Advertisement

ரூபாய்

சமூக அக்கறையுடன் "சாட்டை" படம் இயக்கிய, எம்.அன்பழகன் இயக்கத்தில், "கயல்" சந்திரன் - ஆனந்தி ஜோடி சேர்ந்து நடிக்க, பிரபு சாலமனின் காட் பிக்சர்ஸ் & ஆர்.பி.கே எண்டர்டைமன்ட் இணைந்து தயாரித்து, வழங்க, சமீபத்திய ரூபாய் நோட்டு மாற்றல் விவகார கால கட்டத்தில் கருவாகி, உருவாகி, அது பற்றி ஏதேதோ பேச வந்து, கடைசி வரை அதைப் பற்றி பேசாது, வழக்கமான கதையம்சத்துடன் சாதாரணமாக வந்திருக்கும் படம் தான் "ரூபாய்".

தேனியில் இருந்து லோடு ஏற்றிக் கொண்டு கோயம்பேடு மார்கெட்டில் வந்து இறக்குகின்றனர் ஒரு மினி லாரியின் ஓனர் கம் டிரைவர் கம் கிளீனர் ஆன நாயகர் பரணி - சந்திரனும், அவரது நண்பர் பாபு - கிஷோர் ரவிச்சந்திரனும். அவர்களது லாரி பைனான்ஸியருக்கு ஒரு ட்யூ வாவது கட்ட மறுநாள் காலை பதினெட்டாயிரம் ரூபாய் தேவை... எனும் நிலையில்., பதினைந்தாயிரமே அந்த லோடு அடித்ததற்கான கூலியாக கிடைக்கிறது. அதனால் வேறு ஏதாவது லோக்கல் ட்ரிப் கிடைக்கிறதா? எனப் பார்க்கும் அவர்கள் வசம் வயதான ஏரியாவே பதறும் அதிர்ஷ்டக் கட்டை-யான குங்கும ராஜன் சின்னி ஜெயந்த் சிக்குகிறார். கடன் தொல்லையால் உடனடியாக வீடு மாற்ற நினைத்து வாடகைக்கு கம்மி காசில் மினி லாரி பிடிக்க மார்கெட்டுக்கு வரும் சின்னி வசம் இவர்களும் சிக்குகிறார்கள்.

இரண்டாயிரம் கூலிக்கு அவரது வீட்டு பொருட்களை பழைய வீட்டிலிருந்து பக்கத்து ஏரியாவில் அவர் புரோக்கர் வாயிலாக பார்த்திருக்கும் புதிய வீட்டிற்கு கொண்டு சென்று சேர்க்க போகும் அவர்கள், ஏதேதோ காரணங்களால் சின்னி பார்த்த வீடும் அடுத்தடுத்து பார்க்கும் வீடுகளும் செட் ஆகாததால் அன்று நாள் முழுக்க அவர் கூடவும், அவர் வீட்டு பொருட்கள் கூடவும் இவர்களும் அலைய வேண்டிய இக்கட்டான சூழல்.

இச்சூழலில், அவர்கள் உடன் வரும் பெரியவர் சின்னியின் மகள் பொன்னி - ஆனந்தியுடன், பரணி - சந்திரனுக்கு காதல் கசிந்துருகுகிறது. அதனால் அக்குடும்பத்திற்கு ஒரு நல்ல வீடு பார்த்து வைத்து விட்டு தான் கிளம்புவேன் என பிடிவாதமாக இருக்கிறார் சந்திரன்.

இந்நிலையில் ஒரு வங்கியின் வாட்ச்மேனை கொன்று லாக்கரை உடைத்து பல கோடி புதிய பணத்தைக் கொள்ளை அடித்துக் கிளம்பும் மணி ஷர்மா - ஹரீஷ் உத்தமன், போலீஸ் செக்போஸ்டீல் இவர்கள் லாரியில் அப்பணத்தை தூக்கி போட்டுவிட்டு லாரியின் நம்பரை குறித்துக் கொண்டு இவர்களை தேடுகிறார். அவரை போலீஸ் வலைவீசித் தேடுகிறது. இச்சூழலில் அந்தப் பணம் இவர்கள் கையில் கிடைத்ததா? இவர்கள் ஹரீஷின் கையில் கிடைத்தனரா..? ஹரீஷ் போலீஸின் கையில் சிக்கினாரா...? என்பதைதிக் திக், திக் திருப்பங்களுடன் சொல்ல முயன்றிருக்கிறது "ரூபாய்" படத்தின் மீதிக் கதையும், களமும்!

பரணியாக லாரி கிளீனர் கம் ஒனராக வரும் சந்திரன், ஒரு சாதாரண ரசிகரைப் போன்று பொன்னி - ஆனந்தியை கயல் படத்தில் பார்த்ததையும்மறந்து, வைத்த கண் வாங்காமல் சுற்றியுள்ள பிரச்சினைகளைப் பற்றி பார்த்துக் கொண்டே திரிவது அவ்வளவு யதார்த்தமாக இல்லை என்பது பலவீனம். இது தான் நடிப்பென்று அவர் நம்பியிருப்பது அய்யோ பாவம்!
அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படும் அப்பா சின்னியை அதட்டும் பொன்னியாக ஆனந்தி, முக்கால்வாசி படம் முழுக்க அதிகம் மேக்-அப் இல்லை என்றாலும் சந்திரனை ஈர்த்த மாதிரியே படம் பார்க்கும் நம்மையும் ஈர்க்கிறார். "என் நெற்றியிலும் உன் பெயர் தான் எழுதியிருக்கு..." என தன் மீது மையல் கொண்ட சந்திரன் மீது மையல் கொள்ளும் அவருக்கு க்ளைமாக்ஸில் ஏற்படும் முடிவு அந்தோ பரிதாபம். பாவம்!

பாபுவாக கிட்டத்தட்ட மற்றொரு நாயகராக மினி லாரியின் ஓனர் கம் டிரைவராக வரும் புதுமுகம் கிஷோர் ரவிச்சந்திரன், சந்திரனுக்கும் சேர்த்து, ஆரம்பத்தில் சின்னி மீதும் அவரது வீடில்லா நிலைமீதும் காட்டும் எரிச்சல் எக்கச்சக்கம் என்றாலும் கதைக்கேற்ற நடிப்பென்பது ஆறுதல்.

பணம் பணம் என அலைந்து பை நிறைய பல கோடி பணம் பார்த்ததும் ஹார்ட் அட்டாக்கில் விழும் ஏரியாவின் அதிர்ஷ்டக் கட்டையான குங்கும ராஜன் சின்னி ஜெயந்த், தன் அனுபவ நடிப்பால் அசத்துகிறார். பிழைத்து எழுந்ததும், சாப்பிட நினைத்ததை சாப்பிட முடியாமல், "பணமும் சந்தோஷமும் பரம விரோதிங்கறது சரியா இருக்கு... எல்லாம் இருக்கு, ஆனா சாப்பிடமுடியல..." என அவர் அடிக்கும் வசனம், அவர் அவ்வப்போது அடித்து விட்ட வசனங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு நம் சிந்தையை தூண்டுகிறது. வாவ்!

கொலை கொள்ளைக்கு அஞ்சாத கொள்ளையன் மணி ஷர்மாவாக ஹரீஷ் உத்தமன் கச்சிதமாக கவருகிறார். தவறு செய்பவர்களுக்கான நிலையை அவர் பாத்திரத்தின் மூலம் இயக்குநர் சரியாக சொல்ல முயன்றிருப்பது பாராட்டிற்குரியது.

போலீஸ் அதிகாரி வில்லேந்தியா கவரும் ஆர்என்ஆர் மனோகரின் புலம்பல், சப்-இன்ஸ் குமரகுருவாக வரும் மாரிமுத்துவின் சவடாலும், சமாதானமும், சேட்டின் வண்டி தூக்கி இசக்கியாக வந்து ஐம்பதாயிரம் பணத்திற்கு ஆசைப்பட்டு அற்பத்தனமாய் உயிரை விடும் வெற்றிவேல் ராஜா, உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.

ஆர்.நிர்மலின் படத்தொகுப்பில் முன்பாதி சற்று இழுவை என்றாலும் பின்பாதி பெரும் பரபரப்பு.

வி.இளையராஜாவின் ஒளிப்பதிவு, தயாரிப்பாளரின் பட்ஜெட்டிற்குள் பளிச்சிட முயற்சித்திருக்கிறது பாராட்டுக்கள்.

டி.இமானின் இசையில், "பாத்துக்கறேன் உன்ன நல்லா பாத்துக்கறேன்...", "உன் கூட பேசத்தானே...", "அசத்துதே..." , "டுக்கும்..." ஆகிய பாடல்கள் மெலடியிலும் அதிரடி. பின்னணி இசையும், இமானுக்கு "மைனா" பிரேக் தந்த இயக்குநர் பிரபு சாலமன், இப்படத் தயாரிப்பாளர்... என்பதால் அவரது குறைகள், குறைய இசைந்திருகிறது.

"சாட்டை" எம்.அன்பழகனின் எழுத்து, இயக்கத்தில் ஒரு சில லாஜிக் மீறல்களையும் தாண்டி, "நமக்கு உரிமை இல்லாத பிறர் பொருள் மீது ஆசைப்பட்டு, அவசரப்பட்டு அதை அனுபவிப்பது, பேராபத்தை உண்டாக்கும் எனும் நல்ல மெஸேஜை உள்ளடக்கி வந்திருக்கும் "ரூபாய் நம்ப முடியாத ஹம்பக் கதைக்களத்தில் பிரயாணித்திருப்பது தெரிகிறது... சற்றே, குறையாய்!"

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement