Advertisement

தங்கரதம்

என்டிசி மீடியா மற்றும் விகேர் புரடக்ஷ்ன் சி.எம்.வர்கீஸ் தயாரித்து வழங்க, புதியவர் பாலமுருகன் எழுத்து, இயக்கத்தில் வெற்றி - அதிதி கிருஷ்ணா ஜோடியுடன் சவுந்தர்ராஜா, ஆடுகளம் நரேன், நான் கடவுள்" ராஜேந்திரன், சுவாமிநாதன், சாண்டில்யா உள்ளிட்டோர் நடிக்க, புதிய களத்தில்

வந்திருக்கும் வழக்கமான காதல் படமே "தங்க ரதம்".

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்கெட்டிற்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து நீ முந்தி, நான் முந்தி என போட்டி போட்டுக் கொண்டு காய்கறிலோடு அடிக்கும் ஒரே ஊரைச் சேர்ந்த டெம்போ வேன் டிரைவர்கள் செல்வா - வெற்றியும், பரமன் - சவுந்தர்ராஜாவும். தொழில் போட்டியால் இருவருக்குள்ளும் பகை இருக்கிறது. பரமன் - சவுந்தர்ராஜாவின் தங்கை அதிதி கிருஷ்னாவை, செல்வா - வெற்றி, பரமனின் தங்கை அவர், என்பது தெரிவதற்கு முன்பு பார்த்த மாத்திரத்திலேயே காதலிக்கத் தொடங்குகிறார். அதிதியும், அடுத்த சில வாரங்களில் மாதங்களில்... காதலில் விழ, அந்த காதல் அதிதியின் அண்ணனின் எதிர்ப்பை தாண்டி, வளர்ந்து திருமணத்தில் முடிந்ததா? அல்லது, காதலன் மற்றும் அண்ணன் இடையே ஏற்பட்ட தொழில் போட்டியில் மாட்டி காணாமல் போனதா..? என்பது தான் தங்க ரதம் படத்தின் கதையும், களமும்!

தங்க ரதம் எனும் லோடு வேனின் டிரைவர் செல்வா கேரக்டருக்கு நாயகர் வெற்றி செம மேட்சிங். ஆனால், அவரது மலையாள வாடை வீசும் டயலாக் டெலிவரிதான் சற்றே படுத்தல். ஆனந்தி எனும் நாயகியின் பாத்திரப்பெயரை ஆன்டி, ஆண்டி.. என்பதும் கதைக்களமான ஒட்டன்சத்திரம் அருகிலேயே பழனி மலை இருப்பதும் கவனிக்கத்தக்கது.

அதேநேரம் தான் பார்த்த மாத்திரத்திலேயே தன் காதலியான அதிதி கிருஷ்ணா ஆசைப்பட்ட செம்பருத்தி பூவை, அதிதியால் தன் காதல் ஏற்றுக் கொள்ளப்படுவது வரை காத்திருந்து, பறித்து தருவதில் தொடங்கி, அதிதியின் அண்ணன் பரமனை முந்தி காய்கறி மார்கெட்டிற்கு முதல் ஆளாய் லோடு அடிப்பது வரை ஒவ்வொரு காட்சியிலும் செல்வா எனும் பாத்திரமாகவே வாழ்ந்திருப்பதில் சபாஷ் சொல்ல வைக்கிறார். பேஷ், பேஷ்!

ஆனந்தி எனும் கிராமத்து கதாநாயகி பாத்திரத்தில் ஏற்கனவே இரண்டொரு படங்களில் பார்த்து ரசித்த அதிதி கிருஷ்ணா ஈர்க்கிறார். காதலனுக்கும், அண்ணனுக்கும் இடையில் நடக்கும் தொழில் போட்டியில் சிக்கித்தவிக்கும் இளம் பெண்ணாக அம்மணி மிரட்டல்.

தங்கை மீது அன்பும், போட்டியாளன் மீது பொல்லாத கோபமும் கொண்ட கிட்டத்தட்ட கிராமத்து வில்லன் கேரக்டரில் சவுந்தர்ராஜா, பழநியில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் தன் தங்கையும், எதிராளி வெற்றியும் கதலர்களாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்ததும் காட்டும் முகபாவம் ஆகட்டும், அதற்காக அவரை கொல்லத் துணிந்து, ஆள் அம்புகளையும் தயார் செய்து விட்டு பின் வருந்துவதிலாகட்டும் அனைத்திலும் தான் ஒரு அனுபவ இளம் நடிகர் என்பதை மெய்பித்திருக்கிறார் மனிதர். கீப் இட் அப் சவுந்தர்.

நாயகரின் சித்தப்பா ஆடுகளம் நரேனின் நற்குணத்தை எடுத்துக் கூறும் தங்கரதத்தின் கிளினராக வரும் இளம் குணச்சித்திர நடிகர் சாண்டில்யா, பரமன் - சவுந்தரை தன் உடைந்த குரலால் அடிக்கடி செல்வாவிற்கு எதிராக உசுப்பி விடும், பரமனின் டெம்போ கிளி - வெள்ளப் புறா, ஹீரோவின் நேசக்கார, பாசக்கார சித்தப்பா ஆடுகளம் நரேன், தன் ஆசை மனைவி அடிக்கடி கேபிள் கனெக்ஷன் சரியில்லை... என டபுள் மீனிங்கில் கூறி டபாய்ப்பது ஏன்? எனப் புரியாது, தன் கரகர குரலில் யதார்த்தமாக பேசி காமநெடி கிச்சு கிச்சு மூட்டும் நான் கடவுள்" ராஜேந்திரன், டீக்கடை சுவாமிநாதன், ஆகியோர் அந்தந்த பாத்திரமாகவே மிகவும் யதார்த்தமான கிராமத்து மனிதர்களாக ரசிகனை கவருகின்றனர் .

சுரேஷ் அர்ஷின் படத்தொகுப்பு பலே தொகுப்பு. ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளின் கிராமிய எழில் கொஞ்சும் அழகு மிக ரசனை. அதிலும், பழநிமலை முருகன் சன்னிதானத்தை டாப் ஆங்கிலில் ஏரியல் வீயூவில் மிரட்டலாக காட்டி மிரட்டியிருப்பதில் தன் திறமையை பெரிதாக நிரூபித்திருக்கிறார் மனிதர்.

டோனி பிரிட்டோவின் இசையில் "அடி ஆத்தி புரியாத பனிக்கட்டி ஆனேனே..." எனத் தொடங்கித் தொடரும் பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் பின்னணி இசையிலும் பெரிய குறையில்லை... என்பது ஆறுதல்.

திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம்... எனும் தமிழ் சினிமாவிற்கு சற்றே புதிய களத்தில், யதார்த்தமான காதல் கதையை தர முயற்சித்திருக்கும் இயக்குநர் பாலமுருகன் தனது எழுத்து , இயக்கத்தில் ., ஒட்டன்சததிரம் காய்கறி மார்கெட் , டெம்போ வேன் ஓட்டுநர்களின் தொழில் போட்டி , பகையை உறவாடி கெடுக்கும், மறக்கும்.... கிராமத்து பெரிய மனிதர்களின் புத்திசாலித்தனம் ஆகியவற்றை அழகாக படம் பிடித்து வந்திருக்கிறார். அதேநேரம், ஒரு சின்ன பிரச்சினைக்காக நாயகரின் சித்தப்பா, நாயகரின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வாங்கி வைத்துக் கொண்டு அவரை திண்டுக்கல்லில் ஒரு பத்து நாள் தங்க சொல்லி அனுப்பி வைப்பதும், அந்தசமயத்தில், அந்த பிரச்சினையில் இருந்து நாயகரை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக நாயகரின் காதலியை அவரது காதலி எனத் தெரியாது தன் மகனுக்கு பேசி முடிப்பதும் உள்ளிட்ட ஹம்பக் காட்சிகளும், க்ளைமாக்ஸில் ரசிகர்களிடம் சிம்பதி உருவாக்க வேண்டும் என்பதற்காகவே வலிய நாயகரை தீர்த்து கட்டுவது... உள்ளிட்ட டிராமாடிக், சினிமாடிக் சீன்கள் இப்படத்தின் பெரும் பலவீனங்கள்!

ஆக மொத்தத்தில், மேற்படி குறைகளை, சற்றே, களைந்திருந்தால் "தங்க ரதம் மேலும், ஜொலித்திருக்கும்... காதல் ரதம் ஆக ரசிகனை கவர்ந்திழுத்திருக்கும்!!"

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement