Advertisement

தீரன் அதிகாரம் ஒன்று

நடிகர்கள் - கார்த்தி, ரகுல் ப்ரீத், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் மற்றும் பலர்
இயக்கம் - வினோத்
இசை - ஜிப்ரான்
தயாரிப்பு - டிரீம் வாரியர் பிக்சர்ஸ்

தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் கதைகள் வந்துள்ளன. பெரும்பாலான கதைகள் கமர்ஷியல் சினிமாவுக்குரிய அம்சங்களுடன் தான் நிறைந்திருக்கும். ஒரு ரவுடி, ஒரு தீவிரவாதி, குடும்பத்தினரைக் கொன்றவன் இப்படிப்பட்டவர்களைப் பழி வாங்கும் கதையாகத்தான் இருக்கும். ஆனால், அவற்றிலிருந்து மாறுபட்டு முதல் முறையாக ஒரு போலீஸ் அதிகாரியின் விசாரணை வாழ்க்கை, இந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் யதார்த்தமாக கொடுத்திருக்கிறார்கள்.

சதுரங்க வேட்டை படத்தில் ஒரு ஏமாற்றுக்காரனை நாயகனாக வைத்து பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் வினோத், இந்தப் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் தியாகத்தை நாமும் சல்யூட் அடித்துக் கொண்டாடும்படி மனதில் பதிய வைத்திருக்கிறார்.

மிகவும் நேர்மையான டிஎஸ்பி-யாக இருப்பவர் கார்த்தி. அவருடைய நேர்மையால் தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களுக்கு மாற்றப்படுகிறார். திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி சரக டிஎஸ்பி-யாக நியமிக்கப்படுகிறார். அப்போது நெடுஞ்சாலைக்கு அருகில் தனியாக இருக்கும் வீட்டில் நடந்த கொலை, கொள்ளைகளைப் பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.

அந்த விசாரணைக்கான தேடுதல் வேட்டைக்குச் சென்றிருக்கும் போது அவர் கீழ் இருக்கும் இன்ஸ்பெக்டரான போஸ் வெங்கட் குடும்பத்தார், அந்த கொள்ளையர்களால் கொலை செய்யப்படுகிறார்கள். கார்த்தியின் மனைவி ரகுல் ப்ரீத்தும் பலமாகத் தாக்கப்படுகிறார். அடுத்து எம்எல்ஏ-வை அந்தக் கொள்ளை கும்பல் கொலை செய்த பிறகுதான் அரசு தரப்பில் விசாரணையை தீவிரப்படுத்த செலவழிக்க ஆரம்பிக்கிறார்கள். வட இந்தியாவில் பதுங்கியிருக்கும் அந்த கொள்ளைக் கூட்டத்தைக் கண்டுபிடிக்க தனி போலீஸ் படையுடன் கார்த்தி புறப்படுகிறார்கள். அவர்களை கார்த்தி கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சிறுத்தை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த போதே கார்த்தியிடம் ஒரு மிடுக்கு தென்பட்டது. அது இந்தப் படத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. தீரன் என்ற பெயருக்கேற்றபடி தீரமாக செயல்படும் டிஎஸ்பியாக கார்த்தி, அதே அதிகாரத்துடன் நம் மனதில் அமர்ந்து விடுகிறார். ரகுல் ப்ரீத்துடனான ஆரம்ப காதல் காட்சிகளில் அவ்வளவு சுவாரசியம். பின்னர் டிஎஸ்பி ஆனதும் அவரிடம் இருக்கும் அந்த வேகமும், துடிப்பும் படத்தில் கடைசி வரை இருக்கிறது. கார்த்திக்கு மற்றுமொரு மைல்கல் இந்தப் படம்.

ரகுல் ப்ரீத் சிங், தமிழில் முதல் முறையாக ஒரு வெற்றிப் படத்தில் நடித்திருக்கிறார். + 2 பெயிலான ஒரு பெண் எப்படிப்பட்ட குறும்புத்தனத்தில் இருப்பார் என்பதை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார். கார்த்தியுடனான காதல் காட்சிகளில் அவ்வளவு நெருக்கமோ நெருக்கம். கார்த்தி பாஷையில் ரகுல் ப்ரீத்துக்கு ஒரு மன்னிப்பு பார்சல்.

படத்தில் வில்லனாக அபிமன்யு சிங், வட இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவன் இப்படித்தான் இருப்பாரோ என நம்மை நம்ப வைக்கிறார். கார்த்தியின் தனிப்படையில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டும் நிறைவாக நடித்திருக்கிறார்.

ஜிப்ரான் இசையில் பின்னணி இசை படத்தின் வேகத்தை பரபரப்புடன் நகர்த்த உதவியிருக்கிறது. வெளியீட்டிற்கு முன்பே ஹிட்டான செவத்த புள்ள பாடல் படத்தில் ஏதோ வந்து போகிறது. ஹிந்திப் பாடலை முழுதாக வைத்ததற்குப் பதிலாக செவத்த புள்ள பாடலை வைத்திருக்கலாம். சத்தியன் சூரியன் ஒளிப்பதிவும், திலீப் சுப்பராயனின் ஆக்ஷ்ன் இயக்கமும் படத்திற்கு மிகப் பெரிய பலம்.

இடைவேளை வரை காட்சிகள் நகர்வதே தெரியவில்லை. கார்த்தி, ரகுல் ப்ரீத் காதல் காட்சிகள், கொள்ளையர்களின் அட்டகாசம், கார்த்தியின் தேடுதல் ஆரம்பம் என விறுவிறுப்பாக நகர்கிறது. இடைவேளைக்குப் பின்னர் வட இந்தியாவில் மாநிலம் மாநிலமாக கார்த்தியின் தனிப்படை ஓடிக் கொண்டேயிருக்கிறது. அதைப் பார்க்கும் போது நமக்கே டயர்ட் ஆகிவிடுகிறது. இடைவேளையை இன்னும் கொஞ்சம் சுருக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு நிஜ வழக்கின் அடிப்படையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் கடைசியில் இப்படி வேலை செய்த அதிகாரிகளுக்கு எந்த விருதும், பதவி உயர்வும் வழங்கப்படவில்லை என்ற தகவலைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று - அதிகாரம் இரண்டு, சீக்கிரம் ஆரம்பித்துவிடுங்கள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (17)

 • சென்னை பாலன் - Chennai,இந்தியா

  நல்ல படம்

 • samy - pattukottai

  super

 • Rengasamy - pattukottai

  தீரன் ஒரு நல்ல படம்

 • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

  mr பொள்ளாச்சிபொடியான். ட்ரைன்ல கொள்ளைஅடிச்சவன இனி புடிச்ச என்ன புடிக்கட்டி என்ன? பழைய ரூபாய் முழுதும் ஒழிந்தபின் அவன் அடிச்ச கோடி பணம் இனி சாதாரண பேப்பர்..அதுமட்டுமல்ல அவனை புடிச்சு அவன் எப்படி கொள்ளை அடிச்சான்னு எல்லோருக்கும் சொல்லி அது மாதிரி கொள்ளை அடிங்கன்னு எல்லோருக்கும் ஐடியா தர போறோமா? நாம தமிழ் நாட்டு போலீஸ் சினிமா துறை மதிக்கற அளவுக்கு நாம மதிக்கறதே இல்ல...இப்போ சொல்றேன் எழுதி வச்சுக்கோங்க இன்னொரு ட்ரெயின் கொள்ளை நடக்கவே நடக்காது...ஒரு வேலை உங்க வீட்டுல ஏதாவது கொள்ளை போன நீங்க போலீஸ்க்கு போகமாடீங்க போல?

 • Krishnan - Chennai,இந்தியா

  நல்ல கதை, நல்ல திரையாக்கம், கார்த்தி தவிர வேறு நல்ல ஹீரோவை வைத்து இந்த படம் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில இடங்களில் ஓவர் ஆக்ட். செயற்கை தனமான நடிப்பு ... வேறு நல்ல ஹீரோ கிடைக்கவில்லையா?

 • காமராஜ் -

  100% உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதன் கதாநாயகன் உயர்திரு ஜாங்கிட் IPS அவர்கள் ஆவார். அவர் தான் நெடுஞ்சாலைகளில் ஆட்டம் போட்ட பவேரியா கொள்ளை கும்பலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தவர்.படத்தில் வரும் 75% உண்மையே.காதல் ஸ்டண்ட் காட்சிகளை தவிர.உண்மை சம்பவத்தை தத்ரூபமாகவும் விறுவிறுப்பாகவும் வழங்கிய இயக்குநருக்கு நன்றி.மேற்படி திறமையான அதிகாரி கடந்த 7 வருடங்களாக முக்கியத்துவம் இல்லாத இலாகாவில் பணியாற்றி வருகிறார்.

 • pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா

  இங்கு வரும் வட மாநிலத்தரை கொண்டு வரும் ஏஜெண்டுகள் முதல் அனைவரின் ஆதார் கார்டு மற்றும் சரியான முகவரியுடன் அந்த ஊர் போலீஸின் கடிதம் வேண்டும் இல்லையெனில் அவர்கள் வந்தவுடன் இங்கு போலீஸ் ஸ்டேஷனில் பந்த ஏஜென்ட் இவர்கள் பெயரை பாதி செய்ய வேண்டும். குற்றங்கள் குறையலாம். நமது போலீஸ் மாநிலம் மாநிலமாக ஓடுவது தீரமான செயல் அல்ல. குற்றங்களை முதலிலேயே தடுப்பது தமிழ்நாடு போலீசின் புத்திசாலித்தனம். இன்னும் ட்ரைனில் கோடி ரூபாய்களை கொள்ளை அடித்த கொள்ளையரை பிடிக்க முடியவில்லை. தீரன் மாநிலம் மாநிலமாக ஓடி என்ன பயன்? எத்தனை போலீசாருக்கு ஹிந்தி தெரியும்? தீரன் - நடைமுறைகளை மறைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

  • எவனோ - ,

   எந்த கால கட்டத்தில் படம் நகர்கிறது என்று படத்தை பார்த்தால் தான் புரியும், படத்தை ஆழமாக பார்த்துவிட்டு கருத்தை பகிறவும்.

 • பாஸ்கர்.சங்கராபுரம் -

  மிகவும் அருமையான படம்.

 • Sridaran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்தி நல்ல படம் கொடுத்து உள்ளார். படம் சூப்பர்.

 • JohnsonHenry -

  Every INDIAN CITIZEN, Especially POLICE DEPT & POLITICIAN should Watch this Movie.

 • JSK -

  ONE OF BEST COP MOVIES. THIS WILL BE A BEST FILM IN KARTHIS CARRER

 • prabhu - DINDIGUL,இந்தியா

  படம் ரொம்ப விறுவிறுப்பாக போகுது நல்ல தரமான படத்தில் இதுவும் ஒரு படமாகும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement