Advertisement

வீரையன்

நடிப்பு - இனிகோ பிரபாகர், ஷைனி, ஆடுகளம் நரேன், வேலராமமூர்த்தி
தயாரிப்பு - பாரா சரா பிலிம்ஸ்
இயக்கம் - எஸ். பரீத்
இசை - எஸ்.என்.அருணகிரி

தமிழ் சினிமாவில் கிராமத்துக் கதைகள் அதிகம் வருவதில்லை, அப்படியே வரும் ஒரு சில கதைகளும் மனதைத் தொடுவதில்லை. கடந்த சில வருடங்களில் வந்த படங்களில் 'சுப்பிரமணியபுரம், களவாணி' போன்ற படங்களைப் போல நம்மை பெரிதாகக் கவர்ந்த படங்கள் அதிகமில்லை.

பலரும் யதார்த்தமான கிராமத்துக் கதைகளைக் கொடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் அதை நிறைவாகக் கொடுக்க முடியவில்லை. இந்த 'வீரையன்' படத்திலும் எடுத்துக் கொண்ட கதை மனதைத் தொடும் அளவிற்கு இருந்தாலும் திரைக்கதையில் அதை கொண்டு வந்திருப்பதில் மையக் கதையிலிருந்து விலகிவிட்டார்கள்.

தஞ்சாவூரில் 1989ல் நடக்கும் கதை. இனிகோ பிரபாகர், கயல் வின்சென்ட், திருநங்கை ப்ரீத்திஷா ஆகிய மூவரும் அனாதைகள். அவ்வப்போது சிறு திருட்டுக்களைச் செய்து கொண்டு, பாழடைந்த மண்டபத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். கவுன்சிலர் வேலராமமூர்த்தியின் மகள், அவர்கள் வீட்டு டிரைவரைக் காதலிக்கிறார். இருவரும் வீட்டை விட்டு ஓடிப் போக முயல அதை இனிகோ பிரபாகர் கூட்டணியால் தடைபடுகிறது.

அந்த சமயத்தில் அதில் தேவையில்லாமல் வந்து சிக்குகிறார் மூட்டை தூக்கும் தொழிலாளியான ஆடுகளம் நரேனின் பிளஸ் 2 படிக்கும் மகன். தன் மகளை ஆடுகளம் நரேனின் மகன் தான் காதலிக்கிறார் என நினைத்து அந்தப் பையனை பள்ளியை விட்டே அனுப்ப வைக்கிறார் கவுன்சிலர் வேலராமமூர்த்தி. படித்து மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வர வேண்டும் என நினைக்கும் நரேனின் மகன், தன் நிலைமையை இனிகோ பிரபாகரிடம் சொல்கிறான். அதன் பின் நடக்கும் பல திருப்புமுனையான சம்பவங்கள்தான் படத்தின் மீதிக் கதை.

ஒரே படத்தில் பல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் ஆரம்பத்திலிருந்தே படம் தடுமாறுகிறது. இடைவேளைக்குப் பின்னர் தான் திரைக்கதையில் அழுத்தம் இருக்கிறது. இனிகோ பிரபாகர் மற்றும் அவரது நண்பர்கள், இனிகோவைக் காதலிக்கும் ஷைனி, மகன் படிக்க வேண்டும் என நினைக்கும் நரேன், அப்பாவுக்குத் தெரியாமல் எப்படியாவது படித்துவிட வேண்டும் என நினைக்கும் மகன், கௌரவம், சாதியைப் பெரிதாக நினைக்கும் வேலராமமூர்த்தி, இவரது மகளைக் காதலித்து கஷ்டங்களை அனுபவிக்கும் டிரைவர் என பலரது வாழ்க்கையை ஒரே படத்தில் எப்படி சொல்லிவிட முடியும். முடிந்தவரை சமாளித்திருக்கிறார் இயக்குனர் பரீத்.

அருணகிரியின் இசையில் கிராமிய மணம் வீசும் பாடல்கள் இருந்தாலும் மனதில் பதியவில்லை. கதை நடக்கும் இடத்தையும் பின்னணியையும் பார்க்கும் போது அது கிராமம் மாதிரி இருக்கிறது. ஒரு மார்க்கெட், ஒரு பாழடைந்த மண்டபம், இரண்டு தெருக்கள், மூன்று வீடு ஆகியவற்றுக்குள் படத்தை முடித்துவிட்டார்கள்.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், அதற்கான நட்சத்திரத் தேர்வுகளும், அவர்களது யதார்த்தமான நடிப்பும் தான் படத்திற்கு பிளஸ் பாயின்ட். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஒரு நிறைவான கிராமத்துக் கதையைப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும். கிளைமாக்சில் மட்டும் மனதைத் தொட வைத்திருக்கிறார் இயக்குனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement