் ஆனா, ஏமாறக் கூடாது... நான் அவங்களுக்கு, இவ்ளோ செய்ததற்கு அவங்க என்னை ஏமாத்தக் கூடாது.." என்றபடி, நாயகர் உள்ளிட்ட நம்பியோரை ஏமாற்றும் சியா எனும் குணசீலனாக சைலன்ட் வில்லனாக மலையாள சித்திக் மிரட்டியிருக்கிறார்.
போலீஸ் அதிகாரி சையத் நவாசுதீன் ஆக மாஜி நாயகர் ஆனந்த், அவருக்கு கீழ் ஆனந்துக்கு தெரியாது என விலை போகும் போலீஸாக சூப்பர் குட் சுப்பிரமணி,

நட்புக்காக உயிரை விடும் அத்தோ எனும் பர்மிய உணவு தயாரிப்பாளர் கம் நாயகனின் கேங் நண்பர் மற்றும் மைத்துனர் அத்தோக்குமார் ஆக வரும் லல்லுவும் சரி, காசுக்காக அதே நட்பை காவு கொடுக்கும் டிப்டாப் டேனியலும் சரி, பிள்ளையார் - மணிவண்ணனாக கான்ஸ்டபிளாக நட்புக்கு இலக்கனமாக வரும் நபரும் சரி, கெளதமின் தந்தையாக சில காட்சிகளே வரும் ரென்னிஸ் உள்ளிட்டோரும் சரி... பர்மா அகதிகளாக பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பு பாடாவதி தொகுப்பல்ல... நிச்சயம் பக்கா தொகுப்பு என்பது படத்திற்கு பெரும் பலம்.
அன்றைய பர்மாவின் ரங்கூனின் அழகையும், இன்றைய பர்மாவின் யங்கோனின் அழகையும் அசத்தலாக அள்ளி வந்திருக்கும் அனிஷ் தருண்குமாரின் ஒளிப்பதிவு, ஒவியப்பதிவு!
ஆர்.ஹெச்.விக்ரமின் "நீயில்லா ஆகாயம்...", "பம் பம் பம்... வாழ்த்துங்கடி, வாழ்த்துங்கடி...." உள்ளிட்ட பாடல் வரிகளும் இசையும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் இதம், பதம்.
ராஜ்குமார் பெரியசாமியின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில், "நம்ம மேல இருக்குறவங்களுக்கு நம்ம வேலை பிடிச்சிருந்தா போதும் நாமும் தன்னால் மேல வந்துடலாம்...", "பணம் நிஜம் இல்ல... நிஜம் மாதிரி", "இது வரைக்கும் நான் நல்லவனா கெட்டவனா தெரியாது... இனி உனக்காக நல்லவனா நடந்துக்குனுமுன்னு தோனுது" உள்ளிட்ட வசனங்களாலும், பர்மிய அகதிகளால் சென்னை, எண்ணூர் அருகே பர்மா நகர் என்கிற அன்னை சிவகாமி நகர் பிறந்த கதை, ஹவாலா பண விளக்கம், சிட்டிபஸ் கம்பி திருகி நாயகியின் கவனம் ஈர்க்கும் நாயகன் உள்ளிட்ட ரசனையான காட்சிப்படுத்தல்களாலும், ஒரு நண்பனின் துரோகத்தையும், ஒரு சில நண்பர்கள் நட்புக்கு தரும் நம்பிக்கையான முக்கியத்துவத்தையும் மிக அழகாக கதையோடு கோர்த்து வாங்கியிருக்கும் இயக்குனரின் சாமர்த்தியத்தாலும் "ரங்கூன்" பெரிதாக ஈர்க்கிறது!
மொத்தத்தில், "ரங்கூன்- நிச்சயம் லயிப்பான் ரசிகன்!"

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement